
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS, MD(Psychiatry)
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை அவரது தந்தை அழைத்து வந்திருந்தார்.
நன்றாகப் படிக்கும் பெண்.முதல் இரண்டு வருடமும் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி தேர்ச்சி அடைந்திருந்தார். இப்போது மூன்றாம் வருடத் தேர்வு தொடங்கப்போகிறது.
ஒவ்வொரு தேர்விற்குத் தயாராகும்போதும் கடினமாகப் படிக்கிறாள்.ஆனால், தேர்வு நெருங்க நெருங்க ஒரு பயம் வந்து விடுகிறது. அந்த பயத்தின் காரணமாக அவளால் முழு கவனத்தோடு படிக்க முடிவதில்லை. அது அவளது பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
இதனால் அவளால் சரியாக உறங்க முடிவதில்லை.இரவு முழுக்கப் பதட்டமாக இருக்கிறாள். இப்படியே தூங்காமல் இருந்தால் தேர்வு அன்று தம்மால் சுத்தமாக எதுவும் எழுத முடியாது, படித்ததை எதுவும் நினைவுகூர முடியாது என்று நினைத்துக் கொள்கிறாள். அதனால் கண்டிப்பாகத் தூங்க வேண்டும் என நினைக்கிறாள். ஆனால் தூங்க முடியவில்லை.
பயமும்,பதட்டமும், தூக்கமின்மையும் சேர்ந்து அவளை பாடாய்ப் படுத்துகிறது. அதனால் தான் தேர்வு எழுதப் போவதில்லை என முடிவு எடுத்துவிட்டாள். அதனை வீட்டில் சொல்லியவுடன் அவர்கள் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவள் தேர்வு எழுத மறுத்துவிட்டாள்.
“இல்லப்பா, என்னால் முடியாது.நான் இந்தத் தேர்வை எழுதினால் நிச்சயம் என்னால் தேர்ச்சி அடைய முடியாது. ஏனென்றால் நான் படித்த அத்தனையும் மறந்துவிட்டேன். என்னால் பத்து மதிப்பெண்கூட வாங்க முடியாது.அது என் மீது மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே சிதைத்து விடும். அதனால் நான் இந்தமுறை தேர்வு எழுதப் போவதில்லை” என அழுதிருக்கிறாள். அதனால் என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள்.
அந்தப் பெண்ணுக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தினேன். முதலில் தேர்வு என்பது என்ன?அதன் நோக்கம் என்ன?
எனது மாணவர்கள் சிலரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன்.”தேர்வின் நோக்கம் என்ன?”
பெரும்பாலான மாணவர்களின் பதில் “நான் எவ்வளவு படித்து இருக்கிறேன் என்பதனை மதிப்பெண்கள் வாயிலாக மற்றவர்களுக்கு உணர்த்துவதற்குத்தான் தேர்வு.”
“அப்படியா?”
நிச்சயமாக இல்லை. தேர்வின் நோக்கம் என்பது”நான் எவ்வளவு தெரிந்திருக்கிறேன் என்பதனை நான் அறிந்துகொள்ளத் தான் தேர்வு. மற்றவர்கள் அறிந்துகொள்ள அல்ல.அதனால்தான் உங்களுக்கு மதிப்பெண்கள் சொல்லப்படுகிறது.”
உதாரணத்திற்கு 70 மதிப்பெண் நீங்கள் வாங்கி இருக்கிறீர்கள் என்றால்,நீங்கள் உங்களது பாடத்தில் 70 சதவீதம் தெரிந்து உள்ளீர்கள் என்று பொருள்.
உங்களைப் பற்றி நீங்கள் மதிப்பிடுவதற்குத்தான் தேர்வே தவிர, மற்றவர்கள் மதிப்பிடுவதற்கு அல்ல.
இந்தக் கண்ணோட்டத்தோடு நீங்கள் தேர்வை அணுகும்போது ஏன் பயம் வரப்போகிறது?
அதேபோல இந்த பயம் தொடர்பாக மாணவர்கள் நினைப்பது என்ன?
*பயம் திறமையைக் குறைத்துவிடும்.
*பயம் செயல்திறனைக் குறைத்துவிடும்.
*பயத்தினால் படித்தது அத்தனையும் மறந்துவிடும்.
*தேர்விற்கு முந்தைய நாள் படிக்கவில்லை என்றால்,ஏற்கனவே படித்த அத்தனையும் மறந்துவிடும்.
இவை எல்லாம் உண்மையா?
நிச்சயம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட அளவு பயம் உண்மையில் நமது செயல்திறனைக் கூட்டுகிறது. பயத்தின்போது சுரக்கும் சில ஹார்மோன்கள் நமது கவனத்தையும், வேகத்தையும் கூட்டுகிறது. அதனால் நிச்சயம் நமது செயல்திறன் கூடுமே தவிர குறையாது. அதனால்தான் படிக்காத குழந்தைகளைப் பார்த்து “கொஞ்சமாவது படிக்கணும்னு பயம் இருந்தா,நீ படிப்ப. உனக்குத்தான் பயமே இல்லையே” என்று சொல்கிறோம்.
தேர்வில் மட்டுமல்ல எந்த ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்யும்போதும் அதன் நிமித்தமாகக் கொஞ்சம் பயம் அவசியம்.அதனால் தேர்வின் நிமித்தமாக ஏற்படும் பயம் என்பது அவசியமானது தான் என்பதை உணர வேண்டும்.
அதேபோல தேர்விற்கு முந்தைய நாள் நமக்கு இருக்கும் மனநிலை யும்,தேர்வு அன்று நமக்கு இருக்கும் மனநிலையும் வேறு வேறானது.
தேர்விற்கு முந்தைய நாள்,நாம் நமது பயத்தைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது,அது நம் பதட்டத்தைக் கூட்டுகிறது.அந்தப் பதட்டத்தில் நாம் படித்ததை நினைவு கூர்ந்து பார்த்தால், நம்மால் சரிவர ரீகால் செய்ய முடியாது.
ஏனென்றால் இந்தப் பதட்டம்,மூளையின் நினைவு மீட்கும் பணியினைக் குறைத்துவிடும். பதட்டமாக இருக்கும்போது, நமது கவனம் முழுக்க மூளையால் நாம் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை அத்தனை எளிதாக வெளிக்கொணர முடியாது.அது நம் பதட்டத்தை இன்னும் அதிகப்படுத்திவிடும். பதட்டம் அதிகமாகும் போது ரீகால் செய்யும் திறன் இன்னும் குறைந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்போல சுற்றத் தொடங்கிவிடுகிறது.
ஆனால்,தேர்வு அன்று நமது மனநிலை வேறாக இருக்கும்.அதற்கு முதல்நாள் போல நாம் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் நமது பதட்டத்தையே நினைத்துக்கொண்டிருக்க மாட்டோம். தேர்வு நாள் அன்று நம் கண் முன்னால் ஒரு இலக்கு இருக்கிறது.ஆம், கேள்வித்தாள்.
அப்போது கவனம் முழுக்க கேள்வித் தாளிலும், கேட்கப்பட்ட கேள்வியிலும் நிலைகொள்ளத் தொடங்கிவிடுகிறது. அதனால் நமது பதட்டத்தின்மீதான நம் கவனம் குறையத் தொடங்குகிறது. அதனால் அந்தக் குறிப்பிட்ட கேள்விக்கு உரிய பதிலை நமது மூளை எந்தச் சிரமும் இன்றி, நினைவு அடுக்குகளில் இருந்து மீட்டுக்கொண்டு வருகிறது.எனக்குப் படித்தது ஞாபகம் இருக்கிறது என்று நீங்கள் உணரத் தொடங்கும்போது, பதட்டம் சுத்தமாக மனதில் இருந்து வடிந்துவிடுகிறது.
அதனால் தேர்விற்கு முந்தைய நாள் நம்மால் படித்ததை ஞாபகப் படுத்த முடியவில்லையென்றால்,தேர்வு அன்றும் அப்படித்தான் இருக்கும் என்று கிடையாது.தேர்வு அன்று உங்கள் சூழலும்,கவனமும், மனநிலையும் தேர்வுக்கு முந்தைய நாள்போல நிச்சயம் இருக்காது.
அதேபோல தேர்விற்கு முந்தைய நாள் படிக்கவில்லையென்றால்,படித்ததை எல்லாம் திரும்பப் பார்க்கவில்லை என்றால்,படித்தது அத்தனையும் வீணாகிவிடும் என்பதும் தவறான கருத்து.
நீங்கள் ஒரு வருடமாய்ச் சரியாகப் படித்து இருந்தால் அவை அத்தனையும் மூளையின் இரண்டாம் அடுக்கில் (Longterm memory) பத்திரமாக இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தேர்வு எழுதும்போது ரீகால் செய்து கொள்ளலாம்.
எனது நண்பன் ஒருவன் இருந்தான். மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் பத்தாவது ரேங்க் எடுத்தான். இப்போது இதயநோய் பிரிவில் முதுகலைப் பட்டம்
படித்துக்கொண்டிருக்கிறான்.
அவன் ஒவ்வொரு தேர்வின்போதும் தேர்விற்கு இரண்டு நாள் முன்னதாக எல்லா புத்தகத்தையும் மூடிவைத்து விடுவான்.அந்த இரண்டு நாட்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வான். தேர்வைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பான்.ஆனால் அவன்தான் முதல் மதிப்பெண் வாங்குவான்.
அவனைப்போல எல்லாரும் இருக்க முடியுமா?அது சாத்தியமா என்று தெரியாது.ஆனால் அவன் அப்படி இருப்பது நல்லது எனத் தெரியும்.(அந்த இரண்டு நாள் அப்படி இருப்பதற்காக அவன் வருடம் முழுக்கப் படிப்பான். முதலில் படிக்காமல் கடைசியில் படித்துக்கொள்ளலாம் என்று இருப்பவர்களுக்கு இது பொருந்தாது!)
மர்ணவர்களிடம் ஒரு வெற்று உபதேசம் செய்து,படி படி என்று சொல்வதற்குப் பதிலாக தேர்வைப் பற்றிய அவர்களது தவறான கண்ணோட்டங்களையும், அணுகுமுறைகளையும், எண்ணங் களையும் களைந்தாலேபோதும்
அவர்கள் தேர்வை வெற்றிகரமாக அணுகி தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.
எந்த ஒரு சிக்கலான பிரச்னையையும் நமது சரியான அணுகு முறை இருக்கும்போது சுலபமாகத் தீர்க்கலாம்.தேர்வும் அப்படிதான்

