டாக்டர் பா.முல்லை, MD (Hom)
ஹோமியோபதி நிபுணர்.

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா “ என்று பெண்மையை போற்றினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இதை ஏற்பவர் பலரும்,மறுப்பவர் சிலரும் உண்டு. பெண்மையை பற்றிய புரிதல் என்பது பெண்களுக்கு முழுமையாய் கொடுப்பதே இந்த தலைமுறைக்கு இருக்கும் முக்கிய பொறுப்பு ஆகும். பெண்மையைப் பற்றி பேசும்போது, அவர்களுக்கு தனித்துவமாய் விளங்கும் மாதவிடாய் சுழற்சியும் தாய்மை அடைவதும் பற்றியே நெஞ்சம் நினைவுபடுத்தும்.

ஏனெனில் மாதவிடாய் பிரெச்சனைகளும், குழந்தையின்மை பிரச்னைகளும், மருத்துவமனை விளம்பர அறிக்கைகளின் செய்திகளும் நம் வீட்டுக் கதவை அன்றாடம் தட்டுகின்றன.இயற்கையாய் நிகழ வேண்டிய ஒன்றில் இக்கால பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் பற்றிய புரிதல் பேரிளம் பெண்களுக்கே இல்லாதபோது மங்கையும் மடந்தையும் அறிந்து கொள்வது எப்போது.?

தன் வாழ்வு முறையும் மாதவிடாய் சுழற்சியும் பிணைந்துள்ள முறையை பற்றியும் பெண்களாகிய நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இதனை முழுமையாக விளக்கிக் கொள்ள உடலின் பல்வேறு இயக்கங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.அதனுடன் மாதாமாதம் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் வந்து போகின்றன என்று கவனித்தல் வேண்டும்.ஏனெனில் மாதவிடாய் என்பது கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல.

மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தி சீராக நடைபெற செய்வது மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைப்போதலாமஸ்(Hypothalamus) மற்றும் பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) என்ற உறுப்புகள் ஆகும். இந்த எஜமான்கள் மாதவிடாய் மட்டுமல்ல உடலின் பல்வேறு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி சீராக நிகழ்த்த அயராது உழைக்கின்றன.
நம் உடலின் செயல்பாடுகளுக்கும் நம் எண்ணங்களுக்கும் உள்ள இணைப்பு என்பது இவர்களின் மூலமே நடக்கிறது.

ஏதோ ஒரு நாள் நீங்கள் அலுவலகத்திற்கு தாமதமாக சென்று அதனால் குற்ற உணர்ச்சியாய் உணர்ந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகளால் விரக்தியடைந்தாலோ, எதையேனும் கண்டு பயந்தாலோ,ஒரு தீவிர எண்ண ஓட்டத்தில் உழன்றாலோ,அதீத கோபத்திற்கு உள்ளானாலோ, மிகுந்த துக்கமும் அழுகையும் ஆர்பரிக்கும்போதும், பொறாமையும் தீங்கிழைக்கும் தீய எண்ணமும் நிகழும் போதும்,வெற்றி பெற்று களிப்புறும் போதும்,தோல்வி பெற்று சோர்வடையும் போதும், வாழ்க்கையை நேசிக்கும் போதும் வெறுப்பு வரும் போதும்,பேராசையும் துறவறமும் துளிர்க்கும்போதும், ஒவ்வொரு எண்ண மாற்றங்களின் அதீதமும் பற்றாக்குறையும், மூளையில் உள்ள சில,பல பகுதியில் ஹார்மோன்களை தூண்டி பல்வேறு விதமான உடல் மாற்றங்களை கொண்டு வரும்.

ஏனெனில் எந்த ஒரு முரண்பாடான சூழ்நிலையும் அதன் தாக்கமும் மனிதனை கொல்லாமல் பாதுகாக்க தூண்டப்படுவதே இந்த படிப்படியான செயல்பாடுகள் என்பது இயற்கையின் உண்மை.

இவ்வாறாக பெண்மையின் நிலை மாறி செயல்படும் ஒவ்வொரு கணமும் அவை உங்களை நிலை கொள்ளாது ஆட்கொள்ளும் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். சினைப்பையில் கரு முட்டையை வளர தூண்டச் செய்து அதனை அடுத்து கர்ப்பப்பையில் திடத்தைக் கூட்டி பின் சினைப்பையில் கருமுட்டையை வெளிவரச் செய்து உயிர் உருவாக காத்திருந்து,மாறாக அவ்வாறு நிகழக்கூடிய சூழ்நிலை இல்லையென்றால் மாதவிடாயை கொண்டு வரும் வரை எண்ணிலடங்கா உயிரியல் மாற்றங்களை திட்டமிட்டார் போல் கச்சிதமாக நடத்திக் கொண்டு அதன் போக்கில் முழு மூச்சில் செயல்படுகிறது.

இந்த உடலின் அதி அற்புத இயற்கை உயிராற்றல் எத்தனை பெரிய மெய்யறிவு. இதனை அனுபவித்து உணர செய்துள்ள இந்த மனிதப் பிறப்பு அதிசயம் தான் அதனிலும் சிறப்பு பெண்மை.

ஏனெனில் நம் காலத்திற்கு பின் பல்லாயிரம் கோடி வருடங்களுக்குப் பிறகு உயிர்த்து வரும் மனிதர்களின் புலன்களின் அறிவுத்திறனும், உயிர் அணுக்களின் ஆரோக்கியமும், பகுத்தறிவும்,வாழ்வு முறையும் இந்த ஒட்டுமொத்த இனத்தின் மனிதத் தன்மையும் தாய்மையில் அடங்கியுள்ளது என்று சொல்வது மிகை ஆகாது. தாய்மையும் அன்பும், சினைப்பையும் கர்ப்பப்பையும் ஒன்றேயன்றி வேறில்லை.எப்படி இதை கண்ணாடி கோப்பை போல் பத்திரமாக கையாள்வது? ஒரு ஆழமான வழியைச் சொல்லி முடிக்கிறேன். நம் பெண்மையின் நிறங்கள் அனைத்தையும் மங்கவிடாமல் அதிநவீன உலகியல் பண்பாட்டில் உயர்ந்து வருவதே ஆகும். இந்த அத்தியாவசியமான புரிதலை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து கொள்வதே பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்.

பெண்களாய் முதலில் பெண்மையை போற்றுவோம் பேரினிமையை
கொண்டாடி மகிழ்வோம்.