பெண் புத்தி, பின் புத்தி..

இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வதற்கு முன் நான் ஒரு   விஷயத்தை தெளிவு படுத்திவிட நினைக்கிறேன்… நான் இங்கே பெண்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுவதாகவோ அல்லது  தவறாக குறிப்பிடுவதாகவோ நினைத்துவிட வேண்டாம்… எனக்குள் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் எப்போதுமே   இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், எனக்குப் பெண்கள்    மீது இருக்கும் உண்மையான அன்பினாலும் அக்கறையினாலும்தான்    நான் இவ்வாறு சிந்திக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..

‘பெண் புத்தி, பின் புத்தி’ என்று எந்தக் காலத்திலோ சொல்லப்பட்ட இந்தப் பழமொழி இன்னும் பொய்த்துப் போகாமல்தான் இருக்கிறதோ? என்ற சந்தேகம் எனக்கு வலுத்து வருகிறது.. அதிலும் குறிப்பாக இன்றைய தொலைக்காட்சித் தொடர்களின் வெற்றிகளைப் பார்க்கும்போது என் எண்ணம் சரிதானோ? என்ற பயம் வருகிறது. தொடர்களில் இருக்கும் வக்கிரங்களும் பழிவாங்கல்களும், பல வருடங்களாக ஒரு தொடர் ஒளிபரப்பாவதையும் பார்க்கும்போது கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

இங்கே ஒரு அறிவியல் உண்மையை முதலில் சொல்லிவிட வேண்டும்.  அதாவது, மூளையைப் பற்றிய ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். மூளையைப் பொறுத்தவரையில் அதற்கு நாம் எதைக் கற்றுக்கொடுக்கிறோமோ, அதைப்பற்றிதான் அது சிந்திக்கும், செயல்படும்.

பொதுவாக, ஆன்மிகவாதிகளாக இருக்கட்டும் அல்லது உளவியல்                 மருத்துவர்களாக இருக்கட்டும், ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்வார்கள். அது என்னவென்றால்? எப்போதும் ‘பாசிட்டிவ்வாக’ சிந்தியுங்கள் என்பதுதான் அது.. பாசிட்டிவ் சிந்தனை… நேர்மறையான சிந்தனை… நாம் எப்போதுமே எதிர்மறையாக சிந்திக்கக்கூடாது… எதிர்மறையான கருத்துகளை ‘சும்மா, பொழுது போக்கிற்காகக்’ கூட நாம் கேட்கவோ. பார்க்கவோ கூடாது… எண்ணமே வாழ்க்கை என்பார்கள்… நம்முடைய எதிர்மறையான எண்ணங்கள் நம்முடைய மூளைக்குள் பதிவாகிக் கொண்டே இருக்கும்… அப்படிப் பதிவான எண்ணங்கள் நம் வாழ்க்கையை வடிவமைக்கும்போது நம் வாழ்க்கை சீர்குலைந்து போகும்…

இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள், நேர்மறையான சிந்தனை கொண்டவைகளாக இருக்கின்றனவா? எதிர்மறையான சிந்தனைகளைச் சித்தரிக்கின்றனவா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்… அவற்றை ஏன் பெரும்பாலான பெண்கள் ஆதரிக்க வேண்டும்? ஆண்களிலும்  தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்…

தொடர்களைப் பார்ப்பதைப் பற்றி கடும் விமர்சமானம் செய்யும்போது  சிலர் சொல்கிறார்கள்… ‘சும்மா பொழுது போவதற்காக நாங்கள்    டி.வியில் நாடகங்கள் பார்க்கிறோம்… அதற்காக நாங்கள் அந்த நாடகங்களில் வருவதைப்போல வாழவா போகிறோம்? என்று தங்கள் தவறுகளை நியாயப்படுத்துகிறார்கள்…

விஷத்தைச் சாப்பிடக் கூடாது… சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து… அது தெரிந்தும் ‘சும்மா சாப்பிட்டு பார்ப்போமே’ என்று யாராவது விஷத்தைச் சாப்பிடுவார்களா? அப்படித்தான் இன்றுள்ள பெண்கள் டி.வி தொடர்களைப் பார்ப்பதும்… அது விஷம் என்று உளவியல் அறிஞர்கள் சொல்லியும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், பொழுது போக்கு என்று சொல்லி பார்ப்பது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம்…

சிலவற்றைப் பற்றி ஓரிரு நிமிடங்கள் கூட சிந்திக்கக் கூடாது… சிலவற்றைப் பற்றி கொஞ்சமாக சிந்திக்கலாம்… சிலவற்றைப்    பற்றி எப்போதாவது சிந்திக்கலாம்… சிலவற்றை எப்போதுமே     சிந்திக்கக் கூடாது…

அப்படி, எப்போதுமே சிந்திக்கக் கூடாதவற்றை எப்போதும்    சிந்தித்துக் கொண்டு இருப்பது ஆபத்தானது… அதுமட்டுமல்லாது அன்றைய தொடர் முடிவில் முடிந்த ஒரு தவறான அல்லது    வக்கிரமான முடிவைப் பற்றி, அடுத்த நாள் அந்தத் தொடரைப்    பார்க்கும் வரையில் அந்த வக்கிர முடிவைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதான போக்கு என்பது அறிவியல் ரீதியாக    மூளைக்கு மிகவும் ஆபத்தான ஒன்று… தவறாக மட்டுமே சிந்தித்த மூளையால் மற்ற சரியான எந்த ஒரு மாற்றுக் கருத்தையும்     சரியென ஏற்றுக்கொள்ள முடியாது… மற்ற சரியான கருத்துகள்    அனைத்தையும் மூளை நிராகரித்துவிடும்…

அப்படித்தான் இன்று பெண்கள் யார் சொல்வதையும் கேட்காமல் சீரியல்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்… 

எல்லாவற்றையும்விட ஒரு பேராபத்து குழந்தைகளும் அதனால் பாதிக்கப்படுவதுதான்…

குழந்தைகளின் வளர்ப்புகளில் தாயின் பங்குதான் மிகவும் முக்கியம்… தாய் குழந்தைகளை வளர்க்கக் கூட வேண்டியதில்லை… தாய் என்ன செய்கிறாள்? எதைப் பார்க்கிறாள்? எப்படிச் சிந்திக்கிறாள்? என்பதையெல்லாம் குழந்தைகள் கவனிப்பார்கள்… அதுதான் குழந்தைகளின் மூளையில் உள்ள இயற்கையான குணம்… அப்படித் தாயைக் கவனிக்கும் குழந்தைகளின் பிஞ்சு மனம் தொலைக்காட்சி நாடகங்களில் வரும் அந்த வக்கிரமான போக்குகளை சாதாரணமான விஷயமாகத் தன் மூளைக்குள் பதித்துக் கொண்டுவிடும்…

தாயைப் பார்த்தும் மற்றவர்களைப் பார்த்தும் வளர்வதால்தான் இன்றைய குழந்தைகள் பேசுவதற்கு முன்பே ஸ்மார்ட் ஃபோன்களை சுலபமாகக் கையாள்கின்றன… அதை நாம் பெருமையாகவும் சொல்லிக் கொள்கிறோம்…

தாய்க்குப் பிடிக்கும் சீரியல்களும் அதன் உள் அர்த்தங்களும் குழந்தைக்கும் பிடித்துவிடும்… பின்னால், ஏதோ ஒரு சூழலில் அந்தத் தாயே அந்தக் குழந்தைக்கு அவையெல்லாம் தவறு என்று சொல்லி மாற்ற நினைத்தாலும் முடியவே முடியாத நிலை வந்துவிடும்…

தவறான கருத்துகளை விளையாட்டுக்குக் கூட சிந்திக்கக் கூடாது…               பழம் அழுகிவிட்டது என்று தெரிந்தும் பழம் சாப்பிடுவதற்குத்தானே     என்று அழுகிய பழத்தை நாம் சாப்பிடுவோமா? காய்கறி     கெட்டுவிட்டால் அதைச் சமைப்போமா? நாம் சாப்பிடும் எந்த    ஒரு பொருளும் கெட்டுப்போய் விட்டால் அதைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடுகிறோம்…

அதே சமயத்தில், நம்மை மட்டுமல்லாமல் நம் சமூகத்தையும்     நாளைய நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் தொலைக்காட்சித் தொடர்களை மட்டும் நாம் தூக்கி வீசாமல் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்… தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றியடைவது பெண்களின் ஆதரவினால்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்…               

என்னைக் கேட்டால், உண்மையில் டாஸ்மாக்கை விடவும், புகையிலைப் புகையை விடவும், செல்ஃபோனின் ஆபத்துகளை விடவும், காற்று மாசினால் ஏற்படும் பாதிப்புகளை விடவும் மோசமான ஆபத்துகளை தொலைக்காட்சித் தொடர்கள் விளைவிக்கும் என்று சொல்வேன்… அதன் கொடூர விளைவு என்பது தவறான எண்ணங்களை உயர்த்திப் பிடித்து சமூகத்தை சீரழித்துவிடும்… விரைவில் விடுபட்டுவிட்டால் தப்பிக்க வாய்ப்புண்டு… இல்லையென்றால்   பழமொழி உண்மையாகிவிடும் பேராபத்து காத்திருக்கிறது…