
உளவியல் படித்தவன் என்ற வகையில், சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயவேண்டிய கட்டாயம் உள்ளது.நலவாழ்வை உறுதிப்படுத்துவது நமது கடமை.
காதலிக்க மறுத்ததால் அக்கா மகளை கொன்ற மாமன், சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி,கணவனை கொன்ற மனைவி, காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாள் மகள்,மருமகனை கொடூரமாக வெட்டிக் கொன்ற அப்பா…கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இப்படி கொடூரமாக நடந்து கொள்கிறார்களா?ஏன் இந்த கொலைவெறி?
கோபம் உண்மையில் விஷம் குடிப்பதற்கு சமம்.கோபம் கொண்டவனையே அதிகம் தாக்குகிறது.”ஒரு நிமிடம் கோபத்தை அடக்குபவன் ஒரு நாள் முழுவதும் மட்டும் அல்ல வாழ்நாள் முழுவதும் வரும் துன்பத்தை தடுக்கலாம்”! என்று ஒரு பழமொழி உண்டு.
அநேகமாக எல்லோருடைய மனதிலுமே ஏதாவது ஒரு தீர்க்கப் படாத கோபமும், பாசி படிந்த வெறுப்பும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.யார் மீதோ உள்ள கோபத்தையும், வெறுப்பையும் இப்படித் தூக்கிச் சுமப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால், கோபம்,மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும் என்று அறிவியலார் கூறும் நிதர்சனத்தை அறிவீர்
களா?
மன அழுத்தம் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் டாக்டர் ஸ்டீவன் ஸ்டான்ஃ போர்ட்,பல நோயாளிகளை வைத்து ஆராய்ச்சி செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
“உடலில் ஏற்படக்கூடிய 61% நோய்களுக்கும், அவை குணமாக காலதாமதமாவதற்கும், குணமாகாமல் போவதற்கும், கோபம், வெறுப்பு, பயம், வன்மம் போன்ற எதிர்மறை எண்ணங்களே மூல காரணம்!
இத்தகைய மன அழுத்தத்திலிருந்து விடுபட ஒரே வழி, மன்னிக்கும் குணத்தினை வளர்த்துக் கொள்வதுதான்!” என்று சொன்ன அவர் இதற்கான சிகிச்சையை (Forgiveness therapy) ஃபர்கிவ்னெஸ் தெரபி என்கிறார்.
மன்னிப்பது, பலவீனமானவர்களின் செயல் என்ற எண்ணம்தான், மன்னிக்கும் குணம் பலரிடமும் இல்லாமல் போனதன் காரணம். ஆனால், உண்மையில் மன்னித்தல் என்பது மிகவும் பெருந்தன்மையான செயல்.அதனால்தான் மன்னிக்கத் தெரிந்த மனிதனை கடவுளுக்கு சமம் என்று சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
மன்னிப்பதால், மனதில் இருக்கும் வெறுப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி,கசப்புணர்ச்சி அனைத்தும் முற்றிலும் வடிந்து போகிறது.தவிர, அப்படி மன்னிப்பதே ஒரு பெருந்தன்மை என்று நினைக்கும் போது, மன நிம்மதி வருகிறது. மனசு லேசாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பிணிகள் வேகமாக குணமாகின்றன.
கோபம், வெறுப்பு, கசப்பு இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும்.எல்லோரையும் அன்புடன் கனிவுடன் நடத்திட வேண்டும்.இதுவே எனது விருப்பம், வேண்டுகோள்.
-டாக்டர்.ஜி.ராஜமோகன்.

