
– டாக்டர்.ஹரீஷ்குமார், பிசியோதெரபிஸ்ட்
ஆண்களுக்கு இடுப்பு வலி வருவதற்கு முக்கிய காரணம் மிகவும் மோசமான சாலைகளில் அதிகளவில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது.
இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு இடுப்பு வலி வராமலிருப்பதற்கு சில யோசனைகள்….
1.சாலையின் மேடு பள்ளங்களில் வண்டி செல்லும்போது, அதிர்ச்சியில் ஓட்டுபவரின் உடலைப் பாதிக்காமல் தடுப்பதில் வண்டியில் உள்ள ஷாக் அப்ஸர்ப்களுக்கு முக்கியப் பங்குண்டு. போதிய அளவுக்கு ஆயில் இல்லாத காரணத்தால் பின் சக்கர ஷாக் அப்ஸர்ப் சரியாக இயங்கவில்லை என்றால் அது இடுப்பை நேரடியாக பாதிக்கும்.
2.யாராவது மெதுவாக வண்டி ஓட்டினால் அவர்களை மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள். அதிலும் முப்பதில் செல்பவர்களை முழு மூடர்கள் என்றே கருதுவதுண்டு. ஆனால், இப்படி மிதமான வேகத்தில் செல்வது நல்லது. முதுகெலும்புக்கு நேரக் கூடிய பல பாதிப்புகளைத் தவிர்க்கும்.
3.சிலர் தங்கள் வண்டியின் உயரத்தை அதிகப்படுத்திக் கொள்வார்கள். வேறு சிலர், அந்த வண்டிக்கும் பொருந்தாத பெரிய டயர்களைப் பொருத்துவார்கள். இன்னும் சிலர் ஹாண்டில்பாரின் நீளத்தை குறைத்துக் கொள்வார்கள். இப்படி ஸ்டைலுக்காக செய்யும் வேலைகள் எல்லாம் முதுகெலும்பின் பாதிப்பில் வந்து முடியும்.
4.வண்டி இருக்கை மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டால் அதனுடைய உறுதித்தன்மை குறைந்துவிடுகிறது. இதன் காரணமாகவும் முதுகெலும்பின் கீழ்புறம் அதிர்வுக்கு உள்ளாகலாம்.
5.பிரேக் ஷு சரியாக இல்லையென்றால் இடுப்பின் ஒரு பகுதி அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும்.
6.டயர்களில் போதுமான அளவு காற்று இல்லையென்றால் முதுகெலும்புக்கு அதிர்ச்சி பரவும்.
7.வளைந்து நெளிந்து, மொபைல் போனை காதில் வைத்து பேசிக்கொண்டு கூன் போடாமல் வண்டியை ஓட்ட வேண்டும்.
இந்த யோசனைகளைப் பின்பற்றினால் 90 சதவிகிதம் இடுப்பு வலி வராமல், மருந்து மாத்திரைக்கு செலவளிக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.

