-அங்கயற்கண்ணி ராஜு,M.Sc.M.Phil

கோடை என்றாலே விடுமுறை என்ற கொண்டாட்டம் தான்.குழந்தைகள் வீதிக்கு வந்து விளையாட விரும்பும் தருணம்.(செல்போன் வருகைக்குப் பிறகு தலைகீழ் மாற்றம்) பரீட்சைகள் முடிந்து விடுமுறை விட்டதும் ஊருக்கு செல்லலாம்,புதிய புதிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம். வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம். சினிமாவுக்கு போகலாம், கடற்கரைக்கு செல்லலாம்.

பகலில் வெயில் நேரத்தில் விளையாடும்போது மயங்கி விழும் குழந்தைகள், அடுப்படியில் மதிய நேரத்தில் கஷ்டப்பட்டு சமைக்கும் பெண்கள், வேலைக்காக சுட்டெரிக்கும் வெயிலில் வண்டி ஓட்டிக் கொண்டு செல்லும்போது தார் ரோட்டில் இருந்து பறக்கும் அனலில் கால்கள் சூடாகி தவிக்கும் ஆண்கள்…, இந்த பாழாப்போன வெயில தாங்கிக்க முடியலையே என்று புலம்பிக் கொண்டே வேலை செய்யும் வயதானவர்கள் என்று கொளுத்தும் வெயிலிலும் தன்னுடைய வேலைகளை பார்க்கும் பல தரப்பட்ட மனிதர்களை தினமும் சாலைகளில் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள, நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கேற்ற குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் பழங்களை நிறைய சேர்த்துக்கொள்வது நல்லது.ஆரஞ்சு, திராட்சை, கிர்ணிப்பழம், தர்பூசணி போன்ற பழ வகைகளை வெட்டி அப்படியே சாப்பிடலாம் . இவற்றில் அதிகமான நீர்ச்சத்து இருக்கிறது. பழங்களைப் பிழிந்தும் ஜூஸாக போட்டுக்குடிக்கலாம். முக்கியமாக எலுமிச்சையில் நன்னாரி சர்பத் கலந்து சிறிது ஊற வைத்த பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகளை சேர்த்து சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்தால் நல்லது. பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. மேலும் நன்னாரி சிறுநீரகப் பாதையில் வெயில் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்யக் கூடியது. வெயில் நேரத்தில் மோர் சேர்த்துக் கொள்வதும் நல்லது. அதுவும் மோரில் சிறிது இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் சூட்டையும் தணிக்கும் .

அடுத்து பழைய சோறு மிகச் சிறந்த உணவு.  கோடை காலத்தில் முதல் நாள் வைத்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் அதில் தயிர் கலந்து பழையது சாப்பிடலாம்.சிறிது மோர் சேர்த்து, பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், உப்பு சேர்த்து கரைத்துக்குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.இது கோடை காலத்தில் உடலுக்கு வெயிலை தாங்கக் கூடிய அளவுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.நம் முன்னோர்கள் பழையது சாப்பிட்டதினால் தான் நாள் முழுவதும் வெயிலில் நின்று விவசாயம் செய்திருக்கின்றார்கள்.

மருத்துவ அறிவியல் அடிப்படையில் பழைய சோறு எந்த வகையில் பயன் உள்ளது என்பதுபற்றி சென்னை,ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள்.
பழைய சோறு மிகவும் சத்தான உணவு என்றும்,செரிமான சக்தியை உயர்த்தும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் நிறைய வீடுகளில் பழைய சோறு சாப்பிடுவதே இல்லை.சென்னை போன்ற பெரு நகரங்களில் சோறு சிறிதளவு மீந்தாலும் அதை வீணானதாத கருதி குப்பையில் கொட்டி விடுகிறார்கள். அதன் பயனை உணர்ந்து மீதமுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து கோடை காலத்தில், காலை நேரத்தில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பழையசோறு சாப்பிடுவதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என்று குழந்தைகளுக்குச் சொல்லி புரிய வைத்து பழக்கப்படுத்த வேண்டும்.

ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது.சுற்றுப்புற சூழல் மாசடைந்ததால் வெயிலின் தாக்கம் பூமிக்கு அதிகமாகவே உள்ளது.

முன்பெல்லாம் வீட்டைச் சுத்தி மரங்கள்,செடிகள் வைத்திருப்பார்கள். ரோட்டின் இரண்டு பக்கத்திலும் மரங்கள் இருக்கும். அதனால் வெயில் அடித்தால் கூட குளிர்ந்த காற்று வீசும்.

ஆனால்,தற்போது தொடர்ந்து மரங்கள் அழிக்கப்படுவதாலும்,மக்கள் தொகை பெருக்கத்தாலும் நகரம் அடுக்கு மாடி கட்டிடங்களாக மாறியதால் அனல் காற்று தான் வீசுகிறது.உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்பவர்கள் மயங்கி விழுந்து, ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போகிறார்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை வெயில் தாங்காமல் துவண்டு போகின்றார்கள். அதிகப்படியான வெயிலின் தாக்கத்தை நம்முடைய உடல் தாங்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற,குளிர்ச்சியான உடல் சூட்டை தணிக்கக் கூடிய உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கோடைக்காலத்தில் மிகச் சிறந்த உணவு கூழ்.கம்பு,கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை மாவாக அரைத்து வைத்துக் கொண்டு அவற்றை கூழாக கிண்டி தயிர்,சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு கரைத்து தினமும் குடிக்கலாம். கூழ் செய்வதற்கு ஒரு கப் மாவுக்கு , மூன்று கப் தண்ணீர் சேர்த்து கரைத்து சிறிதளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளற வேண்டும். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து சிறிது நேரம் மூடி போட்டு வேக விட வேண்டும்.இதை இரவே செய்து வைத்துக் கொண்டால்,காலை நேரத்தில் மோர் சேர்த்து கூழாக கரைத்துக் குடிக்கலாம். சிறுதானிய வகைகளில் கம்பு மிகவும் அதிகமான சத்துகள் நிறைந்தது. உடலுக்கு குளிர்ச்சியானதும் கூட.அதனால் கம்மங்கூழை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் வலிமை பெறுவதுடன் உடல் சூட்டையும் தணிக்கும்.

கோடைகால விடுமுறை நாட்களை குடும்பத்தோடு,உடல் நலத்தோடு சந்தோஷமாக அனுபவிக்கலாம்.