-டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம்,
சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை

நோய் என்றாலே அச்சம் தரும் விஷயம் தான்.அதிலும் புற்றுநோய் என்றாலோ அதிர்ச்சி அடைகிறோம். மரணம் நெருங்கிவிட்டது என்று நடுக்கம் ஏற்படுகிறது. புற்றுநோய் தாக்கத்தில் அவதிப்படுபவர்கள் மன்றாடி கேட்பது … “மரணம் வேண்டும், மரண வலி வேண்டாம்”!

மனித இனத்தை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலும்,நவீன மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியால் அவற்றை எதிர்கொண்டு வருகிறது மனித சமூகம்.

புற்றுநோய் வந்து விட்டால் உயிர் பிழைக்க முடியுமா? நம்மால் நவீன சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள முடியுமா? என்று மனம் கலங்க வேண்டாம்.புற்று நோய்க்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை உள்ளூரில் தருகிறோம்… அதுவும் கண்ணியமான முறையில், பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் உதவுகிறோம் என்கிறார்கள்…

சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை, (புற்றுநோய் மற்றும் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை) சென்னை, மேடவாக்கம் அருகில் கௌரிவாக்கத்தில் அமைந்துள்ளது.100 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையை சிருங்கேரி மடமும் எக்விடாஸ் வங்கியும் இணைந்து,இலாப நோக்கம் இல்லாமல், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடும், கருணை உள்ளத்தோடும் நடத்துகிறார்கள்.

இந்த மருத்துவமனையின் மெடிக்கல் டைரக்டர் டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதத்தை சந்தித்து பேசினோம்.

**எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வந்து விட்டது என்று பலரும் மனம் வெதும்பி பேசுவதை கேட்க முடிகிறது… புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கிறதா டாக்டர்?

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வரலாம்.புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவது, அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் போன்றவற்றால் புற்றுநோய் வரலாம்.

மரபணு காரணமாகவும் வரலாம்.மரபணு மூலப் பொருளான டி.என்.ஏ.வில் ஏற்படும் மியூடேசன் எனப்படும் ஒரு வகை வேதியியல் மாற்றங்களாலும் புற்றுநோய் வரலாம்.எனவே எந்த வித கெட்ட பழக்கங்கள் இல்லாவிட்டாலும் புற்றுநோய் நோய்கள் வரலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

**ஆண்களுக்கான புற்றுநோய் பற்றி விரிவாக சொல்லுங்கள் டாக்டர்?

இந்தியாவில் ஆண்களை அதிக அளவில் பாதிக்கக்கூடியதாக மூன்று வகை புற்றவகை நோய்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. புகைப்பிடிக்கும் பழக்கம்,புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய் புற்று நோய்,நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாயில் வலி இல்லாத புண் நீண்ட நாட்களுக்கு இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். கூரான பல் வருடக் கணக்கில் வாயில் குத்திக் கொண்டிருந்தாலும் அது புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.ஆண்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகளும் இருக்கின்றன.

**பெண்களுக்கான பாதிப்பு பற்றி சொல்லுங்கள் டாக்டர்?

இந்தியாவில் பெண்களுக்கு பெருமளவில் வரக்கூடிய மூன்று புற்றுநோய்கள் கவனம் பெறுகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் மற்றும் சினைப்பை புற்றுநோய் பாதிப்புகள் உள்ளன.

உடல் பருமன், தாய்ப்பால் குறைவாக கொடுப்பது, பாரம்பரியமாக வரக்கூடிய மரபணுக்கோளாறு உட்பட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு ஹியூமன் பாபிலோமா வைரஸ் தான் முக்கிய காரணமாகும். இதற்கு 9 முதல் 14 வயதுக்குள் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மத்திய,மாநில அரசுகள் இதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருப்பது பாராட்டுக்குரியது.

** மார்பக புற்றுநோயை தடுக்க முடியாதா?

பெண்கள் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில், பத்து நிமிடங்களுக்கு சுயமாக மார்பகத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.கட்டிகள் ஏதேனும் தென்பட்டால் காலதாமதம் இல்லாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். தேவைப்பட்டால் மேமோகிராம் டெஸ்ட் எடுப்பது முக்கியம்.

மார்பகங்களில் கட்டி இருந்தாலே அது புற்றுநோய் தான் என்று அஞ்சத் தேவையில்லை. பரிசோதனை செய்து தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து மீள்வது மிகவும் எளிது.உடலில் மற்ற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

**புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்னென்ன டாக்டர்?

ஏறத்தாழ 200 வகையான புற்றுநோய்கள் உள்ளன.ஒவ்வொரு பாதிப்புக்கும் வெவ்வேறு வகையான அறிகுறிகள் உள்ளன. பொதுவான விழிப்புணர்வுக்காக சிலவற்றை குறிப்பிடலாம்.

#உடலில் எந்த இடத்திலாவது இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் கட்டிகள் இருக்கின்றனவா?

#எங்கேயாவது சந்தேகப்படும்படியாகரத்தக் கசிவு இருக்கிறதா?

#உணவு சாப்பிடும் போது முழுங்குவதில் சிரமம் இருக்கிறதா?

#மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மாறி மாறி வருகிறதா?

#உடலில் நெறிக் கட்டி உள்ளதா?

#நினைவிழப்பு அடிக்கடி வருகிறதா?

#உடலில் ஏதாவது கட்டிகள் வேகமாக பெரிதாகிறதா?

#நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் இருக்கிறதா?

#உடல் எடை திடீரென்று குறைகிறதா?

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது முக்கியம்.

**சமீபகாலமாக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?

மருத்துவ ஆராய்ச்சிகளின்படிகாய்கறி,பழங்கள் அதிகளவில் சாப்பிடுபவர்களுக்கு புற்று நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
ரெட்மீட் என்று சொல்லப்படுகிற ஆட்டுக்கறி, மாட்டுக்கறி,பன்றிக் கறி சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.குறிப்பாக பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

செயற்கை முறையில் கால்சியம் கார்பனேட் பயன்படுத்தி பழுக்க வைத்த பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல. பிளாஸ்டிக் பயன்பாடும் மிகுந்த ஆபத்து நிறைந்தது. உதாரணமாக,சூடான டீ, காபி,சாம்பார் போன்றவற்றை சுடச்சுட பிளாஸ்டிக் கவரில் கட்டி பயன்படுத்துவது ஆபத்தாகலாம். உணவில் செயற்கையான நிறங்களை,ரசாயன கெமிக்கல்களை அதிகளவில் பயன்படுத்துவதும் ஆபத்தாகும்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுப்புற சூழல் மாசு அதிகரிப்பதும் புற்றுநோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும்.

**புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

நிச்சயமாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோயை நான்கு நிலைகளாக வரையறுத்திருக்கிறார்கள்.முதல் இரண்டு நிலைகளில் முன்கூட்டியே கண்டுபிடித்தால் குணப்படுத்துவது எளிது. மூன்று,நான்கு என்ற நிலைக்கு வந்துவிட்டால்… குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. புற்றுநோய் மற்ற உறுப்புகளுக்கும் பரவிவிடும்.சிகிச்சை அளிப்பது சிக்கலாக இருக்கும்.

**சிகிச்சை விவரம் பற்றி சொல்லுங்கள் டாக்டர்…

புற்று நோய்க்கு முக்கியமாக மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.1.கீமோ தெரபி.2.ரேடியேஷன் தெரபி.3.அறுவை சிகிச்சை.
நான்காவதாக தற்போது இம்முனோ தெரபி என்ற புதிய சிகிச்சை முறை வந்துள்ளது.இதற்கு கட்டணம் அதிகம்.காலப்போக்கில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் குறைய வாய்ப்பு உண்டு.

கீமோதெரபியில் புதிய புதிய மருந்துகள் அறிமுகமாகி உள்ளன. குணப்படுத்துவதில் நல்ல ரிசல்ட் கிடைக்குமா என்று பரிசோதித்து சரியான மருந்துகளை தீர்மானிக்கலாம்.

ரேடியேஷனில் பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சிகிச்சை அளிக்க முடியும்‌. அறுவை சிகிச்சையில் ரத்த இழப்பு அதிகம் இல்லாமல் கீஹோல்முறையில் அறுவை சிகிச்சை செய்யும் போது விரைவான குணம் கிடைக்கும்.பக்க விளைவுகள் அதிகம் இருக்காது.அதே நேரத்தில் வழக்கமான ஓபன் சர்ஜரியும் நல்ல பலன் அளிக்கக்கூடியது மட்டும் அல்ல கட்டணமும் குறைவு.இன்று அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

முன்பு பாதிக்கப்பட்ட உறுப்பை முழுமையாக நீக்க வேண்டிய சூழல் ஏற்படும்.தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்குகிறோம். இதனால் உடல் உறுப்புகளை இழக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.நோய் பாதிப்பில் இருந்து விரைவாக நலம் பெறலாம்.

**புற்றுநோய் வராமல் வாழ முடியாதா?

நூற்றுக்கு நூறு நம் கையில் இல்லை. சிலவற்றை நம்மால் தவிர்க்க முடியும். சிலவற்றை தடுப்பது சாத்தியமில்லை. சரிவிகித சாப்பாடு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, உடல் பருமன் இல்லாமல் வாழ்வது, மன அமைதியுடன் வாழ்வது, உடற்பயிற்சி,புகை பிடிக்காமல், புகையிலை பொருட்களை பயன்படுத்தாமல் வாழ்வது… மதுப்பழக்கம் தவிர்ப்பது, ஆரோக்கியமான…இயற்கை சூழ்ந்த இடத்தில் வசிப்பது, சுற்றுப்புற சூழல் மாசில்லாமல் பாதுகாப்பது…இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

பெண்கள்,அவர்கள் அம்மாவுக்கு, சித்திக்கு மார்பக புற்றுநோய் வந்திருந்தால்… முன்கூட்டியே எங்களிடம் உள்ள ‘ஹெரிடிட்டி கேன்சர் கிளினிக்’கில் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ளலாம்.புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்து அறிந்து கொண்டு,அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

**சிருங்கேரி சாரதா எவிக்டாஸ் மருத்துவமனையின் சிறப்புகள் என்ன?

சிருங்கேரி மடமும் எவிக்டாஸ் வங்கியும் இணைந்து லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை சலுகை கட்டணத்தில் வழங்குகிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள மக்களுக்கு முதலமைச்சர்,பிரதம மந்திரி காப்பீடு திட்டத்திலும் சிகிச்சை அளித்து வருகிறோம்.இங்கு மருத்துவ சிகிச்சை என்பது கருணை உள்ளத்தோடு, கண்ணியமாக மனிதநேயத்தோடு வழங்கப்படுகிறது.
இங்கு உள்ள மருத்துவர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்.
புகழ்பெற்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள்.

மக்கள் எங்கிருந்து வந்தாலும் நலமுடன், வளமுடன் வாழ உதவ காத்திருக்கிறோம் என்றார் டாக்டர் வைதீஸ்வரன் வேலாயுதம்.மருத்துவ பணிகள் சிறக்க வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்‌.

தகவல் தொடர்புக்கு;
8925833176/
044-49944444/
044-49944400

சந்திப்பு:
சேகர்.

உதவி:
ஆ.அரிமாபாமகன்.