
உலக மனநல தினமாக அக்டோபர் 10 ம் தேதி கொண்டாடப்படுகிறது.மனித உடலை எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்தால் கூட தட்டுப்படாத உறுப்பான மனதுக்கு மனித குலம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?இந்த ரகசியத்தை அறிந்து கொண்டால் எல்லாம் சுகமே!
இந்த உலகத்தில் எல்லோரும் அதிகம் போற்றும் பணத்தைவிட மதிக்கப்பட வேண்டியது ஒருவரின் ஆரோக்கியம். ஏனெனில்,உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே,வாழ்வின் சூட்சுமமான மகிழ்ச்சியையும், வெற்றியையும் முழுமையாக அடையமுடியும்.இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை வரும்;ஆனால், நாமோ உடல் ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மன ஆரோக்கியத்திற்குக் கொடுப்பதில்லை.
உடலை விட மனதிற்கே தினந்தோறும் பல காயங்கள் ஏற்படுகிறது.உடலைக் காட்டிலும்,மனதே பல தாக்குதல்களுக்கு உள்ளாகிறது.
பெருகிவரும் தனிக்குடும்பங்கள், விவாகரத்துகள்,குடும்ப வன்முறை, தவிர்க்கமுடியாத தொழில்நுட்பக் கருவிகள்,மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோரின் மனப்பாங்கு, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் போன்ற பல்வேறு உளவியல்-சமூக காரணங்களினால்,குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் மனநலம் தற்காலத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறது.நாட்டின் நம்பிக்கைத் தூண்களாக இருக்க வேண்டிய இளைய சமுதாயத்தின் மனநலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது!
மனநலப் பிரச்னைகள் பலருக்கு இருப்பினும்,அவை சரியாகக் கண்டுபிடிக்கப்படாமலும்,முறையான சிகிச்சை அளிக்கப்படாமலும் இருப்பது நல்லதல்ல.
மனநல பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் வாழ்க்கை வளமானதாக இருக்கும். எல்லா மன நோய்களும் தீவிர மன நோய்களாக இருக்க வாய்ப்பில்லை. மனநல மருத்துவர்கள் ஆலோசனையை கேட்பதற்கோ, அவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கோ தயங்க வேண்டியது இல்லை.
இந்த ஆண்டு உலக மன நல கொண்டாட்டத்தில், பணியிடங்களில் மனநலம் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
வேலைக்குப் போகிறவர்கள்,தொழில் வியாபாரத்தில் ஈடுபடுகிறவர்கள் பணியிடங்களில் மனமகிழ்ச்சியோடு,பாதுகாப்பு உணர்வோடு பணியாற்றினால்…
சோர்வு இருக்காது;மாறாக உற்சாகமாக வேலை செய்வார்கள்.செய்யும் பணிகளில் நேர்த்தி வெளிப்படும்.இதனால் மன நிறைவு ஏற்படும்.
பள்ளி,கல்லூரிகளில் மனநல விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.மனநலம் பற்றிய புரிதல் ஏற்பட அனைவரும் உதவ வேண்டும்.
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
“நல்ல மனிதர்களுடன் கூடியிருத்தல் நமக்கு எல்லா நன்மைகளும் தருவது போல்,மனத்தில் நல்ல எண்ணங்கள் நிறைந்து இருத்தல் நம் உயிரை நிலை பெறச் செய்து,நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்” என்கிறார் திருவள்ளுவர்.
அன்புடன் டாக்டர் ஜி.ராஜமோகன்.

