
எந்தச் செடியையும் என்னால் வளர்க்க முடிய வில்லை….அதற்குத் தண்ணீர் ஊற்றக்கூட நேரம் இருப்பதில்லை என்று சொல்பவர்களும் வளர்க்க ஏற்ற செடி கற்றாழை. இதை வீட்டில் கட்டித் தொங்கவிட்டால்கூடப் போதும்… தண்ணீர், பராமரிப்பு எதுவும் இல்லாமல் வளரும். ‘கட்டிப் போட்டால் குட்டிப் போடும்’என்பது சோற்றுக்கற்றாழைக்குப் பொருந்தும். சாலையோரங்களில் தானாக முளைத்துக் கிடக்கும் சோற்றுக்கற்றாழையைப் பறித்து வந்து வீட்டில் வைத்தால்…. கவனிப்பு இன்றியே வளர்ந்துவிடும். சோற்றுக்கற்றாழை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை.
மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், சுண்ணாம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், சிறியளவில் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. சோற்றுக் கற்றாழையிலிருந்து எடுத்த சோற்றை (சோற்றுக்கற்றாழையின் தோலைச் சீவிய பின் இருக்கும் ஜெல் பகுதி) நன்கு கழுவி சுத்தப்படுத்திய பின் உண்ணலாம். இதனால் உடல் குளிர்ச்சியாகும். சோற்றுக்கற்றாழை மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பைப் பலவீனம், குழந்தையின்மை ஆகிய மூன்று முக்கிய பிரச்சனைகளுக்கு மருந்தாக விளங்குகிறது.

