
டாக்டர் கு.கணேசன் பொதுநல மருத்துவர்
மருத்துவர்களுக்கு நோயைக் கணிக்க எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேனுக்கு அடுத்தபடியாக, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்தான் (MRI Scan) பெரிதும் உதவுகிறது. தற்போதுள்ள ஸ்கேன் பரிசோதனைகளில் மிகச் சிறந்ததும் இதுதான். பல நோய்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் கணிப்பதில் இது முதலிடம் பெற்றுள்ளது.
‘மேக்னடிக் ரெசொனென்ஸ் இமேஜிங்’ (Magnetic Resonance Imaging) என்பதன் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துச் சுருக்கம்தான் எம். ஆர்.ஐ.ஸ்கேன். எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் கருவிகள்போல் இது எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளைப் படம் பிடிப்பதில்லை. மாறாக, உடலில் ஒரு காந்தப் புலத்தை உருவாக்கி, ரேடியோ கதிர்களைப் பயன்படுத்தி, ஒரு கணினியின் உதவியுடன் உறுப்புகளைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது.

உடலில் இருக்கிறது காந்தம்!
உடல் செல்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலங்களால் ஆனவை. ஹைட்ரஜன் மூலங்களின் மத்தியப் பகுதியில் புரோட்டான்கள்
உள்ளன. இவை சிறு காந்தத்துகள்கள்போல் செயல்படும். சாதாரணமாக, புரோட்டான்கள் திசுக்களில் வெவ்வேறு திசைகளில் இருக்கும். இவை வெளிக்காந்தப்புலத்தில் இரு ஆற்றல் நிலைகளை உருவாக்கும். அப்பொழுது ரேடியோ கதிர்களைச் செலுத்தினால், ஒத்திசைவு ஏற்படும். புரோட்டான்கள் ரேடியோ கதிர்களில் உள்ள ஆற்றலைக் கிரகித்துப் பின்னர் வெளிவிடும். இவ்வாறு வெளியிடப்படும் ஆற்றல் திசுக்களின் சூழல், மூலக்கூறுத் தன்மை, வேதித் தன்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும். இந்த அறிவியலை அடிப்படையாக வைத்து எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செயல்படுகிறது.
யாருக்கு விலக்கு?
பொதுவாக இந்தப் பரிசோதனையைக் கீழ்க்கண்டோருக்கு மேற்கொள்ள முடியாது:
- பேஸ்மேக்கர், ஐ.சி.டி. எனும் டிஃபிபிரிலேட்டர், காக்ளியர் இம்பிளான்ட் நரம்புத் தூண்டல் கருவி போன்றவற்றை உடலில் பதிக்கப்பெற்றவர்கள்.
- பலத்த எலும்பு முறிவு மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கான சிகிச்சையின்போது பிளேட், ஸ்குரூ, வயர் போன்ற உலோகப் பொருட்கள் பொருத்தப்பட்டவர்கள்.
- உலோகத்தாலான செயற்கை இதய வால்வைப் பொருத்திக் கொண்டவர்கள்
- பெருந்தமனி வீக்கத்துக்கு ‘கிளிப்’ பொருத்திக் கொண்டவர்கள்.
- தங்கப்பல் பதிக்கப் பெற்றவர்கள்.
- முழங்காலில் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் இடுப்பு சிகிச்சையை மேற்கொண்டவர்கள்.
- ‘காப்பர்-டி’ எனும் கர்ப்பத் தடை கருவி பொருத்திக்கொண்டவர்கள்.
- இவை தவிர, வேறு ஏதேனும் சிகிச்சைக்காக உலோகத்தாலான பொருட்களை உடலில் பதிக்கப்பெற்றவர்கள்.
என்ன காரணம்? உடலில் காந்தப்புலத்தை ஏற்படுத்தி இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதால், இரும்பு கலந்த உலோகங்கள் காந்தப்புலத்தை நோக்கி இழுக்கப்படும். இது அவர்களுக்கு ஆபத்தாக அமையும். இதைத் தவிர்க்கவே மேற்சொன்னவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
ஓர் ஆறுதல், இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்குப் பதிலாக எக்ஸ்ரே அல்லது சி.டி. ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்பதுதான்.
முக்கியக் குறிப்பு
- கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு இதை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கூடுதல் நன்மை என்ன?
*இதில் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்துவதில்லை. ஆகவே, கதிர்வீச்சு ஆபத்து துளியும் இல்லை.
எக்ஸ்ரே மற்றும் சி.டி. ஸ்கேன் படங்களைவிட மிகத் தெளிவாக எலும்பு. மூட்டு,தசை, தசை நாண்கள், மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்டும்.
எந்தெந்த நோய்களைக் கண்டுபிடிக்கலாம்?
மூளை தொடர்பான எல்லா நோய்களுக்கும் காரணம் தெரிந்து கொள்வதற்கு, மூளையை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது வழக்கம்.
மூளையில் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கட்டிகளை ஆரம்பத்திலேயே அறிய, இது உதவுகிறது.
மூளையில் அடிபடுவதால் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்த ஓட்டத் தடை போன்றவற்றையும் இதில் காண முடியும்.
வலிப்பு நோய், நாட்பட்ட தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றுக்குக் காரணத்தை அறிய இது உதவும்.
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், கணையம் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தால், இதில் தெரிந்துவிடும்.
எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது நல்லது.
முதுகெலும்பின் நிலைமை மற்றும் தண்டுவடத்தின் தன்மை அறிந்து, கழுத்துவலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற முடியும்.
எலும்புகளை இணைக்கிற தசைநாண்கள் (Ligament) எம்.ஆர்.ஐ. ஸ்கேனில்தான் தெரியும். எனவே, விபத்துகளில் ஏற்படும் எலும்புத் தசை நோய்களைக் கண்டறிய இதுதான் சிறந்த பரிசோதனை.
குறிப்பிட்ட சில இதய நோய்களைக் கணிக்கவும் இது உதவும்.
காது, மூக்கு, தொண்டை தொடர்பான எல்லா நோய்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
உடலில் உள்ள மென்திசுக்களை ஆராய இதுவே பெரிதும் உதவுகிறது. ரத்தக்குழாய்களில் உண்டாகிற வீக்கம், பிறவி அமைப்புக் கோளாறுகள் போன்ற பல நோய்களைத் தெளிவாகக் கணிக்கலாம்.
பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பைக் கோளாறுகளைத் தெளிவாக அறியலாம். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே அறிய இது உதவும்.
ஆண்களுக்குப் புராஸ்டேட் வீக்கம் / புற்றுநோய் போன்றவற்றைக் கணிக்க இது உதவுகிறது.
பொதுவாக, ஒரு நோயைக் கணிப்பதற்கும், அதற்கான சிகிச்சையை முடிவு செய்வதற்கும், சிகிச்சைக்குப் பிறகு நோய் குணமாகிறதா என்ற விவரத்தைத் தெரிந்துகொள்வதற்கும் இது பெரிதும் பயன்படுகிறது.

