ணையதளங்கள்(இன்டர்நெட்) தரும் வசதிகள், வாய்ப்புகள் ஏராளம். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு,எல்லா வேலைகளையும் செய்யலாம்.வங்கிக்கு போக வேண்டாம்;பணம் கட்ட அலைய வேண்டாம்; டிக்கட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டாம்.நிச்சயமாக உபயோகமானது தான். ஆனால், இணையப் பயன்பாடு நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை ஆபத்து இல்லை.

ஆம், இணையப் பயன்பாடு எப்போதும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.அழகான, ரம்யமான நதியில் குளிப்பது எப்போதுமே ஆனந்தம் தான்;அதன் புதைக்குழிக்குள் மாட்டிக் கொள்ளாத வரை.

இணையத்தில் தேவையான ஒன்றை தேடுகிறோம்… தேவையில்லாத ஆயிரம் வந்து நமது கவனத்தை சிதறடிக்கும்.உலகத்தில் உள்ள அத்தனை நல்ல விஷயங்களையும் நொடியில் வந்து கொட்டும்.கூடவே ஆபத்தான,அசிங்கமான அத்தனை கெட்ட விஷயங்களையும் கொடுத்து நம்மை ஈர்த்துக் கொள்ளும்(கொல்லும்).

நல்லதை எடுத்துக் கொண்டு,கெட்டதை ஒதுக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

ஆடாமல்,அசையாமல் நம்மை உட்கார வைத்து நமது நேரத்தை வீணடிக்கும்.நமது வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் .மனநலத்தை கெடுக்கும்.

சூதாட்டம், குதிரை பந்தயம்,மது,கஞ்சா போதை மாதிரி நம்மை அடிமை ஆக்கும்.6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை அனைவரையுமே புதைக்குழிக்குள் சிக்க வைக்கும்.

இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த பயிற்சியும், முயற்சியும் தேவைப்படுகிறது.நமது உணர்ச்சிகளின் வடிகாலாக உபயோகப்படுத்த தொடங்கும் போது தான் நாம் அங்கே சிக்க வைக்கப்படுகிறோம்.

முடிந்தவரை இணையத்தை மிக குறைவாக பயன்படுத்த வேண்டும்.போதையாக மாறுவதை தவிர்க்க வேண்டும்.இணையம் எப்போதும் கூரிய பற்களுடன் தனது இரையை தேடிக் கொண்டே இருக்கிறது.நாம் தான் அதை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இல்லையென்றால் அதன் கோரப் பசிக்கு,நாம் ஒருநாள் நம்மை இழக்க வேண்டி வரலாம்.

உடல் நலத்தையும் மன‌ நலத்தையும் காக்க, எல்லோரும் இணைந்து விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்க வேண்டும்.தேவைப்பட்டால் தயங்காமல் மனநல மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.

-அன்புடன்
டாக்டர்.ஜி.ராஜமோகன்.