
டாக்டர் டி.காமராஜ்.எம்.டி,
பாலியல் நிபுணர்
உங்கள் வாழ்க்கைத்துணையை விருந்தாளியைப்போல நடத்துங்கள். விருந்தாளி என்றால் வேண்டா விருந்தாளி மாதிரியல்ல. உங்களுக்கு மிகப் பிடித்த, எப்போதும் நீங்கள் உடன் இருக்க விரும்புகிற, உங்களை எல்லா விஷயங்களிலும் ஈர்த்த ஒரு நபர் மாதிரி… அப்படியொரு விருந்தாளி, உங்கள் வீட்டுக்கு வருகிறார் என வைத் துக்கொள்வோம்… அந்த நபரை நீங்கள் எப்படியெல்லாம் உபசரிப்பீர்கள்… அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது எனப் பார்த்துப் பார்த்து செய்வீர்கள், எந்த வகையிலும் அவர் மனம் நோகும்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள்.

நீங்கள் மிகவும் விரும்பி வாங்கி வைத்த அல்லது சென்டிமென்ட்டாக வைத்திருக்கும் பொருளை, விருந்தினர் தவறுதலாக உடைத்து விடுகிறார்…. அந்த நபரின் மீதான உங்கள் மரியாதையும் அன்பும் அந்தச் செயலை மன்னித்து, மறக்கச்செய்யும் தானே? அவருக்குப் பிடிக்காததை நீங்கள் செய்யாமலிருப்பதிலும், உங்களுக்குப் பிடிக்காததை அவர் செய்தாலும் சகித்துக்கொள்ளவும் மனத்தளவில் தயாராவீர்கள்தானே? அதே அணுகுமுறையை வாழ்க்கைத்துணை யிடமும் கடைப்பிடித்துப் பாருங்கள். உண்மையில் காதலிக்கிற போதும், கல்யாணப் புது ஜோரிலும் ஆணும் பெண்ணும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்.
போகப்போக எல்லாம் மாறுகிறது. வாழ்க்கைத்துணையிடம் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவோம். அதுவே நமக்குப் பிடித்த விருந்தினரிடம் நாம் கடுமையாகவோ. கோபமாகவோ நடந்துகொள்ளமாட்டோம். முதல் வகை வார்த்தைப் பரிமாற்றம் வன்முறை நிறைந்தது.
அடுத்தது வன்முறையில்லா பேச்சுப் பரிமாற்றம். இந்த வகைப் பேச்சுவார்த்தைக்குப் பழகிவிட்டால், வாழ்க்கையில் எந்த நேரத்திலும், எந்த உறவிடமும் பிரச்னைகளே வராது.
வன்முறையில்லாத வார்த்தைப் பரிமாற்றத்தை நான்கு படிகளாகப் பழகலாம். அதெப்படி?
1) உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை உங்கள் துணை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனடியாக உணர்ச்சி வசப்பட்டு, ஆகாயத்துக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்து, ஆர்ப் பாட்டம் செய்வதுதான் பலரும் செய்கிற ஒன்று. அப்படிச்செய்யாமல், அமைதியாக அதை எதிர்கொள்ளலாம். ‘நீ ஏன் அப்படிச் செய்தாய்?” எனக் கேட்பதற்குப் பதில், ‘நான் அதை இப்படிப் பார்த்தேன்’ என உங்கள் எண்ணத்தைச் சொல்லலாம்.
2) நடந்த சம்பவத்தினால் உங்களுக்கு உண்டான மனவருத்தத்தைப் பற்றிப் பேசும்போது, ‘உன்னாலதானே இப்படி ஆச்சு. நீ என் னைக் காயப்படுத்திட்டே. என்று எதிராளியை சுட்டிப் பேசாமல், ‘எனக்கு மனசு கஷ்டமா இருந்தது’ என்று சொல்லிப் பாருங்கள்….
3) அதே மாதிரி சம்பவம் மறுபடி நடக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறை கூறுகிற தொனியில் சொல்லாமல், அன்பாக, கனிவாகச் சொல்லுங்கள்.
4) ‘உனக்கு அறிவே இல்லை… ஏன் இப்படிப் பண்ணினே. என எரிந்து விழுவதற்குப் பதில், ‘தயவு செய்து இதை இப்படிச் செய்ய முடியுமா? என வேண்டுகோளாகக் கேட்கலாம்.
இந்த நான்கு விஷயங்களையும் வாழ்க்கையின் எல்லா தருணங் களிலும் பின்பற்றிப் பாருங்கள்… உங்கள் துணையைக் காயப்படுத்தாமலே நீங்கள் விரும்பியதைப் பெறுவீர்கள்.
கணவன்-மனைவிக்கு இடையில் மட்டுமின்றி, பிள்ளைகள், வேலையாட்கள், சக ஊழியர் கள் என எல்லோரிடத்திலுமே அன்பையும் நட்பையும் உறவையும் வளர்க்கும் இந்த அணுகுமுறை.
உங்கள் தோழியோ, நண்பரோ வலிய வந்து உங்களுக்கு ஒரு உதவி செய்கிறார் என வைத்துக்கொள்வோம். உங்களை தனது காரில் டிராப் செய்கிறார். சாப்பாடு வாங்கித் தருகிறார். உடல் நலமில்லாதபோது, அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார்… இப்படி ஏதோ ஒன்று… அதை நன்றியோடு பார்ப்பீர்கள்தானே… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அந்த உதவியை நினைவுகூரவும் பாராட்டவும் செய்வீர்கள் இல்லையா? உங்களுடனேயே இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணை காலம் முழுக்க உங்களுக்கு அப்படி எத்தனையோ உதவிகளைச் செய்துகொண்டே இருக்கிறார் ஒரு நாளாவது அதற்கு நன்றி தெரிவித்திருப்பீர்களா?
‘கணவன்-மனைவிக்குள்ள என்ன தேங்க்ஸ் வேண்டியிருக்கு’ என்று அலட்சியமாகக் கேட்காதீர்கள். திருமணத்துக்குப் பிறகு கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகளாக சில பலவற்றை எழுதப்படாத விதிகளாக நாமே ஏற்படுத்திக்கொள்கிறோம். ஆனால், கணவனையும், மனைவியையும் இணைப்பது காதல் மட்டும்தானே தவிர. இப்படி எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை.
மனைவியாக வந்தவர், சமைத்துதானாக வேண்டும். வீட்டு வேலைகளைச் சுமந்துதானாக வேண்டும் என்றெல்லாம் எந்தச் சட்டமும், சாஸ்திரமும் சொல்லவில்லையே… அதையும் மீறி அவர் செய்கிறார் என்றால், அதை நன்றியோடு ஏற்றுக்கொள்வதுதான் கணவனுக்கு அழகு.மனைவிக்கும் இதே அட்வைஸ்தான். ஆனால், நாம் என்ன செய்கிறோம்… எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள் கிறோம். ஒரு நாள் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றம் தந்தாலும்,துணை யின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறோம். நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும், அவற்றைத் தவிர்த்து, நெகட்டிவ் விஷயங்களை கவனிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறோம்.
காதலும் கல்யாணமும் கசக்காமல் இருக்க… வாழ்க்கைத்துணையை விருப்பமான விருந்தாளியாகப் பார்க்கவும், பழகவும், நடத்தவும் முயற்சி செய்து பாருங்கள் உறவுகள் என்றென்றும் தித்திக்கும்.

