
-டாக்டர் ஜி.ராஜமோகன்.
கோபத்தால் நிதானம் இழந்து, மன அமைதியை தொலைத்து,உடல் நலம் இல்லாமல் அவதிப்படுபவர்களை அடிக்கடி பார்க்கிறேன்.கோபம் என்பது ஒரு கொடிய நோய்.அது மன்னிப்புக்கு இடம் கொடுக்காது. சூழ்நிலையின் எதார்த்தத்தை புறக்கணிக்கும். கடின வார்த்தைகளை உதிர்க்கும் உற்றார், உறவினர்களை மதிக்காது.
எரிச்சல்,ஆத்திரம், கொந்தளிப்பு என எந்த உருவத்தில் வந்தாலும் கோபம் ஒரு வலிமை இல்லாதவர்களின் ஆயுதம்.இது ஒரு பலவீனமான உணர்ச்சி.இயலாமையின் வெளிப்பாடு.
“கோபத்தோடு எழுந்தால், நஷ்டத்தோடு உட்காருவாய்”என்று கிராமங்களில் சொல்வார்கள். கோபம் பிறரை புண்படுத்துகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ…அது கோபப்படுவோரையும் ஆழமாக புண்படுத்தும்.
கோபத்தில் கொலை செய்வதும், தற்கொலை செய்துகொள்வதும்செய்திகளாக வரும் போது மரத்துப்போய் வேறு சிந்தனையில்லாமல் அடுத்த பக்கம் திரும்பிக் கொள்கிறோம்.. இந்த வயசிலேயே என்ன கோபம் தெரியுமா என் பாப்பாவுக்கு?அவன் கேட்டது கிடைக்கலேன்னா வீட்டை இரண்டு பண்ணிடுவான். அவ்வளவு கோபம். அவ்வளவு பிடிவாதம்! என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்பது சாதாரணமாகிவிட்டது.
என்னிடம் மனநல சிகிச்சைக்கு வரும் பலர் கோபத்தில் செல்போனை வீசி உடைப்பதாக சொல்கிறார்கள். கோபத்தில் நம்மிடம் சிக்கி சீரழிவது பொருட்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான். கோபத்தின் வெளிப்பாடுகள் மாறுகின்றன.
கோபம் இயலாமையின் வடிவம் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள்.முடிந்ததைச் செய்யலாம்.முடியாததை ஏற்றுக்கொள்ளலாம். இயலாமை உணர்வை நேரடியாக எதிர்கொள்ளும் போது கோபம் கரைந்து போகும்.
கோபம் நமக்குள் நாமே பொத்தி வைத்திருக்கும் ரகசிய வெடிகுண்டு. தூர(யார் மீதும் படாது) எறிந்துவிடுதல்தான் உடல்நலத்துக்கு நல்லது. கோபத்தினால் ஏற்படும் வியாதிகளின் பட்டியல் மிக நீண்டது.
கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும். எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக் கொண்டிருப்பவரை சொந்த குழந்தைகளே அண்ட பயப்படுவார்கள். சொல்வதைக் கோபப்படாமல் சொல்லத் தெரிந்துகொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும்.
எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தை பேணும்.உங்கள் வாழ்க்கையை, உங்கள் உறவுகளை, உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.கோபம் இடம் தெரியாமல் காணாமல் போகும்.
அனைவரும் மகிழ்ச்சியாக வாழ எனது அன்பான வாழ்த்துகள்!.

