
தீபாளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், இனிப்புகள்,புதுப்புதுவகையான பட்டாசுகள் தான்.இந்த தீபாவளியை இனிய தீபாவளியாகக் கொண்டாடுவதற்கு இதோ சில சூப்பர் டிப்ஸ்.
* குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற பட்டாசுகளை வாங்குங்கள். ‘அவன் துணிச்சல்காரன், எல்லாத்தையும் வெடிப்பான்’ என பெரியவர்களுக்கான பட்டாசுகளை வாங்கித் தராதீர்கள்.குழந்தைகள் வெடிக்கும்போது அருகில் இருந்து கண்காணிப்பது நல்லது.
* தரமான பட்டாசுகளை வாங்குங்கள்.தரமற்ற போலியான பட்டாசுகளைத் தவிர்த்து விடுங்கள்.அவை சரியாக வெடிக்காமல் உங்கள் பணத்துக்கு வேட்டு வைக்கும்; அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து விபத்தில் சிக்க வைத்துவிடும்.
* அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்த்துவிடுங்கள்.அவை உங்கள் செவிகளுக்கும் ஆபத்து.உங்கள் வீட்டிலும், பக்கத்து வீடுகளிலும் இருக்கும் முதியோர்கள், உடல்நலமில்லாதவர்கள், குழந்தைகளுக்கு மிகுந்த தொந்தரவைத் தரும். செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கம் நல்லதல்ல.
* மிக அதிகமான சப்தத்தையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் வெளிநாட்டுப் பட்டாசுகளைத் தவிர்த்துவிடுங்கள். அவை ஆபத்தானவை மட்டுமல்ல தடை செய்யப்பட்ட அவற்றை வெடிப்பது சட்டப்படி குற்றம்.
* ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் அறிமுகம் ஆகின்றன. அவற்றை எப்படி வெடிப்பது என்று அட்டைப் பெட்டிகளின் மேலே குறிப்பு இருக்கும்.அதைக் கவனமாகப் படித்து பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் ஆபத்து.
* ரொம்ப லூசான ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு கொளுத்த வேண்டாம்.நைலான், பட்டு ஆடைகள், காற்றில் பறக்கும் ஆடைகள் வேண்டாம். நீங்கள் பட்டாசு கொளுத்தும்போது காற்றில் பறந்து, ஆடைகளில் எங்காவது தீப்பற்றிவிடும் அபாயம் உள்ளது. உடலோடு ஒட்டியிருக்கும் ஆடைகளே பாதுகாப்பு.
*தொழிற்சாலைகள், குடிசைப் பகுதிகள், பெட்ரோல் பங்க், மருத்துவமனை அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது.வாகனங்கள் நிறைய வரும் ரோடுகளில் வெடிப்பது, வாகனங்களில் போகிறவர்களுக்கும் ஆபத்து; அவர்கள் தடுமாறி வாகனத்தை தாறுமாறாக செலுத்தினால் உங்களுக்கும் ஆபத்து.
* பட்டாசு அல்லது மத்தாப்புகளைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாப்புகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.
* ராக்கெட் வெடியை சிலர் பாட்டிலில் வைத்து வெடிப்பார்கள்;அது தவறு. தவறுதலாக பாட்டில் வெடித்துச் சிதறினால் நமக்கு பாதிப்பு வரலாம்.
* காலில் செருப்பு அல்லது ஷு அணிந்துகொண்டு வெடிக்க வேண்டும்.யாராவது கொளுத்திவிட்டு அரைகுறையாகப் போட்ட பட்டாசுகள் காலைப் பதம் பார்த்துவிடும் அபாயம் உள்ளது.
* எந்த வெடியையும் கையில் வைத்துக் கொளுத்தக்கூடாது. நீங்கள் தைரியசாலிகள்தான். ஆனால், பட்டாசு என்பது கையில் பிடித்தபடி வெடிப்பது அல்ல!
* சரங்கள் தவிர மற்ற பட்டாசுகளை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே கொளுத்த வேண்டும். சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு, வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக அர்த்தம்.
* பட்டாசுகளைப் பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றுக்குரிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசை மட்டுமே பற்றவைக்க வேண்டும்.இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும். குறிப்பாக சட்டைப் பைகளில் பட்டாசுகளை ஸ்டாக் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து வெடிக்காதீர்கள்.வெடிக்கும் பட்டாசிலிருந்து நெருப்பு எகிறிவந்து அவற்றில் பட்டால் ஆபத்து.
* புஸ்வாணம் கொளுத்தும் போது, சம தரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொளுத்துங்கள்.பூந்தொட்டி, சங்கு சக்கரம், ராக்கெட் போன்ற பட்டாசுகளை கையில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
* வெடிக்கும் பட்டாசுகளின் மீது டப்பா அல்லது வேறு பொருட்களால் மூடி வெடிக்கக் கூடாது.
* பற்ற வைத்த பட்டாசு வெடிக்கத் தாமதமானால், அதைக் கையில் எடுத்து பரிசோதிப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது.அந்த பட்டாசு அப்போது திடீரென வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.திரி எரிந்தும் வெடிக்காத பட்டாசுகளை சிலர் பிரித்துப் பார்க்க முயற்சி செய்வார்கள்.அதுவும் ஆபத்தானதே!
* புஸ்வாணம் எரியவில்லை என்றால், கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது.பத்து நிமிடங்கள் வரை பொறுமையாகக் காத்திருந்து, தண்ணீரில் அந்த பட்டாசை நன்றாக மூழ்க வைத்து, செயலிழக்கச் செய்ய வேண்டும்.
* சிலர் வெடிக்காத பட்டாசுகளைப் பிரித்து, அவற்றில் இருக்கும் மருந்துகளைக் கொட்டி, மொத்தமாக தீ வைத்து எரிக்க முயற்சி செய்வார்கள்.இது விதவிதமான வண்ணங்களில் எரிவது அழகாகத் தெரியலாம். ஆனால், ஏதாவது ஒரு பட்டாசு வெடித்துச் சிதறினால், எல்லோருக்குமே ஆபத்து.
* சிலர் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எறிந்து விளையாடுவார்கள். இது ஆபத்தானது மட்டுமல்ல, கொடூரமான பழக்கமும்கூட! பொதுவாக எல்லா விலங்குகளுமே பட்டாசுகளுக்கு பயப்படும். அவற்றை நீங்கள் பயமுறுத்தினால், அவை பயத்தில் கடித்து வைக்கலாம்.
* பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் வீட்டில் ஸ்டாக் வைப்பது ஆபத்தானது.தீபாவளி பட்டாசுகளில் எஞ்சியவற்றை சிலர் கார்த்திகை தீபத் திருநாள் அன்று வெடிக்கலாம் என எடுத்து வைத்திருப்பது வழக்கம். இந்தக் பழக்கத்தைக் கைவிடுங்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில், அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில், குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

