ரண்டு கைகளிலும் முழங்கை வரை சருமத்தில் அலர்ஜி உண்டாகி,அரிப்பு மற்றும் தடிப்புகளோடு என்னிடம் சிகிச்சை பெறுவதற்கு தங்கள் எட்டு வயது மகளை அழைத்து வந்திருந்தனர் ஒரு பெற்றோர். ஏற்கெனவே அவர்கள் ஒரு டாக்டரைப் பார்த்துவிட்டுத்தான் என்னிடம் வந்திருந்தனர். சோப் அலர்ஜியாகி இருக்கலாம் என்று அவர் சொன்னதால்,சோப்பை மாற்றியுள்ளனர். ஆனால்,அதிலும் பலனில்லை என்று சொன்னார்கள்.நான் அந்தச் சிறுமியைப் பரிசோதித்துவிட்டு, ‘உங்கள் வீட்டில் நாய் அல்லது பூனையை வளர்க்கிறீர்களா?’ என்று கேட்டேன்.அவர்களும் ‘ஆமாம், டாக்டர்! இப்போ ஒரு மாதமாகத்தான் ஒரு பூனையை வளர்க்கிறோம்.அதை என் மகள் தூக்கிக் கொஞ்சுவாள்’என்று கூறினார்கள்.

உங்கள் மகளின் அலர்ஜிக்குக் காரணம் பூனைதான்.அவளைப் பூனையிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அலர்ஜி சரியாகிவிடும். மருந்து ஒன்றும் வேண்டாம்!என்று சொன்னேன்.அவர்கள் என்னை நம்பவில்லை. வளர்ப்புப் பிராணிகளிடமிருந்தும் அலர்ஜி ஏற்படும் என்பதைப் புரியவைத்து அனுப்பினேன்.அடுத்த ஒரு வாரத்தில் குழந்தைக்கு அலர்ஜி சரியாகிவிட்டது,டாக்டர்! ரொம்ப நன்றி!என்று அவர்களிடமிருந்து போன் வந்தது.

அலர்ஜியை ஏற்படுத்தும் பிராணிகள்

நமது ஊர்களில் நாயும் பூனையும்தான் அதிக அளவில் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. என்றாலும்,சில நேரம் கோழி,கிளி,வாத்து,புறா, முயல்,அணில்,குதிரை, எலி,சுண்டெலி, பெருச்சாளி,கம்பளிப் பூச்சி போன்றவையும் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.மிக அரிதாக வீட்டில் காணப்படும் பல்லி, கரப்பான்பூச்சி,வளர்ப்பு மீன்கள் ஆகியவையும் அலர்ஜி ஏற்படுத்துவது உண்டு.

அலர்ஜி ஏற்படும் விதம்

வளர்ப்புப் பிராணிகளின் இறந்த செல்கள்,உதிர்ந்த ரோமம்,உமிழ்நீர்,சிறுநீர், மலக் கழிவுகள் ஆகியவை காற்றில் கலந்துவந்து நாசி மற்றும் சரும அலர்ஜியை ஏற்படுத்தும். பறவைகளின் இறகு,எச்சம்,குடல் புழுக்கள் போன்றவையும் அலர்ஜிக்குக் காரணமா கின்றன.பல்லி எச்சம், கரப்பான் பூச்சி மற்றும் பாச்சை பூச்சிகளின் கழிவுகள் அலர்ஜி ஆகும் பொருள்களில் முக்கியமானவை.

இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ளன. எனவே,காற்றில் கலந்துவந்து வீட்டில் பல இடங்களில் அமர்ந்து கொள்ளும்.முக்கியமாக, உடைகள்,ஜன்னல் திரைச்சீலைகள்,சோபா செட்டுகள்,படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள்,கழிவறை உபகரணங்கள், கைப்பிடிகள் போன்ற வற்றில் பல வாரங்களுக்கு வசிக்கும். அப்போது இவை நம் உடலுக்குள் சென்று அலர்ஜியை ஏற்படுத்தும்.

பூனை,நாய்,முயல்,கிளி, புறா,கோழி போன்ற வளர்ப்புப் பிராணி களைத் தொட்டுத் தூக்கும்போதும், அவற்றோடு விளையாடும் போதும் மேற்சொன்ன அலர்ஜிப் பொருள்கள் நேரடியாகவே உடலில் பட்டு அலர்ஜிக்கான அறிகுறிகளைக் காட்டும்.

இந்த அலர்ஜி பொருள்கள் உடலுக்குள் சென்றதும் ஆன்டிஜென்களாகச் செயல்படும்.அப்போது ரத்தத்தில் இம்யூனோகுளோபுலின்எனும் எதிர்ப் புரதம் உருவாகும்.இது ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும்.இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின்’,லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருள்களை வெளியேற்றும்.இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து, அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும்.அதன் விளைவால்தான் மூக்கு ஒழுகுவது,தும்மல்,சரும அரிப்பு,தடிப்பு,தோல் சிவந்து வீங்குவது போன்றவை ஏற்படுகின்றன.

என்னென்ன அறிகுறிகள்?

எதிர்ப் புரதம் உடலில் எந்த இடத்தில் வினை புரிகிறதோ அந்த இடத்தில் அலர்ஜிக்கான அறிகுறிகள் தோன்றும். இவை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கேகூட ஒருமுறை ஏற்படும் அறிகுறிகள் அடுத்தமுறை ஏற்பட வேண்டும் என்பதில்லை. அலர்ஜிப் பொருள் ஒரேமாதிரிதான் என்றாலும் அடுத்தமுறை வேறு அறிகுறிகள் தோன்றலாம்.

சுவாசப்பாதை அறிகுறிகள்:

தும்மல்,மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு,மூக்கு அரிப்பு,வறட்டு இருமல், ஆஸ்துமா,நெஞ்சு இறுக்கம்,சுவாசத்தில் வீசிங் சத்தம் கேட்பது.

கண்ணில் ஏற்படும் அறிகுறிகள்:

கண்ணில் எரிச்சல், கண்ணில் நீர் வடிவது, கண் சிவப்பது, இமைகள் வீங்குவது.

சருமத்தில் ஏற்படும் அறிகுறிகள்:

அரிப்பு,தடிப்புகள்,தோல் அழற்சி நோய், கருப்புநிறத் தடிப்புகள், கரப்பான் நோய்.

மற்றவை:

உறக்கமின்மை,சோர்வு, தொண்டை வலி.

என்ன சிகிச்சை?

அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை தரப்படும். ஆன்டிஹிஸ்டமின் டீகஞ்செஸ்டன்ட், ஸ்டீராய்டு மருந்துகள் கைகொடுக்கும்.மூக்கில் விடப்படும் ஸ்டீராய்டு ஸ்பிரே மருந்து உடனடி பலன் கொடுக்கும். அடிக்கடி அலர்ஜி ஆகிறவர்களுக்கு ‘இமுனோதெரபி’ சிகிச்சை தரப்படும். லுயூக்கோட்ரின் (Leukotriene modifiers) மாற்று மருந்துகளைத் தடுப்பு மருந்தாக டாக்டர் கூறும் கால அளவுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள
வேண்டும். அப்போதுதான் இந்த அலர்ஜியின் பாதிப்பு மீண்டும் வராமல் இருக்கும்.

தடுப்பது எப்படி?

  • வளர்ப்புப் பிராணிக்கு அலர்ஜி உள்ளவர்கள் எந்த ஒரு பிராணியையும் வீட்டில் வளர்க்காமல் இருப்பதே நல்லது. அப்படி வளர்க்க ஆசைப்பட்டால், வீட்டுக்கு வெளியில் தனியாக ஓர் அறையில் வளர்த்தால் அலர்ஜி பாதிப்பு குறையும்.
  • பூனை,நாய்,முயல்,கிளி போன்றவற்றைத் தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • தெருக்களிலிருந்து வீட்டுக்குத் தானாக வந்து செல்லும் பிராணிகளின் வருகையையும் தவிர்க்க வேண்டும்.
  • வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.வீட்டுச் சுவர்கள் மற்றும் சன்னல் கிரில்களையும் சுத்தப்படுத்த வேண்டும்.
  • படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை வாரம் ஒருமுறை சூடான தண்ணீரில் ஊறவைத்து அலசி சுத்தம் செய்ய
    வேண்டும்.
  • ஜன்னல் திரைச்சீலைகளை அடிக்கடி மாற்றுங்கள்.
  • ஹெப்பா ஃபில்ட்டர் (HEPA filter) பொருத்தப்பட்ட வாக்வம் கிளீனர்கள் மூலம் சோபாக்கள்,மிதியடிகள், படுக்கை விரிப்புகளைச் சுத்தப்படுத்தலாம்.
  • வீட்டில் ஏசி போட்டுக்கொண்டால், வளர்ப்புப் பிராணிகளின் எச்சங்கள் காற்றில் பரவுவது குறையும்.
  • படுக்கை அறையில் தட்டுமுட்டுச் சாமான்களை அடுக்கி வைக்காதீர்கள்.