–  டாக்டர் எம்.சங்கர்

சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல. ஆரேக்கியமான மனமும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனத்தைப் பெற்றிருப்பவர் தெளிவாகச் சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினர் ஆகியோரோடு நல்லுறவு பேணுபவராகவும் ஆத்ம திருப்தி உடையவராகவும் சமூகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவராகவும் விளங்க வேண்டும். மனம் சார்ந்த இந்தத் தன்மைகளையே மனநலம் என்று கூறலாம்.
மனமும் உடலும் தனித்தனியானது என்பது போல் நாம் பேசிக் கொண்டிருந்தாலும், உண்மையில் அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றதாகும். அவை தங்களுக்குள் நிறைய விஷயங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், நம்மைச் சுற்றியுள்ள உலகுக்கு அவை வெவ்வேறு முகங்களை காட்டுகின்றன. ஏதோ ஒரு காரணத்தால் இவை இரண்டில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், அதன் பாதிப்பு மற்றொன்றிலும் பிரதிபலிக்கும். மனமும் உடலும் தனித்தனியானது என்று நாம் கருதுவதால், அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திரக்க தேவையில்லை என்பது பொருளல்ல.
உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதைப் போல, மனதுக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதை மனநோய் என்று அழைக்கலாம். ஒருவரின் உணர்வுகள், எண்ணங்கள் அல்லது நடத்தை ஆகியவற்றைப் பாதித்து, அவருடைய வாழ்க்கையிலோ அல்லது அவருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையிலோ எதிர்மறை பாதிப்பை விளைவிக்கும் விதத்தில் ஒருவர் அனுபவிக்கும் நலமின்மையே மனநோய் ஆகும்.
மனநோய்க்கான காரணங்களையும் சிகிச்சைகளையும் புரிந்து கொள்வதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை மனநோய் உண்டாக்குகிறது. வன்செயல், மனப்போராட்டம், பொருத்தமற்ற பாலுறவுகள் போன்று ஒருவரின் நடத்தையில் ஏற்படும் கடும் பாதிப்புகளே மனநோய் என்று பெரும்பாலோர் கருதுகின்றனர். இவை அனைத்தும் கடும் மனநோயின் வெளிப்பாடுகள். ஆனால், மனநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையினர் சராசரி மனிதர்களைப் போலவே காணப்படுவர். மனச்சோர்வு, பதற்றநோய், பாலுறவு சார்ந்த பிரச்னைகள், போதைப்பழக்கம் ஆகியவையும் மனநலப் பிரச்னைகளில் அடங்கும்.
மனநோய் குறித்து நீங்கள் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?
ஏனென்றால் அவை நம் எல்லோரையும் பாதிக்கிறது. வளர்ந்தவர்களில் ஐந்தில் ஒருவர் வாழ்நாளில் ஒருமுறையாவது மனநலப் பிரச்னையை அனுபவிக்கிறார் என்று ஒரு மதிப்பீடு கணித்துள்ளது. இதுவே மனநலப் பிரச்னை எவ்வளவு பொதுவானது என்பதை சுட்டிக்காட்டுகிறது. யார் வேண்டுமானாலும் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்படலாம்.
ஏனென்றால் அவை முக்கியமான பொதுநலச் சுமையாகும். பொதுச் சுகாதார சேவை மையத்தை அணுகும் பெரியவர்களில் 40 சதவீதத்தினர் ஏதோ ஒரு மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதை உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுச் சுகாதார மையம் அல்லது சமூக சேவை மையத்தை அணுகுபவர்களில் பெரும்பாலோர், இன்னதென்று தெரியாத ஓர் உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சை பெறவே அங்கு செல்கிறார்கள். இதை ‘உளவழி உடல் பாதிப்பு’ (சைக்கோசோமாடிக்) அல்லது அதுபோன்ற ஒன்று என்று கூறலாம். இதில் பெரும்பாலோர், உண்மையில் மனநலப் பிரச்னைகயால் பாதிக்கப்பட்டவர்களே.
ஏனென்றால் இவை நம் செயல்பாடுகளை முடக்கி விடும். மனநலப் பிரச்னைகள் என்பது உடல் சார்ந்த பிரச்னைகள் போல கடுமையானவை அல்ல என்று ஒரு பொதுக்கருத்து நிலவினாலும், மனநலப் பிரச்னைகளும் மோசமான செயலிழப்பை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு. தற்கொலை மற்றும் விபத்தின் விளைவாக மரணத்தை ஏற்படுத்தலாம். சிலர் மனநலப் பிரச்னைகளாலும், உடல் நலப் பிரச்னைகளாலும் பாதிப்புக்கு உள்ளாகலாம். இவர்களின் மனநலப் பிரச்னைகள் காரணமாக உடல்நலப் பிரச்னைகள் மோசமாகும் வாய்ப்பும் உண்டு. உலகில் மனிதனை மோசமான செயலிழப்புக்கு உள்ளாக்கும், பத்தில் நான்கு காரணிகளாக, மனநோய் இடம் பெறுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஏனென்றால் மனநோய் உள்ளவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். மனநலப் பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறதென்பதை ஒப்புக்கொள்வதில்லை. சமூகமும் குடும்பமும் இவர்களை ஒதுக்கி வைக்கிறது. மருத்துவப் பணியாளர்களும் மனநலப் பிரச்னை உள்ளவர்களை கருணையோடு நடத்துவதில்லை.
ஏனென்றால் மனநோய்க்கு எளிமையான, அதிக செலவில்லாத முறையில் சிகிச்சை அளிக்கலாம். சில மனநோய்களை குணப்படுத்த முடியாது என்பது உண்மைதான். இதுபோலவே, புற்றுநோய், நீரிழிவு, ரத்த மிகை அழுத்தம், ருமடாய்டு மூட்டுவலி போன்ற உடல் சார்ந்த பிரச்னைகளையும் குணப்படுத்த முடியாது. இருப்பினும், உடல்நலக் கோளாறு உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்பது போலவே மனநோய் உள்ளவர்களின் வாழ்க்கை நிலையையும் மேம்படுத்த உதவலாம்.
&&&&&&&