டாக்டர் டி.காமராஜ், MD, பாலியல் நிபுணர்.

மீபகாலமாக இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்பது அதிகரித்து வருகிறது‌.சமூக அக்கறை உள்ள எவருக்கும் இந்த போக்கு ஆழ்ந்த கவலையை, அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

புது மணத் தம்பதியர் மட்டும் அல்ல எல்லா தம்பதியரும் வாழ்ந்து முடித்த பிறகு சொர்க்கத்துக்கு போகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். உண்மை என்னவென்றால் வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாம், ரசிக்கலாம், கொண்டாடலாம்.

திருமணமான புதிதில் பெற்றோரை, சுற்றத்தாரை பிரிவது பெரும் வேதனையாக சில பெண்களுக்கு இருக்கலாம்.இதனை வெளியே சொன்னால் கேலி, கிண்டல் செய்வார்கள் என்று மனதுக்குள்ளேயே போட்டு பூட்டிவைப்பார்கள். இதுபோலவே புகுந்த வீட்டு சொந்தங்களைப் பார்த்து பெண்ணுக்கு பயம் ஏற்படலாம்.புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறலாம். இதுபோன்ற மனக் குழப்பங்களை வெளியே பேசாமல் மனசுக்குள் பூட்டிவைக்கும்போது மன அழுத்தம் ஏற்படலாம். இந்தச் சூழலில் சிக்கிய பெண்களுக்கு இல்லற வாழ்வில் ஆர்வம் இருப்பதில்லை. அதனால் குழந்தைப் பேறு தள்ளிப்போகும்.

தனக்கு வாய்க்கப்பெற்ற லைஃப் பார்ட்னரை நன்றாக புரிந்து கொண்டு, இல்லற வாழ்வில் ஈடுபடவேண்டியது ஆண், பெண் இருவருக்குமான பாலபாடம்.ஆனால் சந்தேக மனநிலை, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம், கற்பிதமான சில எண்ணங்கள் போன்றவற்றை மனதில்போட்டு சொர்க்கமாக இருக்கவேண்டிய குடும்ப வாழ்க்கையை நரகமாக மாற்றிவிடுவார்கள். ஒருவர் மீது ஒருவர் எல்லையற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டால்தான், அந்த இல்லற வாழ்வு இனிமையுடன் இருக்கும். திருமணமான சில நாட்களிலேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது இயலாத காரியம் என்றாலும் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை. ஒருவர் மீது ஒருவர் பரிவும் அன்பும் செலுத்திக்கொண்டே இருக்கவேண்டும். ஒருவருக்காக ஒருவர் வாழவேண்டும். அப்போதுதான் தேவையற்ற பயம், குழப்பம் இல்லாத மனநிலை அமையும். இந்த மன நிலைதான் நல்ல இல்லறத்துக்கும் குழந்தைப் பேறுக்கும் அடிப்படையாகத் திகழும்.

படுக்கையறையில் பெண்ணிடம் முரட்டுத்தனத்தைக் காட்டுவதும் பராக்கிரமத்தைக் காட்டுவதும்தான் ஆணுக்குரிய தகுதி என பலரும் நினைக்கிறார்கள். அதனால் தங்களது முழு பலத்தையும் பெண்ணின் மீது பிரயோகிக்கிறார்கள். இது கண்டிக்கவேண்டிய அணுகுமுறை ஆகும். இந்த நிலை நீடிக்கும்பட்சத்தில் ஆணையும் படுக்கையறையையும் கண்டால் பெண்ணுக்குப் பயம் வருமே தவிர காமமும் காதலும் வராது.

அதேபோல் படுக்கையறையில் ஆணும் பெண்ணும் சரிசமமாக இருத்தல் வேண்டும்.அங்கே பெண்ணை அடிமை போல் நடத்தக்கூடாது. அவளது ஆசைக்கும் ஆர்வத்துக்கும் மதிப்பு தரவேண்டும். தன்னுடைய இன்பம் மட்டும் முக்கியம் என ஆண் நினைத்தால், அந்தப் படுக்கையறை தோல்வியைத்தான் தரும்.இருவரும் ஒருவருக்கொருவர் இன்பம் தருவதிலும் பெறுவதிலும் கூச்சப்படுவதற்கோ, வெட்கப்படுவதற்கோ அவசியம் இல்லை.

சம்மதம் இல்லாமல் ஒருவரை மன்மத விளையாட்டுகளில் நுழைக்ககூடாது. அதேபோல் நீலப்படங்களல பாத்துவிட்டு அதுபோல் செயல்பட வேண்டுமென துன்புறுத்தக்கூடாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் படுக்கையறை என்பது சந்தோஷம் தருவதாக மட்டுமே இருத்தல் வேண்டும். பயம், அச்சம் தருவதாக இருந்தால் அங்கே இல்லறம் தோல்வியைத்தான் தழுவும்.தோல்வியைத் தழுவிய இல்லறம் குழந்தைப் பேறின்மைக்கும் காரணமாகிவிடும்.

பார்ட்டனரோடு இருக்கும் நேரங்களில் செல்போன், லேப்டாப் பயன்படுத்தி கவனத்தை சிதறடிக்க வேண்டாம்.முழு மனதோடு தம்பதியர் ஒருவரையொருவர் காதலித்தால் சொர்க்கம் அருகில் இருக்கும்.வாழ்க்கை வசந்தமாக, உற்சாகமாக, என்னாளும் திருவிழாவாக மாறும்.இந்த காதலை கொண்டாட கொண்டாட வற்றாத ஜீவ நதியாக ஓடிக்கொண்டே இருக்கும்.