
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry)
நமக்குத் தோன்றும் எண்ணங்களை நீங்கள் எப்போதாவது நிதானமாகக் கவனித்தது உண்டா?
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. அத்தனை எண்ணங்களையும் நாம் மிகவும் சுலபமாகக் கடந்து சென்றுவிடுகிறோம்.
நமக்கு வரக்கூடிய எண்ணங்களை எல்லாம் பகுப்பாய்வு செய்தால்,நாம் யார் என்று தெரிந்துவிடும் என சொல்வதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கிறது?
எப்போதாவது நிதானமாக அப்படி என்னதான் நமக்கு எண்ணங்கள் வருகிறது என்று ஒரு நிமிடம்,ஒரேயொரு நிமிடம் நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும். அத்தனை எண்ணங்கள்…நடந்து முடிந்த,நடக்கப் போகிற,நடந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் நினைக்கிற,இல்லை நடக்கவே நடக்காத என ஏராளமான எண்ணங்கள் நமக்குள் ஒரு நிமிடத்தில் தோன்றி மறைகிறது.
”நாம் சிந்திக்கிறோம். அதனால்தான் நாம் இருக்கிறோம்” ( think therefore i am) என்கிறார் டெஸ்கார்டிஸ்.
இந்த எண்ணங்கள்தான் நமது மனதின் அடையாளம். எண்ணங்கள் எதுவும் நமக்குத் தோன்றவில்லையென்றால் நமது மனம் வேலை செய்யவில்லை என்று பொருள்.நாம் தூங்கினால்கூட மனம் தூங்குவதில்லை. அப்போதும் நமக்குள் எண்ணங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கும்.நாம் அதனை ஒரு கனவாகக் கண்டு கொண்டிருப்போம்.
“அவ மனசுல என்னதான் டாக்டர் இருக்குது?”
“இன்னொருத்தர் மனசுல தோன்றும் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முடியுமா டாக்டர்?”
இதுபோன்ற கேள்விகளை நான் பல தருணங்களில் கடந்து வந்திருக்கிறேன்.
அடுத்தவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் இருக்கட்டும்,
நம் மனதில் நாம் என்ன நினைக்கிறோம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு காதல் ஜோடி என்னைப் பார்க்க ஒரு நாள் வந்தார்கள். “சார்,நாங்க ஆறு மாதமா லவ் பண்றோம்.இப்போ பிரிந்து விடலாம்னு இருக்கோம் சார்” என்றாள் அந்த பெண்.
“சரி.அதுக்கு நான் எண்ண பண்ணனும்?”
“எனக்கு ஒண்ணும் இல்ல சார். இவனுக்குத்தான் என்னை மறக்க முடியாதாம். எப்படியாவது அவனது மனதில் இருந்து என் நினைவுகளை அகற்றி விடுங்கள் சார்” என்றாள்.
நான் ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன். அந்தப் பையனைப் பார்த்துக் கேட்டேன்: “என்னப்பா அமைதியாவே இருக்க.நீ சொல்லு உனக்கு என்ன பிரச்சினை” என்றேன்.
அவன் கடகடவென அழத் தொடங்கினான்.
“டாக்டர்,இவ இல்லாம என்னால இருக்க முடியாது டாக்டர்.என் மனசு முழுக்க இவதான் இருக்கா. இவளப்பத்தியே எந்த நேரமும் யோசிச்சிட்டு இருக்கேன்.திடீர்னு இவ இல்லனா என் மனசு தாங்காது டாக்டர்” என்றான்.
இவர்கள் இரண்டு பேரும் சொன்னதில் இரண்டு விஷயங்களை எடுத்துப் பார்ப்போம். முதலாவது அந்தப் பெண் சொன்னது “இவன் மனதில் இருந்து என் நினைவுகளை அகற்றி விடுங்கள் டாக்டர்.”
ஒருவர் மனதிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணங்களை அது சார்ந்த நினைவுகளை அகற்றிவிட முடியுமா?
மனம் ஒரு ஊற்றுபோல. ஏராளமான எண்ணங்கள் அதிலிருந்து எப்போதும் சுரந்துகொண்டிருக்கின்றது.அப்படி உருவாகும் அத்தனை எண்ணங்களுக்கும் நாம் கவனம் தருவதில்லை.நாம் கவனம் தராத எண்ணங்கள் அத்தனையும் சில நொடிகளிலேயே நமது மனதின் பரப்பிலிருந்து தானாகவே வெளியேறி விடுகிறது.
நமது அப்போதைய உணர்வுகள் சார்ந்து, தேவைகள் சார்ந்து சில எண்ணங்களை மட்டும் நாம் கவனிக்கத் தொடங்குகிறோம். அப்படி கவனம்பெறும் எண்ணமானது மென்மேலும் அது தொடர்பான பல எண்ணங்களை,ஒரு சங்கிலித் தொடர்போல உருவாக்குகிறது. அது ஒரு சுழல்போல நம்மை அதனுள் இழுத்துச் செல்லத் தொடங்குகிறது.
அந்தச் சுழலில் நாம் மாட்டிக்கொண்டிருக்கும்வரை,அந்தக் குறிப்பிட்ட எண்ண ஓட்டம் மட்டுமே நமது முழு மனதையும் ஆக்ரமித்துக்கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு, நாம் ஒரு பைக்கில் செல்கிறோம். ஏதாவது யோசித்துக்கொண்டே செல்கிறோம். என்ன யோசித்துக்
கொண்டிருந்தோம் என நிறுத்தி யோசித்துப் பார்த்தால்,தெரியாத அளவுக்கு ஏதேதோ எண்ணங்கள் நமக்குள் நிரம்பியிருக்கும். அத்தனையும் தேவையில்லாத எண்ணங்கள்.நாம் எதற்கும் கவனம் தருவதில்லை.
திடீரென அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறோம்.அந்தப் பெண் தொடர்பாக சில எண்ணங்கள் நமக்கு வருகிறது. நாம் அதற்குக் கவனம் கொடுக்கத் தொடங்குகிறோம். இப்போது நமது எண்ண ஓட்டம் முழுதும் அந்தப் பெண்தான் இருக்கிறாள். தண்ணி லாரி அடிக்கும் ஹாரன்கூட நம் காதில் விழுவதில்லை.அந்த அளவுக்கு அந்தப் பெண் நம் மனம் முழுமையும் ஆக்ரமிப்பு செய்து விடுகிறாள்.
நாம் போகும் இடம் வந்துவிடுகிறது. அங்கு நமக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி இருக்கிறது. மேலதிகாரி கூப்பிட்டு “சார் உங்க சேவை எங்க கம்பெனிக்குப் போதும்.இதோட நீங்க வீட்டுக்குப் போலாம்” என்கிறார்.
இப்போது பொங்கி வரும் வேறுவிதமான எண்ண ஓட்டத்தில், அந்தப் பெண் அடித்துச் சென்று எங்கோ வீசப்படுகிறாள். திரும்ப ஒருமுறை பார்த்தால்கூட அவளை யார் என்று நமக்குத் தெரியாது.
நமது மனதிலிருந்து எந்த ஒரு எண்ணங்களையும் நம்மால் அழிக்க முடியாது.அப்படி அழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நமது தோல்விகள், அவமானங்கள், துரோகங்கள், வாதைகள் என எல்லாவற்றையும் அழித்துவிடலாம். ஆனால்,நம்மால் அவற்றை அழிக்க முடியாது.
இன்னும் சொல்லப்போனால், நாம் அழிக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என நினைக்கும் எண்ணங்கள்தான் இன்னும் வலிமையாக சேர் போட்டு நமக்குள் அமர்ந்துகொள்ளும்.
“அவளப்பத்தியே நினைக்கக் கூடாதுடா” என நீங்கள் நினைத்தால், இன்னும் நீங்கள் அவளைப் பத்திதான் நினைத்துக் கொண்டு உள்ளீர்கள் என்று பொருள்.
மாறாக,அந்தக் குறிப்பிட்ட எண்ணத்திற்கு நாம் கொடுக்கும் கவனத்தை, முக்கியத்துவத்தை நிறுத்துவதன் மூலமாக நாளடைவில் அந்த எண்ணத்தை நமது மனதிலிருந்து அகற்றிவிடலாம். முக்கியத்துவம் அற்ற எந்த எண்ணமும் மனதில் இருந்து அதுவாகவே அழிந்துவிடும்.
“சார்,இவர் என் கணவர்தான். எப்போது பார்த்தாலும் குடி. அவருக்கே தெரியாமல் ஏதாவது மருந்து கொடுத்துக் குடிக்கிற எண்ணத்தையே அவர் மனசுல இருந்து எடுத்துருங்க டாக்டர்” என்று ஒரு பெண் டி.வி.யில் ஒருவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த டாக்டரும் (அவர் டாக்டரா?) தனது மருந்தை, குடிக்கும்
எண்ணத்தை அழிக்கும் மருந்து என விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தார்.
எண்ணத்தை அழிப்பதற்கு என்று எந்த ஒரு மருந்தும் இல்லை.அப்படி இருந்தால் குடிக்கும் எண்ணத்தை மட்டும் ஏன் அழிக்க வேண்டும்? நமக்கு தேவையில்லாத அத்தனை எண்ணங்களையும் அழித்து விடலாமே!
எண்ணங்களை அழிக்க வேண்டுமானால் அதற்கு நாம் முதலில் நம் மனதைத்தான் அழிக்க வேண்டும்.
நமது எண்ணங்கள்தான் நம் அறிவு.
மனம் ஒரு கூகுள்போல,நாம் ஏதாவது ஒரு பிரச்சினையில் இருக்கும்போது அதற்கான தீர்வு என ஆயிரம் விதமான எண்ணங்களை அது நமக்குக் காட்டும். அதிலிருந்து எந்தத் தீர்வைத் தேர்ந் தெடுப்பது என்பதே ஒரு குழப்பமானதாக இருக்கும்.
எவ்வளவு வேகமாக நமது எண்ண ஓட்டம் இருக்கிறதோ அவ்வளவு சிறப்பாக நம்மால் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும்.
ஒரு ஆப்பிள் கீழே விழும்போது,அது ஏன் விழுகிறது என்ற
எண்ணம்தான் இயற்பியலின் அத்தனை விதிகளுக்கும் அடிப்படை.அது நியூட்டனின் கவனத்தைப் பெறாமல் விட்டிருந்தால்,அது ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் இருந்திருக்க முடியும்.
நமது எண்ணங்கள் அத்தனை வலிமையானது. மனதின் குரல் என்பது ஒருவருக்குத் தோன்றும் எண்ணங்கள்தான்.
திரும்பவும் டெஸ்கார்டிஸின் இந்தக் கூற்றைப் படித்துப் பாருங்கள். நான் சிந்திக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன்.

