
டீ,காபி குடிப்பது நமது தினசரி வாழ்க்கையோடு கலந்து விட்டது என்று சொல்லலாம்.
டீ சிறந்ததா,காபி சிறந்ததா என்ற விவாதம் காலங்காலமாக இருந்துவருகிறது. உடல் ஆரோக்கியம் பற்றி டாக்டரிடம் சந்தேகம் கேட்கும்போது,டீ, காபி எத்தனை முறை குடிக்கலாம் என்ற கேள்வி நிச்சயம் இருக்கும்.டீ,காபியில் தற்போது நிறைய வகைகள் வந்துவிட்டன. அவற்றில் எது நல்லது,எது கெட்டது, எது சிறந்தது என்று ஏதேனும் உண்டா என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் காலை உணவாக கஞ்சியே வெகு காலமாக இருந்து வந்தது.வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு வந்த பிறகுதான் நமது தினசரி உணவுப் பழக்கங்கள் வெகுவாக மாறிவிட்டன.
தற்போது டீ,காபி இரண்டும் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்துவிட்ட பானங்கள். அடிப்படையில் இவற்றை நாம் எதற்காகக் குடிக்கிறோம் என்ற கேள்வி வருகிறது. முதல் மற்றும் முக்கியமான விஷயம்,அது தரும் புத்துணர்வு.Caffeine என்ற வேதிப்பொருளே அதற்குக் காரணம். டீயைவிட காபியில் Caffeine அளவு இரண்டு மூன்று மடங்கு அதிகம்.200 மில்லி காபி குடிக்கிறோம் என வைத்துக்கொள்வோம்.அதில் 80 மில்லி கிராம் வரை Caffeine நிறைந்திருக்கிறது. டீயில் 30-50 மில்லி கிராம் வரை கிடைக்கிறது.
டீ போடுகையில் எவ்வளவு நேரம் கொதிக்கவைக்கிறோம்,எவ்வளவு ஸ்ட்ராங்காகப் போடுகிறோம் என்பதைப் பொறுத்து அதன் அளவு மாறுபடும்.டீயில் Caffeine அளவு குறைவாக இருந்தாலும் L-theanine என்ற மற்றொரு பொருள் இருக்கிறது.டீயில் உள்ள Caffeine மெதுவாக ஜீரணமாகுமாறு இப்பொருள் பார்த்துக்கொள்ளும். எனவே, Caffeine அளவு குறைவாக இருப்பினும் அதன் தாக்கம் நீண்ட நேரம் இருக்கும்.காபி குடித்தால் புத்துணர்ச்சி உடனுக்குடன் வருவதும்,தேநீர் குடித்தால் மெதுவாக வருவதும் இதன் காரணமாகத்தான்.
இதுதவிர டீ,காபி இரண்டும் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மை நிறைந்து காணப்படுகின்றன. நார்மல் டீயைவிட கிரீன் டீயில்தான் இந்தத் தன்மை அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் பிளாக் காபியில்தான் ஆன்ட்டி-ஆக்சிடன்ட் பொருள்கள் அதிக அளவில் உள்ளன. அதாவது சாதா டீயைவிட கிரீன் டீயில் கிட்டத்தட்ட 1.5 மில்லி மோல் இருக்கிறது.இதே ஃபில்டர் காபியில் 2.5 மில்லி மோல் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மை இருக்கிறது
ஆனால் பிளாக் காபியில் சுமார் 14 மில்லி மோல் அளவில் இது நிறைந்திருக்கிறது. கிரீன் டீயைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம்.
காபி அதிகம் குடிப்போருக்கு சர்க்கரை நோய் ஏற்படும் தன்மை, மாரடைப்பு மற்றும் நரம்பியல் பிரச்னைகள், அல்ஸைமர்,சில வகை பெருங்குடல் கல்லீரல் புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு எனச் சொல்லப்படுகிறது. ஆனால் எந்த அளவுக்கு காபி குடித்தால் இந்தப் பலன்கள் கிட்டும் என்ற தெளிவான முடிவுகள் இல்லை.
அதேநேரத்தில், டீயிலும் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் நாம் தினந்தோறும் குடிக்கும் அளவில் இந்த நல்ல விஷயங்கள் கிடைக்குமா என்பதற்கான போதிய ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. பெரும்பாலான ஆராய்ச்சிகள் நடைபெறும் அமெரிக்காவில், காபி அதிகம் குடிக்கப்படுவதால் அதைப்பற்றியே அங்கு நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.டீ பற்றி ஆராய்ச்சிகள் அதிகமானால் அதில் உள்ள பல நல்ல குணங்கள் வெளிவரலாம்.
ஒரு நாளைக்கு 4-5 முறைக்கு மேல் காபி குடித்தாலோ அல்லது 8 முதல் 10 முறைக்கு மேல் டீ குடித்தாலோ, அதிலுள்ள Caffeine வேறு விதமான சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தூக்கமின்மை, படபடப்பு,இதயத் துடிப்பு அதிகமாவது தொடங்கி வாந்தி பேதி ஏற்படுவது அதிகரிக்கலாம். வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு அதைத் தூண்டிவிடவும் வாய்ப்பிருக்கிறது. எனவே,அளவுக்கு அதிகமான டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது.நாள் ஒன்றுக்கு 2 கப் குடிப்பதில் எந்தக் கெடுதலுமில்லை. அதேநேரத்தில், இதைக் குடித்தால் புற்றுநோய் ஏற்படாது என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டுச் சொல்லப்படுபவை. தற்போது டீ,காபி தன்மையில்லாத Peppermint tea, Chamomile tea போன்ற வேறு மூலிகை இலைகளில் தயாரிக்கப்படுவை கிடைக்கின்றன.
ஆனால், இவற்றுக்குப் புத்துணர்வு தரும் தன்மை இல்லை என்பதே உண்மை.டீ, காபி விரும்புவோர் அவற்றை மிதமான அளவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் – புத்துணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டும்.மற்றபடி பெரிய மருத்துவப் பலன்களை எதிர்பார்த்து டீ காபி அருந்தத் தேவையில்லை

