
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.
உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை,
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்.
நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் மற்றும் பயன்பாடு பற்றி இத்தொடரில் பார்த்து வருகிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகை கற்பூரவள்ளி.இது நம்மில் பலருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மூலிகையாகும். Plectranthus amboinicus அல்லது Coleus aromaticus என்னும் தாவரவியல் பெயரைக்கொண்ட இத்தாவரம் மெக்சிகன் மின்ட், ஸ்பானிஷ் தைம், பனிக்கூர்க்கன், அஜுவைன் போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இருப்பினும் ஓமத்தின் நறுமணத்தை கொண்டதாக உள்ளதால் ஓமவள்ளி என்றும் பலராலும் அழைக்கப்படுகிறது.
இந்த தாவரம் இந்தியா,கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் அரேபிய தீபகற்பத்தை தாயகமாக கொண்டது. இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது. எனினும்,தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் பயிரிடப்பட்டு வரும் ஒரு தாவரமாக இது விளங்குகிறது.

கொரோனா நோய் தொற்று பேரழிவின்போது பல்வேறு உடல் உபாதைகளான, காய்ச்சல்,சளி மற்றும் உடல் வலிக்கு,கை மருந்தாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு மூலிகைகளில் மிக முக்கியமானது கற்பூரவள்ளி ஆகும். இதன் இலைகள் சாறு நிறைந்ததாகவும், நறுமணம் மிக்கதாகவும் இருக்கும்.சளி, இருமல்,ஆஸ்துமா மற்றும் அஜீரணம் போன்ற உடல் உபாதைகளுக்கு நம் கையருகிலேயே இருக்கும் சஞ்சீவினி என்றே இத்தாவரத்தை கூறலாம்.
சிறிய காயங்கள், வெட்டுக் காயங்கள் மற்றும் பூச்சிக் கடிக்கு இலையின் சாறு பூசப்படுகிறது. நறுமணம் மிக்க இலைகள் உணவிலும் பயன்படுத்தப்படுகிறது.பல்வேறு முறைகளில் நம் உணவிலும் பயன்படுத்தப்படுகிறது.இலைகளை தேநீராக தயாரித்து வெதுவெதுப்பாக பருகும்போது சுவாசக் கோளாறுகள் நீங்கும். இலைகளை கசக்கி பிழியப்பட்ட சாறு, தேனுடன் கலந்து தொண்டை வலிக்கும், இருமலுக்கும், மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
புதிதாக பறிக்கப்பட்ட இலைகள் சாலடுகளில் முக்கிய அங்கமாக உள்ளது. மற்ற பழங்களுடன் சேர்த்து பழச்சாராகவும் அருந்தப்படுகிறது. வியட்நாமில் புளிப்பு சூப்பிற்கான சுவையூட்டியாகவும், கியூப கருப்புபீன் சூப்பில் முக்கிய சுவையாகவும், கரீபியனில் சாலடுகளாகவும் பயன்படுத்தப்படுகிறது.இந்த தாவரம் உணவுப் பொருளாகவும், பானங்களுக்கு சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. யோகர்ட்,ரைத்தா சட்னி மற்றும் பக்கோடாக்களாக தயாரிக்கப்பட்டு, உண்ணப்படுகிறது. மருத்துவத் தன்மை
மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கரோட்டினாய்டுகள், தாதுக்கள், பினோல்கள், உணவு நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்ற செயல்பாடு ஆகியவற்றின் பண்புகளின் பல்வேறு அம்சங்கள் கற்பூரவள்ளியில் நிறைந்துள்ளதாக பல ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் இலைகளை மெதுவாக மென்று தின்றால்,சைனஸ் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஹோமியோபதி மருத்துவ முறைகளில் சிறுநீரக தொற்று நோய்க்கு மற்றும் கல்லீரலில் ஏற்படும் வீக்கத்திற்கும் பரிந்துரைக்கப்படுகிறது.மிக முக்கியமாக, நீண்ட நாள் சளியின் காரணமாக உண்டாகும் கோழையை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
தலைவலிக்கு இந்த இலைகளின் விழுது பத்தாக இடப்படுகிறது. இந்த இலைகள், புதினா இலைகள் மற்றும் கிராம்புடன் சேர்த்து அரைக்கப்பட்ட கலவை, தோலில் ஏற்படும் சிராய்ப்புகளுக்கு மற்றும் கொப்பளங்களுக்கு மருந்தாக பூசப்படுகிறது. வலிப்பு நோய்க்கு பயன்படுத்தப்படும் மூலிகை மருந்துகளில் முக்கியமானதாகவும் கற்பூரவள்ளி உள்ளது.
கற்பூரவள்ளியின் மருத்துவத் தன்மைக்கு மிக முக்கியமான அடிப்படை காரணியாக அமைவது இதில் உள்ள கார்வக்ரால், தைமால் யூஜெனால், சாவிகோல் மற்றும் எத்தைல் சாலிசிலேட் எனப்படும் முக்கிய மூலக்கூறுகள் ஆகும். இவை ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. இம்மூலக்கூறுகள் மருத்துவ முறைகளில் மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும். நறுமணம் மிக்க மூலக்கூறுகள் என்பதால் நறுமண சிகிச்சை முறைகளிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதிக நீர்ச்சத்து உள்ளது என்பதாலும், ஆவியாகும் தன்மை கொண்ட நறுமணப் பொருட்களை கொண்டுள்ளதாலும்,மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
பூக்கள் மற்றும் விதைகளைக் கொண்டு வளர்க்கப்படுவதை விட தண்டுகளைக் கொண்டே அதிகம் வளர்க்கப்படுகிறது. மிக எளிய முறையில் வளரும் என்பதாலும் மிக அதிகப்படியான பராமரிப்புகள் தேவையில்லை என்பதாலும் இத்தாவரம் பல வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
ஐந்து கற்பூரவள்ளி இலைகளை லேசான சூட்டில் வாட்டி,அதன் சாற்றைப் பிழிந்து, அதனுடன் லேசாக சூடாக்கப்பட்டு பிழியப்பட்ட ஆறு துளசி இலைகளின் சாறு, சிறிதளவு மிளகுத்தூள்,மஞ்சள் தூள்,ஒற்றைக் கல் உப்பு மற்றும் அரை தேக்கரண்டி தேனுடன் எடுத்துக்கொண்டால் சளியின் வீரியத்தை குறைத்து
விரைவில் சளி மற்றும் இருமலில் இருந்து விடுபடலாம். இத்தயாரிப்பு கை மருந்தாக பல வீடுகளிலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஹோமியோபதி மருத்துவ முறையில் குப்பிகளில் அடைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தரப்படுகிறது.ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மூன்றிலிருந்து 5 துளிகள் மட்டுமே உட்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறியப்படுகிறது. ஆனால்,இலைகளை அப்படியே அல்லது உணவாக தயாரித்து உண்ணப்படுகிற போது,நான்கு, ஐந்து இலைகள் வரை உட்கொள்ளலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த மூலிகை தாவரமானாலும் சரியான மூலிகையை கண்டறிந்து,சரியான அளவுகளில் உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழலாம். இயற்கை நமக்கு அளித்த இவ்வரிய மூலிகைகளை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ்வோமாக.
– ஹெல்த் அண்ட் பியூட்டி (Read Health and beauty)

