
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல் நலத்தோடு மன நலமும் முக்கியம்.சமீபகாலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் மனநல பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்.
தற்கொலை பற்றிய செய்திகள் மனதை கலங்கடிக்கிறது.தற்கொலைகளை நிச்சயமாக தடுக்க முடியும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் அறிஞர் அண்ணா. பொருளாதாரம், மற்றும் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் மூலமாக நாம் கடவுளை காணலாம்.அதற்கு கருணை உள்ளம் தேவை.
கருணை என்றால் யாரிடமும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அன்பு செலுத்துவது.தேடி வருபவர்களுக்கு முடிந்ததை கொடுப்பது.இருப்பதை கொடுத்து பிறர் இன்பம் அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது.
சமூகத்தில் எல்லாவற்றையும் மாற்றும் வலிமை கொண்ட கருணை வலிகளையும் ஆற்றும்.பிறருக்கு பயன் தரும் செயல்களை செய்வதும், எல்லோரிடமும் அன்பாக இருப்பதும்,அதனை ஊக்குவிப்பதும் தான் நாம் செய்யவேண்டிய செயலாகும்.
கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும்.இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி ஆற்றல் பெருகும்.மேலும் நம் உடலில் ஆக்ஸிடோஸின் ஹார்மோன் அதிகரித்து இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
மற்றவர்கள் செய்யும் செயல்களைப் பாராட்டுங்கள்.உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் புன்னகை செய்யுங்கள்.பிரச்னை என்று யாராவது வந்தால் அவர்களது சிரமங்களை காது கொடுத்து கேளுங்கள்.முடிந்த உதவிகளை தவறாமல் செய்யுங்கள்.கருணையோடு வாழ்ந்தால் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கை வாழலாம்.

