தேன் இருக்கும் வீட்டில்,நோய் நொடிகள் இருக்காது என்று சொல்வார்கள்.
தேனை உணவாக பயன்படுத்தினால், மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

*நல்ல தேன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது.

*தேனை காற்று போகாத கண்ணாடி பாட்டிலில் பாதுகாக்க வேண்டும்.

*வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து குடித்தால், தொண்டைப்புண் மற்றும் இருமலை கட்டுப்படுத்தலாம்.

*தேனில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ஆரோக்கியம் காக்கிறது.

*எடை அதிகரிக்க விரும்புகிறவர்கள் அடிக்கடி தேன் சாப்பிடலாம்.

*தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க தேன் உதவும்.

*தேனுக்கு மருந்தாகவும் வேறு மருந்துகளுக்கு துணை மருந்தாகவும் செயல்படும் திறன் உண்டு.கலப்படம் இல்லாத தேனில் உள்ள மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்காதவை.

மலைத்தேன், கொம்புத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன் என வகைகளுக்கு ஏற்ப மருத்துவக் குணங்களை வெளிப்படுத்தி வந்த தேனில், இன்றோ’கலப்படத் தேன்’ என்ற ஒரு வகைதான் தூக்கலாக இருக்கிறது. இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு நாவில் வைக்கப்படுவது மருத்துவக் குணம் கொண்ட தேனா என்பது சந்தேகமே.

வெள்ளைச் சர்க்கரை நீரும் வெல்லப்பாகும்தான் தேனுக்கான கலப்படப் பொருட்கள். ஊட்டச்சத்துகள் நிறைந்த தேன் என்று நம்பி,சர்க்கரைப் பாகை அதிகம் உட்கொண்டால் விரைவில் நீரிழிவு நோய் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. உண்மையான தேனைப் பெற, நேரிடையாக மலைப்பகுதி மக்களிடமிருந்து பெறுவதே சிறந்தது.

நீரில் ஒரு ஸ்பூன் தேனை விட்டால், விரைவில் கரைந்து நீர் முழுவதும் பரவினால் அது கலப்படத் தேன். உண்மையான தேன் அவ்வளவு சீக்கிரம் கரையாது,அப்படியே நீரில் கீழிறங்கும். சுத்தமான தேன் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும்.இனிப்புச் சுவையும்,பழையத் தேனாக இருந்தால் சிறிது புளிப்புச் சுவையும் கொண்டிருக்கும். தூயத் தேனுக்கு அடர்த்தியும் அதிகம்.

தேன் வாங்கி பயன்படுத்த விரும்பினால் அருகில் உள்ள சித்த மருத்துவர்கள் ஆலோசனையை நாடுங்கள்.

-டாக்டர் பி.அருண், சித்த மருத்துவர்.