
டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.DIP.Diabetology,F.C.G.P.
அமெரிக்காவில் சுமார் 2 கோடி பேருக்கு பித்தப்பையில் (Gall Bladder) கற்கள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.ஆச்சரியப்படாதீர்கள்! நமது ஊரிலும் இந்த எண்ணிக்கை இப்போது அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது.
வயிற்றின் வலது மேல் மூலையில், கல்லீரலுக்கு அடியில் பித்தப்பை அமைந்திருக்கின்றது. சுமார் 3 அங்குலம் நீளமும், 1 அங்குலம் அகலமும் கொண்டது பித்தப்பை. பேரிக்காய் வடிவிலிருக்கும் இதன் முக்கியமான வேலை கல்லீரலில் இருந்து வெளிவரும் பித்தநீரை சேமித்து வைப்பதுதான். பித்த நீரை (Bile) சேமித்து வைக்கும் ஒரு ‘குட்டி டேங்க்’ என்று கூட இதைச் சொல்லலாம்.
நமது உடம்பில் தலை முதல் கால் வரை 24 மணி நேரமும்,ஆண்டு முழுவதும் ஆயுள் முழுவதும் ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. நமது உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு, சத்துப்பொருட்களை, சத்துணவுகளை, ரத்தம் தான் கொண்டு போய் சேர்க்கிறது.அதேமாதிரி, செல்களிலிருந்து வெளியாகும் தேவையற்ற பொருட்களை,வீணான பொருட்களை,வெளியில் கொண்டுவரும் வேலையையும், ரத்தம் தான் செய்கிறது.
கல்லீரல் ரத்தத்தை வடிகட்டும் மிகப்பெரிய, முக்கியமான உறுப்பாகும். முக்கியமான வடிகட்டியும் (Main Filter) கல்லீரல் தான். கெட்ட பொருளை வெளியேற்றும் முக்கியமான உறுப்பும் கல்லீரல் தான்.உடலில் சேரும் எல்லாவிதமான கழிவுப் பொருள்களையும், நச்சுப்பொருள்களையும் வெளியே தள்ளுவது கல்லீரலின் வேலை.
நச்சுப்பொருட்களை, கழிவுப்பொருட்களை வெளியேற்றும்போது உருவாகும் திரவம் தான் ‘பித்த நீர்’ ஆகும்.பச்சை நிறமும்,பழுப்பு நிறமும் கலந்த நிறத்தில் பித்தநீர் இருக்கும். எல்லா நேரமும் தயாராகிக்கொண்டே இருக்கும் இந்த பித்த நீர் உடலைவிட்டு வெளியேறும் ஒரு பொருள்தான் என்றாலும் உடலுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.
கழிவு நீர் எப்படி சில காரியங்களுக்கு மறுபடியும் உபயோகப் படுத்தப்படுகிறதோ, அதேபோல் இந்த பித்த நீரும் முக்கியமான வேலைக்காக மறுபடியும் உபயோகப்படுத்தப்படுகிறது.நமது உடலமைப்பு இயற்கையாக அதற்கு ஏற்றபடி அமைக்கப்பட்டிருக்கிறது.
கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தொடர்ந்து அதிகமான அளவில் நாம் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால்,கொழுப்பு முழுவதும் செரிக்க, ஜீரணமாக உணவு மண்டலம் தடுமாறும். அப்படி அதிகமான கொழுப்பை செரிக்க வைத்து ஜீரணமாக்க, பஸ்பமாக்க இந்த பித்த நீர் மிகவும் உபயோகமாக இருக்கிறது.
“அசைவ உணவு இல்லாமல் ஒருநாள்கூட என்னால் இருக்க முடியாது. நெய் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் சாப்பிட முடியாது. சுவீட் இல்லாமல் நான் சாப்பிடுவதே கிடையாது”…என்றெல்லாம் நிறைய பேர் சொல்வதுண்டு. இவைகளை அளவற்று சாப்பிட்டால் அதிக கொழுப்பு சேரும். குறைவாக சாப்பிட்டால், குறைந்த கொழுப்பே சேரும்.இப்படி சாப்பிடும்போது உணவுப் பாதையில் வரும் கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை (Fats & Cholesterol) உடைக்க, சிதைக்க, பஸ்பமாக்க பித்த நீர் பயன்படுகிறது.
நாம் சாப்பிடும் கொழுப்பு நிறைந்த உணவு இரைப்பையைத் தாண்டி சிறுகுடலுக்குள் நுழையும்போது, ‘கோலி ஸிஸ்டோகைனின்’ என்கிற ஹார்மோன் வெளியேறுகிறது.இந்த ஹார்மோன் பித்தப்பைக்கு சிக்னல் கொடுக்கிறது.அதாவது பித்தப்பையை சுருங்கி, பித்தநீரை வெளியே தள்ளு’ என்று சிக்னல் கொடுக்கிறது.உடனே பித்த நீர் பித்தப்பையிலிருந்து வெளியாகி, குடலில் வந்து கலக்கிறது.இந்த பித்தநீர், கொழுப்புச்சத்துள்ள உணவிலுள்ள அமிலத்தை செயலிழக்கச் செய்கிறது.கொழுப்பு உணவுப்பாதைக்கு உள்ளேபோவது தெரிந்தாலே, பித்தநீரும் வெளியாக ஆரம்பித்துவிடுகிறது. உடனே ‘கோலிஸிஸ்டோகைனின்’ ஹார்மோனும் சுரக்கிறது.
பித்தநீரில் கொலஸ்ட்ரால், கால்ஸியம் பிலிரூபினேட் மற்றும் கால்சியம் கார்பனேட் ஆகியவை கலந்திருக்கின்றது.இந்த மூன்று பொருட்களும் ஒரே அளவில் இல்லாமல், ஒன்று கூடி, ஒன்று குறைந்து, வேறு வேறு அளவில் இருந்தால், பித்தப்பையில் கற்கள் உண்டாக வாய்ப்பாகி விடுகிறது.மேலும் பித்த நீர் ஒரே இடத்தில் அதிக நாட்கள் தேங்கி இருந்தால், இந்த மூன்று பொருட்களும் ஒன்று சேர்ந்து உருண்டு, திரண்டு கல்லாக மாறிவிடுகிறது.அதே மாதிரி பித்த நீரில், கொலஸ்ட்ரால் அதிகமாகவும், உப்புக்கள் (Bile Salts) குறைவாகவும் இருந்தாலும், கற்கள் உருவாகிவிடும்.
பித்தப்பை கற்கள் (Gall Stones) ஒரு பெரிய கல்லாகவோ அல்லது நிறைய சிறிய சிறிய கற்களாகவோ உருவாகும்.கொலஸ்ட்ரால் மட்டுமே அதிகமாக படிந்து, கற்கள் உண்டாவது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அதிகம்.
கல்லீரல் நோய், ரத்தக் குறைபாடு நோய்கள், அனீமியா உள்ள வர்களுக்கு அதிகமான அளவில் பிலிரூபின் (Bilirubin) சேர்ந்து கற்கள் உண்டாக வாய்ப்புண்டு.
அதிக எடையுள்ளவர்களுக்கும், அதிக பருமனாக இருப்பவர்களுக்கும் பித் தப்பை கற்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.அதிக குண்டாக இருக்கும் ஆண் களைவிட, அதிக குண் டாக இருக்கும் பெண் களுக்கு கற்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
வயிறு மட்டும் அதிகமாக பெருத்து இருப்ப வர்களுக்கு கற்கள் உரு வாக வாய்ப்பு அதிகம். அதிக குண்டாக இருக்கும் குழந்தைகளுக்கு கூட கற் கள் உருவாகும்.
கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு, சமீபத்தில் அதிக எடை இழந்தவர்க ளுக்கு, கர்ப்பத்தடை மாத் திரைகள் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, கொழுப்பு அதிகமாக உள்ள உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, உடலு ழைப்பு அதிகமாக இல்லாதவர்களுக்கு கற்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. வேண்டுமென்றே உடல் எடையைக் குறைப்பவர்களுக்கும், வேண்டுமென்றே உடல் எடையைக் கூட்டுபவர்களுக்கும் கற்கள் தோன்றும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகமாக, மருந்து போல் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும், மாதவிலக்கு நிற்கும் சமயத்தில் ஹார்மோன்கள் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும் கற்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ரத்தத்தில் ‘டிரை கிளிசரைடு
என்று சொல்லக்கூடிய கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும், கற்கள் ஏற்படலாம்.
பித்தப்பை கற்கள் தானாக வெளியே வர வாய்ப்பில்லை என்று கருதி அறுவை சிகிச்சையும் (Cholecystectomy), மருந்து சிகிச்சையும் எல்லா நாடுகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.பித்தப்பை கற்களை அகற்ற பண்ணப்படும் ஆபரேஷன், உலகிலேயே சீனாவில்தான் மிக மிகக் குறைவு.பித்தப்பை கற்கள் சுமார் 1 செ.மீக்கு குறைவாக இருந்தால், ஆபரேஷன் பண்ணுவதைவிட, மருந்து மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தான் சீனர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.
பித்தப்பையில் கற்கள் இருக்கும் பலபேருக்கு வயிற்றில் வலியோ, வேறு எந்த அறிகுறியோ இருக்காது.வேறு ஏதாவது காரணத்துக்காக டாக்டரிடம் சென்று, ஸ்கேன் பரிசோதனைகள் பண்ணும்போது தான் அவர்களுக்கு பித்தப்பையில் கற்களும் இருக்கின்றன என்று தெரிய வரும்.உடலில் அதிக எடை போடாமல் பார்த்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, கற்கள் உருவாக வாய்ப்பில்லாமல் செய்யும்.
கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதனால் தான் பித்தப்பையில் கற்கள் உருவாகிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆரோக்கியமான கொழுப்பு (Healthy fats) அடங்கிய உணவுகளாகிய மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால், கற்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு. பழங்கள், காய்கறிகள் முதலியவைகளின் ஜூஸ்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு மொத்தத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் மட்டுமே உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். புராக்கோலி, காலி ஃபிளவர், கீரைகள், மூலிகைகள், கேரட், சர்க்கரை வள் ளிக்கிழங்கு, ஆர்டிசோக், வெங்காயம், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், பெர்ரி, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம் ஆகியவைகளை அடிக்கடி அதிக அளவில் சாப்பிட்டுப் பழக வேண்டும்.
உடல் அதிக பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள்.அதிக நேரம் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்திருக்காதீர்கள். உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். இவ்வாறு செய்தால் பித்தப்பையில் கற்கள் உருவாகாது. தைரியமாக அல்வாவையும் சாப்பிடலாம்.அசைவ உணவையும் சாப்பிடலாம்.

