– டாக்டர் முத்துச்செல்லக்குமார் MD,

மே மாதம் தொடங்கிவிட்டால். அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்துவிட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன.  நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது.

வியர்க்குரு

கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.வியர்வை நாளங்கள் பாதிக்கப் பட்டு வியர்க்குரு வரும்.வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர், காலமைன் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம். வேண்டும்.

வயிற்றுப்போக்கும் சீதபேதியும்

கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் விரைவில் வளரும்.இந்த உணவுகளை உண்பதால் பலருக்குக் கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி,காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.ஆகையால் கோடை காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விடவும்.வெளியில் வைக்கப்படும் உணவுகள் மீது ஈக்கள் வராமல் மூடிப் பாதுகாக்கவும். தண்ணீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையிலேயே எலெக்ட்ரால் போன்ற பவுடர்களை தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.

நீர்க்கடுப்பு

கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும்.நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னை சரியாகும்.அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்றோ, சிறு நீரகக்கல்லோ இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.

வேனல்கட்டியும் புண்களும்

சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா கிருமிகள் தொற்றி அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல்கட்டி. குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கோடைகாலத்தில் அடிக்கடி சருமத்தில் புண்கள் வந்து சீழ் பிடிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள்,வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் பயன்படுத்தினால், இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கலாம்.கிருமி நாசினி கொண்ட சோப்பை உபயோகித்தால், மீண்டும் இந்தப் புண்கள் வராது.

தேமல் தொற்று

உடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான மார்பு, முதுகு,அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.குறிப்பாக, மலாஸ்ஸிஜியா ஃபர்ஃபர்(Malassezia furfur)எனும் பூஞ்சைகள் சருமத்தில் தொற்றும்போது அரிப்புடன் கூடிய தேமல்(Tinea Versicolar) தோன்றும். தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு அல்லது பவுடரை தடவி வந்தால் குணமாகும். இதன் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள் தேவைப்படும்.

சின்னம்மை

இது வேரிசெல்லா ஜாஸ்டர்(Varicella zoster)எனும் வைரஸ் கிருமியால் வருகிறது. கோடையில் இந்தக் கிருமி அதிக ஆற்றலுடன் செயல்படுகிறது. மாசடைந்த காற்று வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. முதலில் கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் ஏற்படும்.உடல் முழுவதும் அரிக்கும், அதன் பிறகு நீர் கோர்த்த கொப்புளங்கள் தோன்றும்.

இது குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரையும் தாக்கும். நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம்.இதன் வீரியத்தைக் குறைக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன.வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்துவிட்டால், மற்றவர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது.இந்த நோயுள்ளவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் அடிக்கடி தர வேண்டும்.