செயற்கை மெனோபாஸ்…

டாக்டர்.லட்சுமி நாகராஜன்,M.B.B.S,DGO
ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த அல்லது அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கு (மென்சஸ்) ஏற்படுவது நின்று மெனோபாஸ் நிலையை அடைவது இயற்கை. நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்களுக்கு இதுபோன்ற இயற்கையான மெனோபாஸ் ஏற்படுவது அவசியம்.
ஆனால், சில பெண்களுக்கு, குறிப்பாக இளம்பெண் களுக்கு அசாதாரணமான மருத்துவக் காரணங்களால் செயற்கையான மெனோபாஸ் நிலையை அடையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற செயற்கை மெனோபாஸ் நிலை என்பது ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய கெட்ட வாய்ப்பு அல்லது சோகமான விஷயம். ஒரு பெண்ணின் கர்ப்பப் பையை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி விடும்போது அந்தப் பெண்ணுக்கு ஏற்படுவதுதான் செயற்கை மெனோபாஸ்.
ஒரு பெண்ணின் உடலில் மாதவிலக்கை ஏற் படுத்தக்கூடிய கர்ப்பப்பை ஒரு காலகட்டத்தில் தன் செயலை நிறுத்திவிட்டு நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொள்வது இயற்கை மெனோபாஸ். அதே கர்ப்பப் பையை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிட்டால் மாதவிலக்கு உண்டாகும் வாய்ப்பும் பறிபோகிறதல்லவா? இதனால் ஏற்படுவதுதான் செயற்கை மெனோபாஸ்.
தவிர்க்கவே முடியாத மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே கர்ப்பப் பையை அகற்றுவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப் பார்கள். கர்ப்பப் பை அகற்றும் சிகிச்சைக்கு ஆங்கிலத்தில் ஹிஸ்டரக்டமி என்று பெயர். கர்ப்பப் பையை அகற்றுவதற்கு அதிநவீன சிகிச்சை முறைகள் இப்போது வந்துவிட்டன.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு லாப்ரோஸ்கோபி அறுவைச் சிகிச்சை மூலம் மிக எளிதாகவும், விரைவாகவும் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது. இந்தச் சிகிச்சை முறையால் நோயாளிக்கு மிகக் குறைந்த ரத்த இழப்பே ஏற்படுகிறது. சிகிச்சைக்குப் பிந்தைய வலியும் குறைவாக இருக்கும்.
கர்ப்பப்பையை அகற்றவேண்டியதற்கான காரணங்கள்.
1.மாதவிலக்கின்போது கட்டுக்கடங்காத ரத்தப் போக்கு ஏற்படுதல், வெள்ளைப்படுதல் (கர்ப்பப் பையில் சிறு கட்டி போன்ற பருக்கள் தோன்றியிருந்தால்)போன்ற வற்றை மருந்து மூலமாகவோ அல்லது கர்ப்பப் பையை சுத்தம் செய்யும் சிகிச்சை (டி அண்டு சி ) மூலமாகவோ கட்டுப்படுத்த முடியாத நிலை.
2.கர்ப்பப் பையின் வாய்ப்புறத்தில் புற்று நோய் உண்டாவதற்கான அறிகுறி அல்லது கர்ப்பப் பைக்குள் புற்று நோய்க்கான சதை வளர்ச்சி ஏற்பட்டிருத்தல்.
3.கர்ப்பப் பையில் ஏற்படக்கூடிய கட்டிகள், அதாவது மல்டிபிள் ஃபைப்ராய்ட்ஸ், எண்டோமெட்ரியோசிஸ், பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ் ஆகிய நாள்பட்ட கிருமித்தொற்றுகளால் ஏற்படும் தொல்லைகள்.
4.கருப்பை இருக்கவேண்டிய இடத்தைவிட்டு கீழ் நோக்கி நகர்ந்துவிடுதல். (இந்தப் பிரச்னைக்குப் பிறப்பு உறுப்பின் வழியாகவே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்).
5.கர்ப்பப்பை, கருமுட்டைகள் உருவாகக்கூடிய ஓவரீஸ் எனப்படும் சினைப்பை, சினைப்பையில் இருந்து கர்ப்பப் பைக்குச் செல்லும் வழியான ஃபெலோப்பியன் குழாய்கள், செர்விக்ஸ் ஆகிய உறுப்புகளில் புற்று நோய் ஏற்பட்டிருத்தல்.
6.பிரசவ காலத்தில் கர்ப்பப்பையில் உள்ள பிளசன்டா என்ற பனிக்குடத்தில் சிக்கலான நிலை ஏற்படுதல் அல்லது கட்டுக்கடங்காத ரத்தப் போக்கு ஏற்படுதல்.
மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காகவே அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது.
கர்ப்பப் பையை ஆகற்றித்தான்ஆகவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பெண் ணிடமும், அவரது கணவரிடமும் சிகிச்சை பற்றிய முழு விவரத்தையும் மருத்துவர்கள் விளக்கிச் சொல்வார்கள்.
இளம் வயதிலேயே கர்ப்பப் பையை இழப்பது சோகமானது;வலி மிகுந்தது. குழந்தை பெறுவதற்கான ஓர் உறுப்பு தானே என்று கர்ப்பப் பையை அவ்வளவு சர்வசாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏன் தெரியுமா? அது பெண்களுக்கு இயற்கையிலேயே அமைந்த பாதுகாப்புக் கவசமாகும். கர்ப்பப் பையில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களின் செயல்பாடுகளால், மெனோபாஸ் நிலையைப் பெண்கள் எட்டும் வரை இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து பெருமளவில் காப்பாற்றப் படுகின்றனர். இந்த நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அந்த ஹார்மோன்கள் தவிர்த்துவிடுகின்றன.
இயற்கையிலேயே பெண்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதத்தை அவ்வளவு சுலபமாக இழந்துவிட யாருக்குத்தான் மனசு வரும். இந்தக் காரணத்தை மனத்தில் வைத்துதான் தவிர்க்கவே முடியாத காரணத்தால் மட்டுமே கர்ப்பப் பையை மருத்துவர்கள் அகற்றுகின்றனர்.
எல்லாம் சரி. கர்ப்பப் பையை அகற்றிக்கொள்ளலாம். தொந் தரவுகள் தீரும். ஆனால், அதற்கு முன்பு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குப் பக்குவமான நிலையில் நோயாளியின் உடல் நிலை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லவா?இதற்கு மருத்துவர்கள் உதவ வேண்டும்.
தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்?
இந்தக் கவலை, கணவர்களைக் காட்டிலும் அவர்கள் மீது உண்மையிலேயே அக்கறையும் பாசமும் கொண்ட பெண்களுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது!.அறுவைச் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் இல்லாதபட்சத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு தாராளமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

