-டாக்டர் ஜி.ராஜமோகன்.
உளவியல் ஆலோசகர்.

ளம் வயதில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவது என்பது பாரம்பரியம்,வளரும் சூழல் பொறுத்து அமையும்.பருவமடைதல் சற்று தாமதமானால், ‘நாம் இன்னும் பருவமடையவில்லையே, நம் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ஏஜ் அட்டண்ட் பண்ணிட்டாங்களே.. நமக்கு ஏதேனும் பிரச்னை இருக்குமோ?’ என்று அவர்கள் தங்கள் மனதிற்குள்ளேயே குமைந்துகொள்ளும் சூழல் உண்டாகலாம். ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில்தான் பிள்ளைகளுக்குத் தங்களது உடலமைப்பு (Body Image) குறித்த கவலை அதிகம் இருக்கும்.அவர்களது சுயமரியாதை உணர்வு இந்தக் காலகட்டத்தில்தான் வளரத் தொடங்கும்.எனவே, தான் இன்னும் பருவமடையவில்லையே என்று ஏற்கெனவே வருத்தத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், “நீ ஒழுங்காவே சாப்பிட மாட்டேங்குற. அதனாலதான் நீ பெரிய பிள்ளை ஆகுறது லேட் ஆகுது” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தால் அது அவர்களுக்கு இன்னும் அதிகமான மன உளைச்சலைக் கொடுத்துவிடும். இதனால் தாழ்வுமனப்பான்மை ஏற்படலாம்.

என்னதான் பிள்ளைகள் காலை முதல் மாலை வரை பள்ளியிலேயே இருந்தாலும் அவர்களின் உணர்வுநிலை சிறப்பாக இருப்பதற்கு வீட்டுச் சூழல் தான் மிக முக்கியமாகப் பங்காற்றுகிறது.எனவே குழந்தைகளின் நம்பிக்கை உணர்வைக் குலைப்பது போன்று பெற்றோர் ஒருபோதும் பேசக் கூடாது.குறிப்பாக பருவமடைதல் சற்று தாமதமாகும்போது சக நண்பர்கள் உட்பட பலரது விமர்சனங்களுக்கும் அவர்கள் ஆளாக நேரிடும்.இது உண்டாக்கும் அழுத்தம் மிகமிக அதிகம்.எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் தங்களது அன்பையும்,

ஆதரவையும், நம்பிக்கை யையும் அளவின்றி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் இந்தச் சமூகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும். இன்னொரு பக்கம், விரைவாக பூப்படைதல் நிகழ்ந்தாலும், ‘அதுக்குள்ள ஏஜ் அட்டண்ட் பண்ணிட்ட’, ‘எப்ப பார்த்தாலும் சாப்பிட்டுட்டு இருந்தா இப்படித்தான் ஆகும்’ என்றெல்லாம், அதை அடிக்கோடிட்டுப் பேசிக்கொண்டே இருக்கக் கூடாது. மற்றவர்களையும் பேச அனுமதிக்கக் கூடாது.
பெண் குழந்தைகளை மன அழுத்தத்தில் தள்ளாமல் கவனமாக நடத்த வேண்டும்.

-டாக்டர் ஜி.ராஜமோகன்.
உளவியல் ஆலோசகர்.