
உணர்வுகளை கையாளத் தெரியுமா?
(எமோஷ்னல் இன்டலிஜென்ஸ்-Emotional intelligence)
டாக்டர் ஆர்.பரமேஸ்வரன்,உளவியல் நிபுணர்.
யார் அறிவாளி?யார் புத்திசாலி? திறமைசாலிக்கு என்ன தகுதி?உலக வரலாறு,அறிவியல்,பொருளாதாரம்,
அரசியல்,நாட்டு நடப்பு என அத்தனையும் தெரிந்தவர்களை அறிவாளி என்று சொல்வது வழக்கம். படித்து பட்டம் பெற்று,ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் கூட உணர்ச்சிகளை சரிவர நிர்வகிக்க முடியாமல் துவண்டு போவதும் உண்டு.
ஒருவர் வெற்றியாளராக இருக்க… அழகான முகமோ,வலிமையான உடலோ தேவையில்லை.திறமை மிக்க மனமும்,செயல்படும் திறனும் இருந்தால் போதும்.வெற்றி நிச்சயம்!
நமது உணர்ச்சிகளை,உணர்வுகளை நிர்வகிக்கவும்,கட்டுப்படுத்தவும் தெரிந்திருந்தால் அதுதான் உண்மையான வாழ்வியல் கல்வி… இந்த திறமையை எமோஷ்னல் இன்டெலிஜென்ஸ் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நமது மனநிலை பெரும்பாலான நேரங்களில் நிதானமான நிலையிலே இருக்கும்.சில உணர்வுப்பூர்வமான சந்தர்ப்பங்களில் இந்த நிதானமான மனநிலை மாறி சட்டென உணர்ச்சிவசப்பட்ட மனநிலை தோன்றிவிடும்.மனம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது நமது தர்க்கப்பூர்வமான அறிவு பெரிதாக வேலை செய்யாது.
அந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாம் பார்க்கும்,கேட்கும், சிந்திக்கும் அனைத்துமே உணர்ச்சிவசப்பட்டவையாகவே இருக்கும்.அந்த நேரத்தில் நாம் எடுக்கும் முடிவும் தவறானதாகவே இருக்க வாய்ப்பு அதிகம். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நமது நடவடிக்கைகளுமே கூட நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் போகலாம். சில நேரங்களில் அந்த நடவடிக்கைகள் நம்மையோ மற்றவர்களையோ பாதிக்கவும் செயலாம்.
இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நமது எண்ணங்களையும், பார்வையையும், நடவடிக்கைகளையும் கட்டுக்குள்வைத்து தர்க்க ரீதியான அறிவைப் பயன்படுத்தி நிதானத்துடன் இருப்பதே எமோஷ்னல் இண்டலிஜென்ஸ். உணர்வைக் கையாளுதல் என்பது தனிக்கலை.நமது உணர்வை மட்டுமல்ல, மற்றவர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடந்துகொள்வதையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதே மேம்பட்ட எமோஷ்னல் இண்டலிஜென்ஸ்.
இந்த திறனை எப்படி வளர்த்துக் கொள்வது?
1. தன்னைத் தானே அறிதல்.(Self Awareness)
2. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன்.(Self Regulation)
3. ஊக்கத்துடன் இருப்பது.(Motivation)
4. பிறரது உணர்வுகளை அறிதல். (Empathy)
5. பிறகு உணர்வுகளை கையாளும் திறன்.(Social Skills)
அன்றாட வாழ்வில் பல்வேறு நபர்களை சந்திக்கிறோம்… புதுப் புது வேலைகளை செய்கிறோம்.மகிழ்ச்சியும்,துன்பமும், நல்லவர்களும்,கெட்டவர்களும், நல்வாய்ப்புகளும்,மோசமான சூழல்களும் …என எல்லாமே எதிரில் வந்து நிற்கும்போது நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம்? எந்த விதத்தில் அணுகுகிறோம்? என்பதை பொறுத்து நமது வாழ்வின் வெற்றியும் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சூழ்நிலையிலும் எப்படி நாம் நடந்து கொள்கிறோம்? எந்த விதத்தில் எதிர்வினை ஆற்றுகிறோம்? என்பதைப் பொறுத்தே எதிர்கால வாழ்க்கை அமையும்.
உலக அளவில் இந்த எமோஷ்னல் இன்டலிஜென்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் வசதி மிக்கவர்களாக, சாதனையாளர்களாக, மகிழ்ச்சி கொண்டவர்களாக,ஆளுமை மிக்க தலைவர்களாக,தொழில் சாம்ராஜ்யத்தை வழி நடத்துபவர்களாக,புதிய வரலாறு படைப்பவர்களாக,மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்கிறார்கள்.
இந்த வழி முறைகளை எல்லோரும் பின்பற்றி சாதிக்க வாழ்த்துகள்!

