– ஜி.ராஜமோகன்

வாழ்க்கையின்  ஒரு அங்கமாகவே மாறிவிட்டது மொபைல்போன். கக்கூசுக்குப் போனாலும் கைப்பேசியோடு தான் போகிறார்கள். அங்கு வைத்துவிட்டு அல்லது பேசிக் கொண்டோ.. பார்த்துக் கொண்டோ எப்படிக் கழுவுவார்கள் என்று தெரியவில்லை. இதில் போதாக்குறைக்கு லேப் டாப்பும் சேர்ந்து விட்டது.

விளையாடுவதாக இருந்தாலும் இணைய தளத்தில்தான் பெரும் பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல் நலம் மட்டுமல்ல; மனநலமும்தான்.

அதிக அளவு இணைய தளத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்பதும், மது, புகைபோல் ஓர் அடிமைப் பழக்கம்தான். ஒருவாரத்துக்கு 38.5 மணிநேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர், மனத்தளவில் அதற்கு அடிமையாக இருப்பார் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்டெர்நெட் அடிமைகள் வாழ்வின் மகிழ்ச்சியை தொலைத்து நிற்கின்றனர். சாப்பாட்டை விட இணையதளமே அவர்களுக்கு முக்கியம். இணையதளத்துக்கு எதனால்அடிமையாகிறோம், எவ்வாறு அடிமையாகிறோம், எதற்காகஅடிமையாகிறோம், இணையதளத்துக்கு அடிமையாகி உள்ளதை எவ்வாறு அறிந்து கொள்வது?

குறிப்பாக எந்தெந்த விஷயத்துக்காக இணைய அடிமையாகிறோம் என்பதைக் குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத்துறையினர் வெளியிட்டுள்ள தொகுப்பை பார்ப்போம்..

பாதிப்புகள் என்னென்ன?

  • நேரத்தை கையாளுவதில் சிரமம் உண்டாகும்.
  • பொறுப்புகள் அனைத்தும் அரை குறையாக நிற்கும்.
  • குடும்பத்துடன் ஆக்கப்பூர்வமாகச் செலவு செய்ய நேரம் இருக்காது.
  • உறவுகள், கல்வி, வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடுதல்.
  • மன அழுத்தம், பதற்றம்.
  • தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
  • தற்கொலை எண்ணங்கள்
  • மதுவுக்கும், பிறபோதைக்கும் அடிமையாதல்.
  • தூக்கமின்மை, தேவையற்ற எண்ணங்கள்.

எதற்காக அடிமையாகிறோம்?

  • தகவல்களை அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.
  • கட்டுப்பாடில்லாமல் இணையதள விளையாட்டுகளைக் கணினி அல்லது செல்போனில் விளையாடுவதற்காக.
  • இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக.
  • இணைய வழி ஷாப்பிங் மூலமாகவித விதமான பொருள்களை வாங்குவதற்காக.
  • முகநூல், டிவிட்டர் மூலம் கிடைத்த இணைய தள நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடுவதற்காக.
  • பாலின இன்பக் காட்சிகளைப் பார்ப்பதற்காக.

எளிதில்பாதிக்கப்படக்கூடியவர்கள்யார்?

  • கூச்சசு பாவம் உள்ளவர்கள், தங்கள் தாழ்வு மனப்பான்மை மனக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
  • பெற்றோர் குடும்பத்தினரின் கவனிப்பு இல்லாதவர்கள்.
  • தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள்.
  • தனிமை விரும்பிகள்.

எப்படி மீள்வது? எப்படி மீட்பது?

  • மது, போதையில் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பது போல் இணையதள அடிமைகளாக சிக்கியவர்களையும் மீட்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உதவ வேண்டும்.
  • ஒருவர் இணையதளத்தில் செலவிடும் தினசரி முறையைக்கண்டுபிடித்து, அதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
  • தொடர்புடையவரின் அன்றாடச் செயல்பாட்டில் அவரது சிந்தனையைக் கவரும் வகையில் உள்ள மாற்றுப் பழக்கங்களைக் கண்டறிந்து பழக்க வேண்டும்.
  • இணையதள அடிமைப் பழக்கத்தால் கைவிடப்பட்ட அவரது வாடிக்கையான பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டு அவருக்கு அதனை மீண்டும் தொடங்க வலியுறுத்துவது.
  • கவனிப்பு அல்லது மேற்பார்வை இல்லாதவர்களைச் சுய உதவி குழுக்களில் சேர்ப்பது.
  • குடும்பம் சார்ந்த உறவு முறை பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது. மனநிலைப் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகுவது.
  • நினைவூட்டல் அட்டைகள், இதனால் உண்டாகும் நன்மை தீமைகளை, தன்கைப் பட ஒரு அட்டையில் எழுதிவைத்துக்கொண்டு, அதனை அடிக்கடி படித்து நினைவூட்டிக்கொள்வது.

இணையத்தால் பல்வேறு நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு.

தற்போதைய காலகட்டத்தில் பல வேலைகளுக்காக இணைய தளத்தைப் பயன்படுத்தித்தான்ஆக வேண்டும். மோடி அரசு வந்த பிறகு எல்லாமே ஆன்லைனில் தான் என்றாகி விட்டது. அதனால் இன்டர்நெட்டை தவிர்க்க முடியாது. ஆனால், அதை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.