லைக்காயக்கள் உலக விழிப்புணர்வு தினம் மார்ச் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது‌. தலையில் பலத்த காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளை ‘நிலை 1 அவசரச் சிகிச்சை மையங்களுக்கு’ உடனடியாகக் கொண்டு செல்வதன் அவசியத்தைக் காவேரி மருத்துவமனைகள் குழுமம் வலியுறுத்துகிறது. சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் தலைமை இயக்குநர், திரு கே.சங்கர், ஐபிஎஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தலைக்காயங்கள் என்பது உச்சந்தலை, மண்டை ஓடு அல்லது மூளையைப் பாதிக்கும் காயங்களைக் குறிக்கும்.இவை பெரும்பாலும் சாலை விபத்துகள்,கீழே விழுதல், விளையாடும்போது ஏற்படும் காயங்கள் அல்லது தாக்குதல் சம்பவங்களால் ஏற்படுகின்றன.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு தலைக்காயம் ஏற்படும் நிலையில், இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15 லட்சமாக உள்ளது. இதில் கிட்டத்தட்ட 60% பாதிப்புகள் சாலைப் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படுகின்றன.
அவசரச் சிகிச்சை மையங்கள், அங்குள்ள நிபுணத்துவம் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பைப் பொறுத்து நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இதில், நிலை 1 அவசரச் சிகிச்சை மையங்கள் மிகவும் சிக்கலான மற்றும் கடுமையான காயங்களுக்குச் சிகிச்சையளிக்கும் திறனும், அனுபவமும் கொண்ட மருத்துவ நிபுணர்களையும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட உயர் சிறப்பு சிகிச்சை மையங்களாகும்

இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் இயக்குநரும், நரம்பியல் துறையின் குழு வழிகாட்டியுமான டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் கூறியதாவது:

“உரிய நேரத்தில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட நிலை 1 அவசரச் சிகிச்சை மையத்திற்குப் பாதிக்கப்பட்ட நபர்கள் எவ்வளவு விரைவாக அழைத்து வரப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே சிகிச்சையின் பலன் இருக்கும்.விபத்துக் காயத்திற்குப் பிறகு பொன்னான நேரம் என்று அழைக்கப்படும் ஒரு மணி நேரத்திற்குள் இது போன்ற உயர் சிறப்பு மையங்களுக்கு நோயாளிகளைக் கொண்டு வருவது, அவர்களது உயிர்களைக் காப்பாற்றவும், நரம்பியல் ரீதியாக அவர்கள் விரைவாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் பெரிதும் உதவும்”என்றார்.

வடபழனி காவேரி மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநரும், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரங்கநாதன் ஜோதி கூறுகையில்:

“தலையில் ஏற்படும் பலத்த காயங்களுக்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மூளைக் காயம் உள்ள நோயாளிகளுக்கு, மண்டையோட்டுக்குள் ஏற்படும் இரத்தக் கசிவு அல்லது மூளை வீக்கம் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நிலைமை மிக வேகமாக மோசமடையக்கூடும். நிலை 1 மையத்தில் உள்ள அதிநவீன வசதிகள் மற்றும் நிபுணர்களின் சேவை, நோயாளிகள் முழுமையாகக் குணமடைவதற்கும் நீண்டகால ஊனத்தால் சிரமப்படுவதற்கும் இடையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்”என்றார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்:

“நமது சமூகத்தில் அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் காயங்கள் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை இந்த விழிப்புணர்வு தினம் நமக்கு நினைவூட்டுகிறது. விபத்துக் காயங்களுக்கான சிகிச்சை வசதிகளை வலுப்படுத்துவதும், நோயாளிகளை விரைவாக அதிநவீன சிறப்பு மையங்களுக்குக் கொண்டு செல்வதை உறுதி செய்வதும் மிக முக்கியமாகும். காவேரி மருத்துவமனைகளின் மருத்துவக் குழுக்கள் உயிரைக் காப்பாற்ற எப்போதும் தயாராக உள்ளன”என்று கூறினார்.

தமிழ் நாட்டில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவான, தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும்.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக, முறையாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பானது.

-ஷைலஜா. ஹெல்த் அண்ட் பியூட்டி