
– கோ.ஆனந்த சிவா
மன்னராட்சிக் காலத்தில் நாட்டை ஆளும் அரசனின் முக்கியமான கடமைகளில் ஒன்று, அவன் வீரனாக இருக்கவேண்டுமென்பது. தன் நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றக் கூடிய தகுதியுள்ள ஒரு மாவீரன்தான் ஒரு நாட்டுக்கு மன்னனாக இருந்தான்.மக்களும் அதைத்தான் விரும்பினார்கள்.
ஒரு சிறந்த மன்னன், மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மந்திரிகளும் மற்றவர்களும் சொல்வதை வைத்து மட்டும் நம்பாமல், இரவு நேரங்களில் மாறுவேடமிட்டு நகர்வலம் சென்று நேரில் பார்த்திருக்கிறான். மன்னன் தனியாக நகர்வலம் செல்கையில் ஆபத்துகள் அதிகமிருக்கும். ஆனாலும், மக்களின் மீதுள்ள அக்கறையினால் அரசன் நகர்வலம் செல்லத் தயங்கியதில்லை என்பதையெல்லாம் படித்தும், திரைப்படங்களில் பார்த்தும் தெரிந்து கொள்கிறோம்.
நாட்டை ஆளும் மன்னனுக்கான தகுதிகள், பொறுப்புகள், கடமைகள், கட்டுப்பாடுகள் என்னென்ன என்கிற கருதுகோள்கள் இருந்தன. மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்கள் மீதும் அன்பு கொண்டிருந்த சித்தர்களும் ஞானிகளும் இலக்கியவாதிகளும் அரசனுக்குரிய பொறுப்புகளென ஏராளமான கருத்துகளை வகுத்திருந்தார்கள்.
ஒரு இளவரசன் அவற்றையெல்லாம் தன்னுடைய சிறுவயது முதலே கற்றறிந்து,தன் உள்ளத்தில் பதியவைத்து, நாட்டை ஆள்வதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான். அதற்குரிய காலம் வரும்பொழுது, மூத்தோரின் அறிவுரைப்படி, அறிஞர்களின் வழிகாட்டுதல்படி நாட்டை ஆளத் தொடங்கியவனே, வரலாற்றில் சிறந்த மன்னனாக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்.
மன்னராட்சி
மறைந்து மக்களாட்சி நடக்கிறது. மக்களாட்சியில் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்,மக்களை ஆட்சி செய்யலாம், அதுதான் ஜனநாயகம்.ஆனால் அதற்காக,மக்கள் மீதான அக்கறையோ, சிந்தனையோ, மக்களைப் பற்றிய புரிதலோ இல்லாத ஒருவர் பணமும், புகழும் இருக்கிறது என்பதற்காக அரசியலுக்கு வருவது ஆபத்தானது. மக்களை ஆள நினைக்கும் அவருக்கு,மக்களும் மீடியாக்களும் ஆதரவு அளிப்பதும், அவர் வரவை நியாயப்படுத்துவதும் அறிவியலுக்கும் உளவியலுக்கும் முற்றிலும் புறம்பானது. அறிவியலற்ற சிந்தனை ஒருபோதும் நாட்டுக்கோ, மக்களுக்கோ நன்மை அளிக்காது.
மக்களை ஆள நினைப்பவர்கள் அனைத்து மக்களிடமும் அன்பு, அக்கறை,கருணை உள்ளத்தோடு அனைவரையும் ஒருசேர அரவணைக்கும் மனிதராயிருக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் அவல வாழ்வை,ஆள நினைப்பவர் அறிந்திருக்க வேண்டும். வறுமையில் வாடும் மக்களைக் கண்டு மனம் கசிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தன்னால் இயன்றதைச் செய்திருக்க வேண்டும்.
ஒரு மனிதனுக்கு, ஒரு நாள் திடீர் ஞானோதயம் உண்டாகி – அதுவரை மக்களுக்காக எதையுமே செய்யாமல்,மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் சொகுசாக வாழ்ந்துவிட்டு – நான் மக்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வருவது அபத்தத்தின் உச்சம். ஆபத்தின் அறிகுறி.
ஒரு மனிதன் ஒரே நாளில் திடீரென தீயவனாக மாறிவிட முடியாது.ஒரே நாளில் நல்லவனாகவும் ஆகிவிட முடியாது. திடீரென கராத்தே போட்டியில் கலந்துகொண்டு சண்டையிட முடியாது.திடீரென ஒரே நாளில் நடனமாடிவிட முடியாது.தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த ஒருவன் திடீரென ஃப்ரெஞ்ச், ஜாப்பனீஸ்,சைனீஸ், கொரியன் என எல்லா மொழிகளிலுமோ அல்லது ஏதோ ஒன்றையோ பேசிவிட முடியாது. ஒரு மனிதனின் மூளைக்குள் என்ன மொழி பதிவாகியிருக்கிறதோ அதில் மட்டுமே ஒருவனால் பேசமுடியும்.
ஒருவன் தன்னிடம் ஆயிரக்கணக்கான கோடி பணம் இருக்கிறது,பெரும் புகழ் இருக்கிறது, மக்கள் ஆதரவும் கொஞ்சம் இருக்கிறது என்பதற்காக ஒருநாள் திடீரென, “நான் மக்களுக்காக உழைக்கப் போகிறேன்… மக்களுக்கு நன்மை செய்யப் போகிறேன்… மக்களுக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்யப் போகிறேன்..” என்று சொன்னால், அறிவியல்படி அவனை மனநல சிகிச்சைக்குத்தான் ஆட்படுத்த வேண்டுமே தவிர, அவனிடம் ஆளும் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது.
தான் கற்றறியாத மொழியில் திடீரென ஒருவனால் எப்படிப் பேசமுடியாதோ, எப்படி ஒரே நாளில் கராத்தே சண்டை போட முடியாதோ, அப்படித்தான் ஒரு மனிதனால் ஒரே நாளில் நல்லவனாக மாறி மக்களுக்கு நன்மை செய்யவும் முடியாது.அப்படி ஒரு சிஸ்டம் நம் மூளைக்குள் இல்லை.
இதுதான் அறிவியல்… இதுதான் உளவியல்… இதைப் புரிந்துகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு பணம், புகழ், செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக அரசியலுக்கு வரும் எவர் ஒருவரையும் ஆதரித்தால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.பின்னர் தமிழகத்தை மீட்டுக்கொண்டுவர மிக நீண்டகாலம் ஆகும். அல்லது பீகாராகவோ, உத்தரப்பிரதேசமாகவோ தமிழ்நாடு மாறலாம்.
இந்த அறிவியலை, அரசியல் தற்குறிகளின் உளவியல் சிக்கலைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் நாம் நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்கின்ற நன்மையாக இருக்கும்..! அது நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட!

