காவேரி மருத்துவமனை குழுமம், ‘காவேரி 3X சென்னை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டம் மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், விரிவான அறுவை சிகிச்சை நிபுணத்துவம் மற்றும் அதிக திறன் கொண்ட பல்துறை மருத்துவக் குழுக்களை சென்னையில் உள்ள அதன் மூன்று மருத்துவமனைகளிலும் சீரான உயர்தர சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ் ஒன்றிணைக்கிறது.

இந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டங்கள்,உலகின் மிக மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றான 4-ஆம் தலைமுறை
டாவின்சி ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சாதனத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.இத்திட்டத்தின் கீழ் குடலியல், புற்றுநோயியல், சிறுநீர்பாதையியல், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல், மற்றும் சிறுநீரக மருத்துவவியல் உள்ளிட்ட பல மருத்துவத் துறைகளில் ரோபோட்டிக் சாதன உதவியுடன் சிகிச்சையளிக்கப் படுகிறது.

குடல் இரைப்பை புற்றுநோய்கள், பெருங்குடல் புற்றுநோய்கள், மகளிர் நோயியல் புற்றுநோய்கள், மார்பகப் புற்றுநோய்கள், சிறுநீரகப் புற்றுநோய்கள், ஃபைப்ராய்டு அறுவைசிகிச்சை, கர்ப்பப்பை நீக்கம், கருப்பைஉள்வரிச்சவ்வு சிகிச்சை, கருப்பை சார்ந்த செயல்முறைகள், புரோஸ்டேட் அறுவைசிகிச்சை, சிறுநீரக அறுவைசிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீர்ப்பை சிகிச்சைகள், மறுசீரமைப்பு சிறுநீரக அறுவைசிகிச்சைகள்,தைராய்டு சுரப்பி அகற்றம், குடலிறக்கத்திற்கான சிகிச்சை, பித்தப்பை அறுவைசிகிச்சை, பெருங்குடல் அறுவைசிகிச்சை மற்றும் மேற்புற இரைப்பை குடலியல் சிகிச்சைகள் போன்ற பல்வேறு சிக்கலான மருத்துவ நிலைகளுக்கு ரோபோட்டிக் அறுவைசிகிச்சையில் உள்ள தனது நிபுணத்துவத்தை காவேரி மருத்துவமனை பயன்படுத்தவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர்.அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “‘காவேரி 3X சென்னை’ திட்டத்தின் மூலம், மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை நிபுணத்துவம் மற்றும் சீரான உயர்தர சிகிச்சை ஆகியவற்றை சென்னையில் உள்ள எங்களது மூன்று மருத்துவமனைகளிலும் ஒன்றிணைத்து, ஒரு முழுமையான ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்கி செயல்படுத்துகிறோம்.காவேரி மருத்துவமனைக்கே உரித்தான உயர்தரம் மற்றும் நிலைத்தன்மையுடன், நோயாளிகள் இனி தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் எங்களது மூன்று மருத்துவமனைகளில் ஏதாவதொன்றில் சிறப்பான பலன்களை வழங்கும் விரிவான ரோபோட்டிக் சிகிச்சையைப் பெறலாம்”என்றார்.

ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவருக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது.உடல் உறுப்புகளை 10 மடங்கு பெரிதாக பார்க்கும் வசதியும் உள்ளது.ரத்த இழப்பு மிகவும் குறைவு.சிகிச்சை பெறுகிறவர் விரைவாக நலம் பெறவும்,தனது வழக்கமான பணிகளை விரைவாக தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற புதிய வசதிகள் கூடுதல் செலவு பிடிக்கக் கூடியதாக இருந்தாலும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த கட்டணங்களை ஏற்றுக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் உலக தரத்திலான சிகிச்சையை வழங்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

-பவித்ரன், ஹெல்த் அண்ட் பியூட்டி.