– &எம்.ஜெயஸ்ரீ

தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா? எண்ணெய் தடவினால்தான் முடி வளருமா? எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? இப்படி எண்ணெய் தொடர்பாக ஏராளம் சந்தேகங்கள் உண்டு எல்லோருக்கும். எது சரி, எது தவறு என்கிற தெளிவின்றி, தினம் ஒரு எண்ணெயைப் பயன்படுத்துவது, எண்ணெயே இல்லாமல் விடுவது என எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறவர்களே பெரும்பான்மை.

தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது தேவையற்றது. ஆனால், தினசரி தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம். இன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அளவுக்கதிகமாக மாசடைந்துள்ள காரணத்தினால், தினமும் தலைக்குக் குளிப்பதன் மூலம்தான் அந்த மாசிலிருந்து கூந்தலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க முடியும். தினம் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு விடுமே என நினைப்பவர்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசி விடலாம்.

ஐந்தெண்ணெய் கலவையும் மிகவும் அற்புதமானது. நல்லெண்ணெய்,கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை முதல் நாள் இரவு தலையில் தடவிக் கொண்டு, காலையில் கூந்தலை அலசலாம். கூந்தல் ஆரோக்கியத்துக்கு இது மிகச் சிறந்த எண்ணெய்.

காதி கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அது 30 மி.லி. அளவு எடுத்து அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. நல்லெண்ணெயும் கலந்து வார இறுதி நாட்களில் தலையிலும், உடலிலும் தடவி ஊறிக் குளிக்கலாம். இது உடல் சூட்டைத் தணிக்கக் கூடியது. வார இறுதி நாட்களில் நிதானமான எண்ணெய் குளியல் எடுப்பது மிகவும் அவசியமானது. அப்படி எடுக்கும்போது அந்த எண்ணெய் கலவையில் ஒரு வாரம் விளக்கெண்ணெய், இன்னொரு வாரம் கடுகெண்ணெய், பிறகு ஐந்தெண்ணெய் இப்படி இருக்கும்படி மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக விளக்கெண்ணெய் உபயோகிப்பவர்களது கூந்தல் அதிகம் உதிராமலும் நரைக்காமலும் இருக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய்க்கு பொடுகை வளர்க்கக்கூடிய தன்மை உண்டு. அதன் அந்த குணத்தைக் குறைக்க அத்துடன் சிறிது கடுகெண்ணெயோ, நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ சேர்த்துக் கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் அவசியமான பழக்கமாக இருந்த எண்ணெய் குளியல், முடி வளர்ச்சிக்காக செய்யப்படவில்லை. உடல் சூடு தணிந்து, நரம்புத் தளர்ச்சி மறையவும், மன அழுத்தம் மாயமாகவும்தான் வாரம் ஒரு நாள் எண்ணெய் மசாஜ் செய்து குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். முடி வளரச் செய்ய வாரம் ஒரு முறை குளிப்பது போதாது. நமது சருமத்தில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய துவாரங்கள் இருக்கும். அவை சருமத்தின் மேலுள்ள எபிடெர்மிஸ் லேயரில்தான் இருக்கும். சருமத்தில் எண்ணெயை அரக்கத் தேய்க்கிற போது இந்த துவாரங்கள் வழியே சருமத்தின் உள்ளே இறங்கும். அதன் மூலம் உடல் சூடு குறையும். அசதி மாறும். களைப்பு நீங்கும்.

குளித்த பின்பு தலையில் உள்ள ஈரம் முழுவதும் உலர வேண்டும். தலையில் ஈரப்பதம் இருப்பதால்தான் சைனஸ் வலியை அதிகமாக உணர்கிறார்கள். சூடான உடல் வாகு உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் மிக அவசியமான ஒன்று. எந்த எண்ணெய் எடுத்தாலும் அதில் விளக்கெண்ணெய் கலந்து தேய்க்க வேண்டும். சூடு குறையும்.

எண்ணெயை சூடு செய்து குளிப்பது மிகவும் சிறந்தது. சூடுபடுத்தும் போது தலையில் வியர்ப்பதால் துவாரங்கள் திறந்து எண்ணெய் உள்ளே சென்று வேர்க்கால்களை திடப்படுத்தும்.