
-டாக்டர்.எஸ். ராமகிருஷ்ணன்
தூக்கம் தொடர்பாக பலருக்கும் உள்ள மிக முக்கியமான கேள்வி, தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? என்பதுதான்.
ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது என்பது இயல்பான அளவு. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் பேர் இந்த அளவில்தான் தூங்குகிறார்கள். ஆனால், எவ்வளவு நேரம் தூங்கலாம் என்பதற்கு ஒரு பொதுவான அளவைச் சொல்ல முடியாது. அந்த அளவு ஒருவருக்கொருவர் வேறுபடும். ஒரு சிலருக்கு ஐந்து மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு ஒன்பது மணி நேரத் தூக்கம் தேவைப்படும்.
உங்களுக்குத் தேவையான அளவு எது என்பதை இரண்டு, மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நீங்களே கூட கண்டுபிடிக்கலாம்.
தூங்கி எழுந்தவுடன் புத்துணர்ச்சியாக இருக்கிறதா? அடுத்த நாள் வேலைகளை மனச்சோர்வோ, உடல் சோர்வோ இல்லாமல் வேகமாகச் செய்ய முடிகிறதா? செய்யும்
வேலையில் கவனமாக இருக்க முடிகிறதா? தெளிவாக யோசிக்க முடிகிறதா? எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடையாமல் இருக்கிறீர்களா?
அனைத்துக் கேள்விகளுக்கும் ‘ஆமாம்’ என்பதுதான் உங்களது பதில் என்றால், முந்தைய தினம் எவ்வளவு நேரம் தூங்கினீர்களோ அதுதான் உங்களுக்குத் தேவையான அளவு.
தூங்கும் அளவு மட்டுமல்ல, தூங்கும் நேரமும் ஒருவருக் கொருவர் மாறுபடும். சிலர், நடு இரவு பன்னிரெண்டு மணிக்குத் தூங்கி, காலையில் எட்டு மணிக்குத்தான் எழுந்து கொள்வார்கள். இரவு எட்டு மணிக்கே தூங்கி, விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் விழித்துக்கொள்பவர்களும் உண்டு.
இந்த வித்தியாசங்கள் பற்றிப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. உயரம், எடை, கண்ணின் நிறம், முடியின் நிறம் போன்றவை ஒருவருக்கொருவர் வேறுபடுவதுபோல், தூக்கத் திலும் வேறுபாடுகள் இருப்பது இயல்பான விஷயம்தான்.
தூக்கத்தைப் பொருத்தவரை ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தூக்கத்தின் கால அளவு (quantity) மட்டுமல்ல, தூக்கத்தின் தரமும் (quality) முக்கியம்.
எல்லோருக்கும் சமீபகாலமாக தூங்கும் நேரம் குறைந்து வருகிறது.அதற்கு மொபைல் போன் தான் முக்கிய காரணம்.
உடலுக்கு ஓய்வு தேவை.மனதுக்கு அமைதி தேவை.இந்த இரண்டையும் தூக்கத்தில் பெறலாம்.

