ந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்பதை கவனிக்க வேண்டும்.உடல் நலத்திற்கு பாதுகாப்பானது எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பக்கத்து மாநிலமான கேரளத்தில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு பரவலாக இருக்கிறது.ஆனால், தமிழ்நாட்டிலோ தேங்காய் எண்ணெய் என்றாலே அது தலைக்குத் தேய்க்கப்படும் எண்ணெய் என்கிற அளவில் சுருங்கிவிடுகிறது. இதைச் சமையலுக்குப் பயன்படுத்துவதில் பலருக்கு அச்சம் இருக்கிறது.இது ஒரு தவறான புரிதல். நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டல்லவா?இது தேங்காய் எண்ணெய்க்குப் பெரிதும் பொருந்தும். தேங்காய் எண்ணெயில் SFA 86% உள்ளது என்பது உண்மைதான்.

இது நம் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் கொஞ்சமாக அதிகப்படுத்தும் என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான். அதேநேரம்,இது நல்ல கொலஸ்டிராலையும் அதிகப்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது.மேலும், நாம் அதிகம் பயப்படும் டிரைகிளிசரைடு கொலஸ்டிராலைக் குறைக்கிற குணமும் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

இதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை.இன்னொரு முக்கிய ஆரோக்கிய தகவல்,இதில் இருக்கிற லாரிக் அமிலம் (Lauric acid). இது ஒரு கிருமிக் கொல்லி.தேங்காய் எண்ணெயில்தான் தாய்ப்பாலுக்கு நிகராக லாரிக் அமிலம் இருக்கிறது.

அடுத்ததாக,நடுத்தர வகை டிரைகிளிசரைடு கொலஸ்டிரால் (Medium Chain Triglycerides – MCT) இதில் மிக அதிகம். இதன் முக்கியத்துவம் என்ன?இதைச் செரிமானம் செய்ய கல்லீரலின் உதவி தேவையில்லை. நேரடியாகவே குடலில் உறிஞ்சப்பட்டுவிடும். உடலுக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும். கல்லீரலுக்கு வேலை மிச்சம்.இவ்வளவு நன்மைகளைத் தரும் தேங்காய் எண்ணெயை ‘இது கெட்ட கொலஸ்டிராலைக் கொஞ்சம் உயர்த்துகிறது என்கிற காரணத்துக்காக ஒதுக்குவது நியாயமில்லை.

மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதைதான் இது.நம் பாரம்பரிய எண்ணெய் வகைகளை ஓரங்கட்ட சந்தை அரசியல் செய்த சதி இது.மேலும், தேங்காய் எண்ணெயைப் பிரதானமாகப் பயன்படுத்தும் கேரள மக்களிடமே ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அந்த ஆராய்ச்சியில், ‘தேங்காய் எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்துவதால் மாரடைப்புக்கான சாத்தியம் அதிகரிப்பதில்லை’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே,தேங்காய் எண்ணெய் நமக்கு வில்லன் இல்லை. இதை அளவோடு பயன்படுத்தினால் ஆபத்து இல்லை.

இதயம் வருத்தப்படும்!

அறிவியல்முறைப்படி சொன்னால், இன்று புழக்கத்தில் இருக்கிற எண்ணெய் வகைகளில் ‘சிறந்த சமையல் எண்ணெய்’ என்று எதையும் கைகாட்ட முடியாது.அதிகம் சூடுபடுத்தாத, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய் இந்த இரண்டையும் வாரம் ஒன்று வீதம் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதுதான் சிறந்த வழி.விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய்,தவிட்டு எண்ணெய், சனோலா எண்ணெய், பாமாயில் ஆகியவற்றைத் தவிர்க்கப் பாருங்கள்.ஒரே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் சூடுபடுத்திப் பயன்படுத்த வேண்டாம்.எந்த எண்ணெயாக இருந்தாலும்,ஒரு நபருக்குத் தினமும் 15 -20 மி.லி.வீதம் மாதம் அரை லிட்டர் எண்ணெய் போதும். எண்ணெயில் வறுப்பதையும் பொரிப்பதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வறுக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் இதயம் வருத்தப்படும்.