புதிய தொடர் -1

செலின் ராய்,
(உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்)
ஆண்களைப் பற்றியும், ஆண்களின் முதுமையை நோக்கிய பயணத்தின்போது அவர்களுக்கு ஏற்படும் மனநல மற்றும் நடத்தை மாற்றங்களைப் பற்றி குறிப்பிடப் பயன்படுத்தும் பல சொலவடைகள், பழமொழிகள் நம் ஊரில் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது…
நம் அம்மாவோ அல்லது பாட்டியோ, நெருங்கிய உறவு வட்டத்திலுள்ள பெண்களோ அல்லது நம்முடன் பேருந்திலோ, இரயிலிலோ பயணிக்கும் பெண்களோ, கடைவீதியில் நம்மருகே நடந்து வரும் சகோதரிகளோ தவறாமல் சொல்வது…
நம் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒரு நூறு முறையாவது யாரேனும் சொல்லக் கேட்டிருப்பது…
”நாற்பது வயசானா நாய்க் குணம்…” என்பதுதான்.
இந்த வார்த்தைகளைக் கடந்து வராதவர்களே இல்லையெனலாம்.
அவரவர் கணவர்கள் நாற்பது வயது முதல்,நடந்து கொள்ளும் தன்மையின் வீரியத்தைப் பொறுத்து இந்த, “நாற்பது வயதானால் நாய்க் குணம்…” என்று பெண்கள் சொல்வதன் வெளிப்பாடு கிண்டலாகவோ, நகைச்சுவையாகவோ, அலுப்பும் சலிப்புமாகவோ, கடுப்பாகவோ அல்லது பேரழுகையுடன் கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்பாகவோ அமையும்.
இது முழுக்க முழுக்க அந்த ஆணின் தனிப்பட்ட குண நலன்கள் மற்றும் அவன் வளர்க்கப்பட்ட விதம், சிறு வயது முதல் அவனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் பெண்களைக் குறித்தும், பெண்களை நடத்தும் விதத்தைக் குறித்தும் அவன் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்கள், ஆழ்மனப் பதிவுகள் இவையனைத்தையும் சார்ந்தது.
மேற்சொன்ன காரணங்களை விட அதி முக்கியமான அடிப்படைக் காரணம், நாற்பது வயதிற்கு மேல் ஆண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான். இந்நிலையை Male menopause (ஆண் மெனோபாஸ்) அல்லது Andropause (ஆண்ட்ரோபாஸ்) என்கிறோம்.தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சந்தித்தேயாக வேண்டிய, கடந்து வந்தே ஆக வேண்டிய நிலைதான் இந்த “ஆண் மெனோபாஸ்” காலகட்டம். இந்த காலகட்டத்திற்கு தன் கணவன் வரும்போது ஒரு பெண் அவனை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியதும்,அவனைக் கவனமாகக் கையாள வேண்டியதும் மிக மிக அவசியம்.
இப்படி நான் சொன்னவுடன் சில சகோதரிகள் என்னிடம் இப்படிக் கேட்கக்கூடும்… “இன்னா மேடம் நியாயம் இது…? எப்பவுமே நாங்கதான் எங்க புருஷனைப் புரிஞ்சு நடந்துக்கணுமா…? பொம்பளைங்கதான் ஆம்பளைங்களைப் புரிஞ்சுக்கணுமா…? ஆம்பளைங்க அதைப் பண்ணவே மாட்டாங்களா…?” என்று கொந்தளிக்கக் கூடும்.
இது ஏதோ அந்த ஆணின் வசதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், மன நிம்மதிக்காகவும் நீங்கள் செய்வதாய் பெண்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.உடல், மன, ஹார்மோன் மாற்றங்களினால் உங்கள் கணவர் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்வதற்கும், உங்களது மகிழ்ச்சியையும், உங்களைச் சார்ந்திருக்கும் உங்களது குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்குமே இந்தப் புரிதல் மிகவும் அவசியம்.
ஆண் மெனோபாஸ் காலகட்டத்தில் தங்கள் கணவன் நடந்து கொள்ளும் விதங்களை சகித்துக் கொண்டு அவற்றைப் பெரும் போராட்டத்துடன் கையாள்வதை விட, அவன் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறான் என்று புரிந்து கொள்ள முடியாமல்தான் பல பெண்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்…
ஏன் ஒரு ஆண் தனது மெனோபாஸ் காலகட்டத்தில் முரண்பாடாக நடந்து கொள்கிறான்,சில நேரம் அதீத கோபம் மற்றும் எரிச்சலுடனும், சில இடங்களில் ஆர்வக் கோளாறாகவும், புரிந்து கொள்ள முடியாத விதங்களிலும் நடந்து கொள்கிறான்..?
பல நேரங்களில் தன்னுடன் அன்பாய், காதலுடன்…பாசமாய், நெருக்கமாயிருக்கவும், உடலுறவில் விருப்பமில்லாமலும் நடந்து கொள்கிறான் என்பவை உள்ளிட்ட பலவித சந்தேகங்களும் , குழப்பங்களும் பெண்களுக்கு ஏற்படும். சில பெண்களுக்குத் தங்கள் கணவன் திடீரென பிற பெண்கள் மீது அதீத ஆர்வம் காட்டுவது போலவும், அதே நேரம் தங்களிடம் அளவிற்கதிகமான பொசசிவ்னெஸ், உரிமை கொண்டாடுதல், தன் மீது காரணமில்லாமல் சந்தேகப்படுதல் மற்றும் அதி தீவிரமான கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வது போலவும் தோன்றும்.
ஆண் மெனோபாஸ் நிலையை அவன் அடையும் முன்பு வரை, பிற பெண்களைத் திரும்பிப் பார்க்கவே பயப்பட்டுக் கொண்டிருந்த தன் கணவன், சாதாரணமாகப் பிற பெண்களிடம் பேசினாலே தன்னிடமிருந்து அதை மறைக்க நினைக்கும் தன் கணவன் இப்போது வேண்டுமென்றே தன் கண் முன்னே பிற பெண்களிடம் நெருக்கமாகப் பேசுவதும், வழிவதும் ஏன்? என்ற குழப்பமும் மனைவிக்கு எழும்.
இப்படி பல்வேறு விதமான கோபங்களும், குழப்பங்களும் ஆண் மெனோபாஸ் நிலையிலுள்ள கணவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பெண்களைத் தினம் தினம் கதறடித்துக் கொண்டுதானிருக்கின்றன.
உங்களது சந்தேகங்கள் அனைத்திற்கும் தெளிவான விளக்கங்களையும், சரியான வழிகாட்டுதல்களையும் தரும் விதத்தில் இந்தத் தொடர் அமையும் என்பதில் எந்த விதச் சந்தேகமுமில்லை. தங்களது கணவர்களின் முரண்பாடான ‘ஆண் மெனோபாஸ்’ நடத்தைகளை சரியாகக் கையாண்டு அவற்றைக் கடந்து வந்த பெண்கள் சிலரின் உண்மைக் கதைகளையும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவற்றைப் பற்றியும் நாம் சேர்ந்து அலசலாம்…விவாதிக்கலாம்…
உங்கள் கணவரும் நாற்பது வயதைத் தாண்டியவரா? நான் இந்தத் தொடரில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறதா? அல்லது இதில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தவிர வேறு ஏதாவது முரண்பாடான முறையில் உங்கள் கணவர் நடந்து கொள்கிறாரா? அவை தொடர்பான விளக்கங்கள் வேண்டுமென்றால் நீங்கள் ,celinroyslifestyle என்ற இன்ஸ்டாகிராம் அல்லது யூடிப் ஐடிக்கோ,9381019353 என்ற வாட்ஸ் அப்பிற்கோ எழுதி அனுப்புங்கள். அவற்றிற்கான பதில்கள் உங்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படாது. அனைத்து வாசகர்களுக்கும் பயன்படும்படி ஹெல்த் அண்ட் பியூட்டியில் இடம்பெறும் இத்தொடரில் சேர்க்கப்படும்.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்குமே கூட, “நாம நல்லாதானே இருந்தோம்…ஏன் திடீர்னு நாம் இப்படி மனசளவிலும் சரி, உடலளவிலும் சரி…வீக்காயிட்டோம்…? ஏன் இப்படியெல்லாம் முரண்பாடா சிந்திக்க, செயல்பட ஆர்ம்பிச்சிட்டோம்…? இது நானில்லையே…நானாக இப்போது நானில்லையே…?” என்ற குழப்பங்களும், பலவித சந்தேகங்களும், கேள்விகளும் எழலாம்.
“நான் என்னையே தொலைச்சிட்ட மாதிரி இருக்கு இப்பல்லாம்…என்னையே…என் பழைய என்னையே…எனது நிஜத்தையே தொலைத்து விட்டு நான் தேடிக்கொண்டிருக்கிறேன் ” என்று எத்தனை ஆண்கள் புலம்புகிறார்கள்…? எத்தனை ஆண்கள் இப்படி வேதனைப்பட்டுப் புலம்புவதை நாம் கேட்டிருப்போம்…? சொல்லப்போனால்…ஒரு ஆண் பருவமடையும், தங்களது டீனேஜ் எனப்படும் பதின் பருவ வயதிற்குள் நுழையும்போது…அடியெடுத்து வைக்கும்போது என்ன விதமான மனக் குழப்பங்கள் இருந்தனவோ, அதே போன்றதொரு நிலைக்குத்தான் இந்த ஆண் மெனோபாஸ் காலகட்டத்தின்போதும் அவன் தள்ளப்படுவான். எனவே, ஆண்களும் இந்த விஷயம் தொடர்பான உங்களது சந்தேகங்களையும், அனுபவங்களையும், கேள்விகளையும், குழப்பங்களையும் எழுதி அனுப்பலாம்.
எனவே, நீங்கள் கேட்கும் உங்களது சந்தேகங்களைப் பற்றியும் இந்தத் தொடரில் விளக்கமாகப் பேசுவோம். தயாரா என் அன்பு நெஞ்சங்களே…?
என்னாது… ஆண்களுக்கு மெனோபாஸ் வருமா? அதெல்லாம் பொய்… பெண்களுக்கு ஏற்படுவது போல் ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில்லை. பிறகெப்படி மெனோபாஸ் வரும்? அது சாத்தியமில்லை என்று நிறைய விவாதங்கள் அன்றும், இன்றும் எழுப்பப்படுவதுண்டு. பெண்களுக்கு வருவது போல், ஆண்களுக்கு மாதவிடாய் வருவதில்லைதான். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் உடலிலும், மனதிலும் எந்தெந்த விதமான மாற்றங்கள் ஏற்படுமோ அவையெல்லாமே, அதே வயதில் ஆண்களுக்கும் ஏற்படுகின்றன என்று பல ஆராய்ச்சிகளின் முடிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
ஆண் மெனோபாஸ் (Male menopause) என்ற வார்த்தை முதன் முதலில் 1944 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல், மற்றும் மனநல மாற்றங்களுக்கு ஈடான , அதற்கு சற்றும் குறையாத அதே போன்ற அறிகுறிகள் ஆண்களுக்கும் அவர்கள் முதுமையடையும் போது தோன்றுவதைக் குறிப்பிடும் வகையில் இந்த “ஆண் மெனோபாஸ்” (Male menopause) என்ற வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண்களுக்கு வயதாகும் போது ஏற்படும் அறிகுறிகள் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பிரச்னைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.வயது அதிகரிக்கும் போது ஆண்களின் உடலில் ‘டெஸ்டோஸ்டீரானின்’ அளவு குறைவதை முதன் முதலில் 1944ல் ஹெல்லர்ஸ் மற்றும் மேயர்ஸ் (Hellers and mayers) கண்டுபிடித்து அந்நிலைக்கு “ஆண் மெனோபாஸ்” (Male menopause) என்று பெயரிட்டனர்.
ஆண் மெனோபாஸ் குறித்த நம்பிக்கையின்மை எந்தளவிற்கு இருந்ததோ, இருக்கின்றதோ அதே அளவிற்கு இந்த விஷயத்திப் பற்றிய பலவிதமான தவறான, உண்மைக்குப் புறம்பான பல கருத்துகளும் இன்னும் உலவிக் கொண்டுதானிருக்கின்றன.
அதில் மிக முக்கியமான ஒன்று, ஆண்களுக்கு ஏற்படும் அதீத வியர்வை. சராசரி அளவிற்கும் அதிகமாக ஆண்களுக்கு வியர்வை ஏற்பட்டால் அது ஆண் மெனோபாஸ் நிலைதான் என்றொரு நம்பிக்கையும் இன்றும் பெரும்பாலானோருக்கிருக்கிறது.
ஆனால், அதீத வியர்வை ஏற்படுவது எல்லா சமயங்களிலும், எல்லா ஆண்களுக்கும் ஆண் மெனோபாஸ் நிலையைக் குறிக்கும் அறிகுறி மட்டுமல்ல.அது உடல் நிலை மாற்றங்கள், உடலில் மற்றும் வெளிப்புற தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களினாலும் ஏற்படலாம்.ஆண்கள், பெண்கள் இரு பாலினத்தவருக்குமே மேற்சொன்ன இக்காரணங்களால் அதீத வியர்வை ஏற்படலாம். எனவே இதை மட்டும் வைத்து ஒரு ஆண் மெனோபாஸ் அல்லது ஆண்ட்ரோபாஸ் நிலையை அடைந்து விட்டான் என்ற தீர்மானத்திற்கு வந்து விடக் கூடாது என்று ஹெய்ன்மேன் மற்றும் சாட் (Heinemann and saad) பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் ஆண்ட்ரோஜென் அளவு குறைவதால் ஏற்படும் சில உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றங்கள்,மன அழுத்தம் என்றும் ‘பைபோலார் பிறழ்வு நிலை’ (Bipolar disease) எனவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆண் மெனோபாஸ் குறித்த இத்தகைய அதீதமான, தவறான மனப்பதிவுகளைத் தவிர்த்து, சரியான , தெளிவான புரிதல்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
(தொடரும்)

