
-டாக்டர்.கண்மணி கணேஷ், MD.DGO,
சமீபகாலமாக 5வது, 6வது படிக்கிறபோதே பெண் குழந்தைகள் பூப்பெய்துகின்றனர். அது வயதுக்கு முந்தைய நிகழ்வு என்பதைப் புரிந்துகொள்ளாமல், வயதுக்கு வராத மற்ற பெண்குழந்தைகளையும், ‘நீ இன்னும் பெரிய மனுஷி ஆகலையா?’ என்கிற கேள்விகள் துரத்துகின்றன. மழலையை அனுபவிக்க வேண்டிய வயதில், மாதவிலக்கைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள் குழந்தைகள்.
பூப்பெய்துகிற வயது பரம்பரை தன்மையை பொறுத்தது.அந்தப் பெண்ணோட பாட்டி, அம்மா எந்த வயசில் பூப்பெய்தினாங்க என்பதை பொறுத்து மாறுபடும்.தற்போது சின்ன வயதில் உடல் எடை அதிகரிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
குழந்தைத்தனமே மாறாத வயசுல மாதவிலக்கை சந்திக்கிறதுங்கிறது பெண் குழந்தைகளுக்கு ரொம்பவே தர்மசங்கடமான விஷயம். குறிப்பா கோ எஜுகேஷன் பள்ளியில படிக்கிறபோது, அவங்களுக்கு இந்த தர்மசங்கடம் இன்னும் அதிகமாகும். அதுலேருந்து தப்பிக்க பள்ளிக்கூடத்துக்கு லீவு போடுவாங்க.சரியான ஆலோசனைகளும், வழிநடத்தலும் இல்லைன்னா, கவனம் சிதறவும் வாய்ப்புகள் அதிகம்.
8, 9 வயசுலயே அம்மாக்கள் தம் மகள்கள்கிட்ட மாதவிலக்கைப் பத்தி மேலோட்டமா பேசலாம். பெண்களுக்கு மாதவிலக்குங்கிறது இயல்பானது. ‘அந்தரங்க உறுப்புலேருந்து ரத்தக்கசிவு இருக்கும். உடனே அடிபட்டிருக்குமோ, கட்டியா இருக்குமோனு பயப்படாதே.வலி இருக்காது.ரெண்டு, மூணு நாள்ல சரியாயிடும்’னு சொல்லி, நாப்கின் உபயோகிக்கவும், உபயோகிச்ச நாப்கினை பாதுகாப்பா அப்புறப்படுத்தவும் சொல்லித் தரலாம்.அந்த வயசுல இந்தளவு தகவல்கள் போதும்.10 வயசுக்கு மேல, நல்ல ஸ்பரிசம், கெட்ட ஸ்பரிசம் பத்தியும், தவறானவங்கக்கிட்டருந்து விலகி இருக்க வேண் டியதோட அவசியத்தையும் சொல்லித்தர வேண்டும்.
அதையும் தாண்டி, சீக்கிரமே பூப்பெய்தற தன்னோட தோழிகளைப் பார்த்து, தனக்கு அது எப்போ வரும்னு கேள்வி கேட்கற பெண் குழந்தைகளைப் பக்குவமா கையாளவேண்டிய பொறுப்பும் அம்மாக்களுக்கு வேணும்.
‘மாதவிலக்கோட சராசரி வயசு 12.அதனால எல்லாருக்கும் அந்த வயசுலதான் வரணுங்கிறதும் இல்லை. அவங்களோட குடும்பப் பின்னணி, பருமனெல்லாம் பொறுத்து அது ரொம்பவம் சீக்கிரம் வரலாம்.
இளம் வயதிலேயே கர்ப்பம் ஆவது ஆங்காங்கே நடைபெறுகிறது.சிறு குழந்தைகள் ஏமாற்றப்படுகிறார்கள்.எச்சரிக்கையாக இருந்தால் நல்லது.
-டாக்டர்.கண்மணி கணேஷ், MD.DGO,

