னம் சரியாக இருந்தால்,உடல் நலம் சிறப்பாக இருக்கும்.மனம் ஒரு திடப் பொருளல்ல.இதயம் போல்,சிறுநீரகம் போல், கல்லீரல் போல் ஸ்கேன் செய்து,எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடியாது.இதன் எடை இவ்வளவு,கனம் இவ்வளவு என்று கூற முடியாது. அதனால்தான் மனதைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்து வருகின்றன. எனவே,ஒரு உறுப்பை விவரிப்பது போல விவரிக்க முடியாது. மனம் என்பது ஒரு செயல்பாட்டுக் கண்ணோட்டமாகும். செயல்பாட்டுக் கண்ணோட்டமென்றால்(Functional concept) என்ன? அதாவது,ஒரு உயிரினம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான்,மனம் என்பது இருக்கும். அந்த உயிரினம் செயல்படவில்லை என்றால்,மனம் இருக்க முடியாது.

சிந்தனை என்பது எண்ணங்களின் தொகுப்பு.பல்வேறு இலக்கற்ற எண்ணங்கள் மனத்தில் அலைபாயும் தருணத்தில்,அவை அனைத்தும் ஓர் இலக்கில் திரளும்போது நாம் அதைச் சிந்தனை எனச் சொல்கிறோம். அப்படித் திரளாத சமயத்தில் அவற்றை நாம் வெறும் எண்ணங்கள் என்றே சொல்கிறோம்.

மனம் ஓய்வு நிலையில் இருக்கும்போது, அதில் பல்வேறு எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். பொதுவாக அந்த எண்ணங்களை மனம் பொருட்படுத்தாது. தேவையான நேரத்தில் இந்த எண் ணங்களை ஓர் இலக்கை நோக்கிக் குவித்து மனம் நமது சிந்தனையை ஒருங்கிணைக்கிறது.

குதிரையின் இலக்கைத் தீர்மானிக்கும் கடிவாளம் போல, நமது மனம் எண்ணங்களுக்குக் கடிவாளமிட்டு இலக்குகளை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கும். எண்ணங்களை விட மனமே வலிமையானது. மனம் சொன்னதற்கு ஏற்றவாறு எண்ணங்கள் உருவாகும்,அந்த எண்ணங்களைத் தொகுப்பதும் அல்லது கலைப்பதும், தேவையில்லை என்று முடிவு செய்வதும் மனமாகவே இருக்கிறது. ஒருவேளை மனம் தனது கடிவாளத்தை இழக்கும்போது கட்டுத்தறியாக ஓடும் எண்ணங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன, எண்ணம் நோய் மையடையும் புள்ளி இதுதான்.

எப்போதெல்லாம் எண்ணங்களின் மீதான இந்தக் கட்டுப்பாட்டை மனம் இழக்கிறதோ அப்போதெல்லாம் எண்ணங்கள் வலிமை மிகுந்த வையாக மாறிவிடுகின்றன. மனத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன. எண்ணங்களுக்கு ஏற்றவகையில் மனம் செயல்படத் தொடங்கும் இந்த நிலையில் எண்ணங்கள் முழுமையாக நோய்மை யடைந்து விடுகின்றன.

நாம் நம்பும் ஒருவர் மீது,எந்த விதக் காரணமும் இல்லாமல் தன்னிச்சையாக ஓர் எதிர்மறை எண்ணம் மனத்தில் உருவானால்,மனம் இயல்பு நிலையில் அந்த எண்ணத்தை நிராகரித்துவிடும். ஆனால்,மனம் பலவீனமாகும் போது அந்த எண்ணம் மனத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும். “அவர் உனக்குத் துரோகம் செய்கிறார்” என்ற எண்ணத்தை நிராகரிக்க முடியாமல் அந்த எண்ணத்திற்கு மனம் தன்னைப் பூரணமாஒப்புவிப்பது தான் நோய்.இந்த நோய்மை நிலைதான் “எண்ணச் சுழற்சி நோய்” ஓ.சி.டி.(OCD-Obsessive Compulsion Disorder).

அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர் எனச் சொல்லக்கூடிய எண்ணச் சுழற்சி நோய் என்பது சிகிச்சையளிக்க வேண்டிய, குணப்படுத்தக்கூடிய ஒரு வகையான மனநலப் பிரச்னை. சிகிச்சையளிக்காத நிலையில் நாளுக்கு நாள் இதன் தீவிரத்தன்மை அதிகமாகி அதிதீவிர நோயாகவும் மாறக்கூடியது.

ஓர் எண்ணம், திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றி,உங்கள் மனதை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு வேறு எதிலும் உங்களை ஈடுபட விடாமல், எதன் மீதும் கவனம் கொள்ள முடியாமல் செய்யுமானால் அந்த எண்ணத்தை அப்சசன் என அழைக்கலாம்.

“பீரோ பூட்டுனமா இல்லையானு தோணிட்டே இருக்குங்க, நிம்மதியாவே இருக்க முடியல, இவ்ளோ தூரம் கோயிலுக்கு வந்துட்டு சாமி கும்பட கூட மனசு வரல, போய் ஒரு டைம் செக் பண்ணிட்டு வந்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்”

பீரோவைப் பூட்டிவிட்டோமா இல்லையா என்ற அந்த பெண்ணின் சந்தேகம்தான் அப்சசன்.அந்தச் சந்தேகம் அவளின் மனத்தின் முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது. இதேபோல ஏதாவது ஓர் எண்ணம் உங்களுக்குள் திரும்பத் திரும்ப தோன்றி உங்களது முழுக் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டால் அந்த எண்ணத்தை அப்சசன் எனச் சொல்லலாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அப்ச்சன் என்றாலே வியாதியோ, மனப்பிரச்னையோ கிடையாது. இயல்பாகவே நம் எல்லோருக்குமே கூட சில நேரங்களில் அந்தந்தச் சூழல் சார்ந்து சில அப்சசன் வருவது இயற்கையே.நாம் செய்யும் சில செயல்களில், சடங்குகளில் இந்த அப்சசனின் தன்மை
இருக்கிறது.தேர்வு எழுதச் செல்லும்போது எல்லாவற்றையும் படித்து விட்டோமா என்ற சந்தேகம் திரும்ப திரும்ப வருவதும், படிப்பதைச் சரியாக எழுத முடியுமா எனத் திரும்ப திரும்பத் தோன்றும் பயத்திலும் கூட அப்சசனின் தன்மை இருக்கிறது. அதனால் அப்சசன் என்றாலே அது வியாதியோ அல்லது மனப்பிரச்சினையோ அல்ல.அது இயல்பானதே!

இயல்பான இந்த அப்சசன் எப்போது நோயாக மாறுகிறது?

ஓர் எண்ணம் திரும்பத் திரும்ப உங்களுக்குள் தோன்றுகிறது என்றால் செய்ய வேண்டிய ஒரு செயலை இன்னும் கச்சிதமாக, திருத்தமாகச் செய்ய அது நிர்பந்திக்கிறது என்று பொருள். அதன் காரணமாக நீங்கள் இன்னும் அதை நன்றாக, திருப்தியாகச் செய்ய முடிந்தால் அந்த அப்சசன் ஆக்கப்பூர்வமானதே!

இன்று மாலைக்குள் ஒரு ரிப்போர்ட்டைச் சரி பார்த்து மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும். ஒரு முறை சரி பார்த்த பிறகும் திருப்தி இல்லாமல் இன்னும் சில முறை சரி பார்த்து அனுப்புவது இயல்பானது; ஆக்கப்பூர்வமானது. அதுவே எத்தனை முறை சரி பார்த்த பிறகும் திருப்தி வராமல் திரும்பத் திரும்ப அதைச் சரிபார்த்துக்கொண்டே இருந்து, கடைசியில் அந்த ரிப்போர்ட்டை மேலதிகாரிக்கு அனுப்ப முடியாமலேயே போனால் அது நோய். எண்ணச் சுழற்சி நோய்.

இருபது வயது இளைஞன். சமீபகாலமாக ஒரு பெண்ணுடன் பழகி வருகிறான்.இரவில் நீண்ட நேரம் அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பான்.ஒரு நாள் அவனுக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. “ஒருவேளை நான் ஃபோனை வைத்தவுடன் அவள் வேறு யாருடனோ பேசுவாளோ?” என்று தோன்றிவிடுகிறது. அந்தச் சந்தேகம் வந்தவுடன் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உடனடியாக அந்தப் பெண்ணிற்கு அழைத்துப் பேசுகிறான்.அவள் எண் பிசியாக இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறான். ஓரளவிற்கு நிம்மதியாக இருக்கிறது.ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திரும்பவும் அந்தச் சந்தேகம் வருகிறது. திரும்பவும் அழைத்துப் பேசுகிறான்.அடுத்த சில நாட்களில் அவனது இந்த நடவடிக்கை இன்னும் அதிகமாகிறது. அடிக்கடி அவளுக்குக் கால் செய்து அவள் யாரிடமும் பேச வில்லை என உறுதிசெய்து கொள்கிறான்.இரவு முழுக்க அழைத்துக் கொண்டேயிருக்கிறான்.ஒரு கட்டத்தில் அவள் வெறுத்து போய் “எதுக்கு இப்படி நைட் முழுக்க மிஸ்டு காலா கொடுத்துட்டு இருக்க” எனக் கோபித்து கொள்ளும்போது உண்மையைச் சொல்லியிருக்கிறான்.அவள் ஓரளவு இதைப் புரிந்து கொண்டு என்னிடம் அழைத்து வந்தாள்

“எனக்கு நல்லாவே தெரியும் சார்,அவ யார்கிட்டயும் பேச மாட்டானு.ஆனால் என்னால் அந்தச் சந்தேகம் வரும்போது என்ன பண்றதுனு தெரியல, அப்படிலாம் இருக்காதுன்னு எவ்வளவோ சமாதானம் எனக்கே சொல்லிக்கிட்டாலும் என்னால நிம்மதியா இருக்க
முடியல,அவளுக்கு போன் பண்ணி ஒரு ரிங்காவது கேட்டாதான் என்னால நிம்மதியா இருக்க முடியுது. அந்த நிம்மதியும்கூடக் கொஞ்ச நேரம் தான், திரும்பவும் அந்த சந்தேகம்,திரும்பவும் கால் பண்றேன்.ஒரு நாள் நைட் மட்டும் ஐநூத்தி முப்பது மிஸ்டு கால் பண்ணியிருக்கேன்” என்று அழுதான்.

இதுதான் நோய்மை. ஓர் எண்ணம் திரும்த் திரும்ப வருவதின் விளைவாக மனதை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டு,மனதை முழுவதும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதால் வேறு எதன் மீதும் கவனம் இல்லாமல், வேறு எதையும் செய்ய முடியாமல் எந்த நேரமும் இதன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அந்த எண்ணங்கள் சொல்கிறபடியே நடந்துகொண்டிருந்தால் அந்த எண்ணம் அதாவது அந்த அப்சசன் நோய்மையாக மாறிவிட்டது என்று அர்த்தம். இப்படித்தான் இயல்பான சில அப்சசன்கள் நோய்மையாக மாறுகின்றன.

“எனக்கு எதையும் ரெண்டு மூணு முறை செக் செய்து பார்ப்பதுதான் வழக்கம்.இதனால் எனது செயல்கள் எதுவும் பாதிக்கப்படுவதில்லை,எனது நிம்மதி ஒன்றும் கெட்டுப்போவதில்லை.இந்த இயல்பான அப்சசன்கூடப் பின்னாளில் நோய்மையாக மாறுமா?” என நண்பர் ஒருவர் கேட்டார்

நிச்சயம் மாறாது. காலம் காலமாக நமது ஆளுமைகளில் இருக்கும் சில அப்சசிவ் பண்புகள் எப்போதும் அதே மாதிரியாகவே தொடரும்.இவை எதுவும் நோய்மையாக மாறாது.நோய்மை என்பது திடீரென ஓர் அப்சசன் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமாகி நோய்மை அளவுக்குச் செல்லுமே தவிர, நமது ஆளுமையில் எப்போதும் இருக்கும் அப்சசன்கள் எப்போதும் நோய்மையை அடைவதில்லை.

எண்ணச் சுழற்சி நோயைப் பொறுத்த வரையில் அப்சசன் என்பது வெறும் எண்ணம் மட்டுமல்ல. எளிய புரிதலுக்காகவே நான் எண்ணங்களை மட்டும் உதாரணமாகச் சொல்லியிருக்கிறேன்.ஆனால்,அப்சசன் என்பது எண்ணமோ, பயமோ,சந்தேகமோ அல்லது காட்சியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஓ.சி.டி.யில் இருந்து மீள்வது எப்படி?

ஓ.சி.டி.நோயைப் பொறுத்தவரையில், சாதாரணமாக மனத்தில் தோன்றும் எண்ணம் அதீத முக்கியத்துவம் பெறுவதும், அதனால் உருவான பதற்றத்தைக் குறைக்க பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடும் ஆரோக்கியமற்ற நடவைக்கைகளே பிரதான பிரச்னை.

ஒரு சாதாரண எண்ணம்,அதீத முக்கியத்துவம் பெறுவதற்கும், பொருத்தமற்ற செயல்களில் திரும்பத் திரும்ப ஈடுபடுவதற்கும் அடிப்படையாக இருப்பது மனப்பதட்டமே!.

இந்த மனப்பதட்டமே ஓ.சி.டி.யின் அத்தனை நடவடிக்கைக் கோளாறுகளுக்கும் காரணம்.இந்தப் பதற்றத்தை சிகிச்சையளித்துச் சரி செய்தால் மட்டுமே ஓ.சி.டி.யின் அத்தனை பிரச்னைகளில் இருந்தும் வெளிவர முடியும்.

ஓ.சி.டி.க்கான சிகிச்சை முறையில், மாத்திரை மருந்துகள் கொடுப்பது, எண்ணங்களை நிறுத்துவதற்கு அல்ல,இந்தப் பதற்றத்தைக் குறைப்பதற்கே!. எட்டு வாரங்களில் இருந்து பன்னிரண்டு வாரங்கள் வரை இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளும்போது மனப்பதற்றம் முற்றிலுமாகக் குறைந்துவிடும். மனப்பதற்றம் இல்லாதபோது அப்சசிவ் எண்ணங்களுக்கு அதுவரை கொடுத்துவந்த முக்கியத்துவத்தைக் குறைக்கவேண்டும், அதேபோல, பொருத்தமற்ற செயல்களில் திரும்பத் திரும்ப ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வரவேண்டும்.

ஒரு கட்டத்தில் என்னவிதமான எண்ணம் வந்தாலும் அது உங்களுக்குப் பதற்றத்தை கொடுக்கவில்லையென்றாலோ,அதன் விளைவாக நீங்கள் எந்தப் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடவில்லையென்றாலோ நீங்கள் ஓ.சி.டி.யில் இருந்து முழுமையாக வெளிவந்துவிட்டீர்கள் என்று பொருள். இங்கு நன்றாகக் கவனிக்க வேண்டும், எண்ணங்கள் வந்தாலும் பதற்றமில்லாமல் இருப்பதுதான் மீண்டுவிட்டதற்கான அறிகுறி, எண்ணங்களே வராமல் இருப்பதல்ல.அந்த இலக்கை நோக்கிப் பயணப்படுவோம், ஓ.சி.டி.யில் இருந்து நிரந்தரமாக மீண்டு வருவோம்.