– டாக்டர் வினிதா

ர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.காணங்கள் எதுவாக இருந்தாலும் சர்க்கரை நோயையும் அதன் பாதிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்களில் 50 சதவிகிதம் பேர் சர்க்கரை அளவை சரியான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.

கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை பல்வேறு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.அதில் மிக முக்கியமானது கால் நரம்புகள் பாதிப்பு. நம்முடைய கால் மற்றும் பாதங்கள் தினசரி மிகக் கடுமையான பணிகளைச் செய்கின்றன. நம்முடைய,இயக்கம் உள்ளிட்ட பெரும்பான்மையான செயல்பாடுகள் நிகழத் துணை புரிவது பாதங்கள்.சர்க்கரை நோய் என்று வரும்போது,பலரும் செய்யும் தவறு பாதங்களைப் பராமரிக்கத் தவறுவதுதான். இதனால்,கால்களை அகற்ற வேண்டிய அளவுக்கு கூட பிரச்னை தீவிரம் அடைகிறது.

இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 10கோடி சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும்
சர்க்கரை நோய் காரணமாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு, கால் அகற்றும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.இந்த மிக மோசமான புள்ளிவிவரங்கள் எல்லாம் இன்னும் எந்த அளவுக்கு சர்க்கரை நோயாளிகள் மத்தியில் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெளிவாக்கும்.

பாதங்களில் புண் ஏன் ஏற்படுகிறது?

பாதங்களில் புண்கள் ஏற்படுவதற்கு,டயாபடீக் நியூரோபதி,போதுமான அளவு பாதத்துக்கு ரத்த ஓட்டம் இன்மை, நோய்த்தொற்று ஆகியவை முக்கிய காரணங்கள்.

டயாபடீக் ஃபுட் பிரச்னை ஏற்பட மிக முக்கியக் காரணம்,டயாபடீக் நியூரோபதி.ரத்தத்தில் உள்ள அதிகப்படியான
சர்க்கரை,பாதம் மற்றும் காலில் உள்ள நரம்புகளைப் பாதிப்படையச் செய்கிறது.இதனால், பாதத்தில் எரிச்சல், கூச்சம் மற்றும் உணர்வற்ற தன்மை ஏற்படுகிறது.இந்த சூழலில்,பொருத்தமற்ற காலணி அணிவது, வெறும் காலில் நடப்பது போன்ற தவறான செயல்கள் காரணமாக புண் ஏற்படுகின்றன. அதிலும்,குறிப்பாக, காலில் உணர்வு இல்லாத நிலையில், வெறும் காலில் நடக்கும்போது காயம் ஏற்பட்டாலும் தெரிவது இல்லை.இந்த புண்கள் எளிதில் ஆறுவதும் இல்லை.கவனிக்காமல் விடும்போது,கடைசியில் பாதத்தையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.டயாபடீக் நியூரோபதி காரணமான புண்கள் பெரும்பாலும் பாதத்தில்தான் ஏற்படுகின்றன.

ரத்த ஓட்டம் குறைவு காரணமாக ஏற்படும் புண் (Ischemic foot ulceration)

ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது,அது கால் மற்றும் பாதத்தில் உள்ள நரம்புகள் மற்றும் நுண் ரத்தக்குழாய்களைப் பாதிக்கிறது.இதனால், காலுக்கான ரத்த ஓட்டம் குறைகிறது.காலுக்குப் போதுமான அளவு நல்ல ரத்த ஓட்டம் இல்லாதபோது, திசுக்களுக்குப் போதுமான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைப்பது இல்லை. இதனால்தான்,புண்கள் ஆறுவதற்கான காலம் அதிகரிக்கிறது.புண் ஆறாமல் இருக்கும்போது, நோய்த்தொற்று ஏற்பட்டு பாதிப்பு தீவிரம் அடைகிறது.கால்கள் ஆரோக்கியமாக இருக்க, புண்கள் விரைவில் குணமாக,சரியான ரத்த ஓட்டம் அவசியம்.

புண்கள் சிறியதாக இருக்கும்போதே அதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் நோய்த்தொற்று,கால் அகற்றுதல் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.உடனடி சிகிச்சைதான் ஒரே வழி.

பாதங்களை பராமரிக்க 8 வழிகள்!

1. தினமும் பரிசோதனை:

காலில் தினமும் ஏதேனும் காயம், புண்,வெட்டு, வெடிப்பு,வீக்கம் ஏற்பட்டுள்ளதா எனப் பரிசோதிக்க வேண்டும்.காலின் எல்லா பகுதிகளையும் நம்மால் சரியாகப் பார்க்க முடியாது. எனவே,ஒரு கண்ணாடியை வைத்துப் பரிசோதிக்கலாம். ஏதேனும் பாதிப்பு தெரிந்தால்,மருத்துவரை அணுக வேண்டும்.

2.பாதத்தை எப்போதும் சுத்தமாக, உலர்வாகப் பராமரித்தல்:

பாதத்தை தினமும் வெதுவெதுப்பான (வெந்நீர் அல்ல) நீர், ரசாயனம் குறைவான சோப் பயன்படுத்திக் கழுவவேண்டும்.கால் மற்றும் பாதத்தை அழுத்தித் தேய்க்கக் கூடாது.பாதத்தை ஊறவைத்து கழுவக் கூடாது.இப்படிச் செய்தால் சருமம் உலர்ந்துபோய் பாதிப்பு ஏற்படலாம்.காலை கழுவியதும் மென்மையான உலர்ந்த துணியைக்கொண்டு ஒத்தி எடுக்கவேண்டும். குறிப்பாக,விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை கவனத்துடன் துடைக்க வேண்டும்.உலர் சருமம் உள்ளவர்கள்,கால், பாதத்தில் மாய்ச்சரைசிங் க்ரீம் தடவ வேண்டும். விரல்களுக்கு இடையில் எல்லாம் தடவக்கூடாது.

3.வாரத்துக்கு ஒரு முறை நகங்களைப் பராமரித்தல்:

வாரத்துக்கு ஒரு முறை, விரல் நகங்களை வெட்ட வேண்டும்.இதற்கு, பாதங்களைக்
கழுவித் துடைத்த பிறகு வெட்டலாம்.கால்களை வெதுவெதுப்பான நீர் விட்டுக் கழுவுவதால் நகங்களும் மென்மையடையும். வெட்டவும் எளிதாக இருக்கும்.நகங்களை நேராக வெட்டவேண்டும். புண் ஏற்படுவதைத் தவிர்க்க,மிக நெருக்கமாக வெட்டக் கூடாது.அதேபோல, நகத்தின் இரு முனைப் பகுதியிலும் ஒட்ட வெட்டக் கூடாது.

4.ஷூ மற்றும் சாக்ஸ் அணிதல் :

வெறும் காலில் எங்கேயும் நடக்க வேண்டாம்.வெளியே செல்லும்போது,சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்து செல்லவேண்டும். வீட்டில் இருக்கும்போது சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.

5.வெப்பம் குளிரில் இருந்து பாதுகாப்பு:

வெளியே வெப்பமான சூழலில் செல்லும்போது ஷூ,சாக்ஸ் அணிந்து செல்லவேண்டும்.இரவு படுக்கும்போது பாதம் குளிர்ச்சியடைந்துவிடாமல் இருக்க சாக்ஸ் அணியலாம்.சிலர் குளிக்கும்போது,வெந்நீர் குளிப்பதற்கு ஏற்றபடியாக இருக்கிறதா எனப் பரிசோதிக்க காலில் ஊற்றுவார்கள்.இந்தத் தவறை மறந்தும் செய்யாதீர்கள்.

6.பாதத்துக்கான ரத்த ஓட்டத்தைப் பராமரித்தல்:

உட்காரும்போது பாதங்கள் சற்று உயரத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.ஐந்து நிமிடங்களுக்கு கணுக்கால்,பாதத்தை வேகமாக அசைக்க வேண்டும்.இதை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை செய்ய வேண்டும்.

7.எப்போதும் துடிப்பான வாழ்க்கைமுறை:

சோம்பலான வாழ்க்கை முறை மன உளைச்சலுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்து விடும்.மேலும் சர்க்கரை அளவையும் அதிகரிக்கலாம்.எனவே சுறுசுறுப்பாக செயல்படுவது எல்லாவகையிலும் நன்மையை தரும்‌.

8.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது:

டாக்டருடன் கலந்துபேசி. ரத்தத்தில் சர்க்கரை அளவு,ரத்த அழுத்தம், கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.இது உங்கள் வாழ்நாளை கூட்டி நூறாவது பிறந்த நாளை கொண்டாட உதவும்.