டவுளைக் கண்டவர்கள் யாருமில்லை.ஆனால்,உலகில் கண்கண்ட தெய்வமாக இன்றும் இருப்பவர்கள் டாக்டர்கள்தான். காரணம் ஒரு உயிரைக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும் என்பதால்,மருத்துவர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.மருத்துவ தொழிலே சேவைத் தொழில்தான்.டாக்டர்களுக்கு நாம் சேவைக் கட்டணம்தான் கொடுக்கிறோம்.மருத்துவம் வணிகமயமாகி,கார்ப்பரேட் மருத்துவமனைகள் பல்கிப் பெருகி,மக்களிடம் காசு பிடுங்கும் தொழிலாக  மாறிவிட்டது. நோய்வாய்ப்பட்டு வரும் மனிதர்களிடம் கன்சல்டேஷன் என்ற பெயரில் நோய் நாடி,நோய் முதல் நாடி பார்ப்பதற்குப் பதிலாக,அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார்களா என்று நாடி பிடித்துப் பார்க்கிறார்கள். 
 
ஒரு சில டாக்டர்களும்,மருத்துவம் பார்ப்பதை சேவையாக கருதாமல் காசு பார்க்கும் தொழிலாக கருத ஆரம்பித்து விட்டார்கள்.இவர்கள் எல்லாம் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள்.ஒரு ஆபரேஷனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கும் மருத்துவரை விட,ஒரு நோயாளியைப் பார்க்க இருபது ரூபாய்,முப்பது ரூபாய் வாங்கும் மருத்துவர்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு டாக்டர்தான் எஸ்.அமுதகுமார்.
 
 கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு தொண்டு செய்வதையே மருத்துவ தொழிலின் நோக்கமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.அதோடு மருத்துவ அறிவியலை பாமர மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலும் பெரும் பங்காற்றி உள்ளார்.மருத்துவர்களின் கையெழுத்து மருந்துக் கடைக்காரர்களுக்கு மட்டுமே புரியும் என்பார்கள்.அது உண்மைதான் என்பதில் சந்தேகமில்லை.ஆனால்,டாக்டர் எஸ்.அமுதகுமாரின் எழுத்துக்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி இருக்கும். 
 
முன்னாள்,இன்னாள் அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,பிரபல தொழில் அதிபர்கள்,அரசு அதிகாரிகள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலருக்கு மருத்துவம் பார்த்திருந்தாலும்,பாமர மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக அவரது செயல்பாடுகள் இன்றைக்கும் இருக்கிறது. 
டாக்டர் எஸ்.அமுதகுமார் மிகவும் எளிமையானவர்.மருத்துவ உலகின் மாணிக்கம் என்று சொல்லலாம்.அவரைப் பற்றியும், அவரோடு உரையாடியதில் இருந்தும் சிலவற்றைப் பார்க்கலாம்.
 
நெல்லை சீமைக்கு பெருமை சேர்த்த பல பேர்களில் டாக்டர் எஸ்.அமுதகுமாரும் ஒருவர். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சேரன்மகாதேவியில்அவர் பிறந்தார்.அவர் சென்னைவாசியாகி நீண்ட நெடுங்காலமாகி விட்டது.தற்போது சென்னை, சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் 25 ஆண்டுகளாக மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
 
1975ஆம் ஆண்டு,சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மருத்துவ அறிவியலை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் எழுத ஆரம்பித்த இவர் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறார்.
 
மருத்துவ புத்தகங்கள், மருத்துவம் சார்ந்த பத்திரிகைகள் தமிழில் வெளி வருவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர் என்று சொன்னால் அது மிகையில்லை.  
 
தமிழ்நாட்டில் வெளியான பெரும்பாலான இதழ்களில் கதை, கவிதை,சினிமா கிசுகிசு…என்று பொழுதுபோக்கு அம்சங்களே நிறைந்திருந்த சூழ்நிலையில், மக்களின் வாசிப்பை பொழுதுபோக்காக அல்லாமல்… பயனுள்ளதாக்க மருத்துவ அறிவியலை தமிழில் எழுதத் தொடங்கியவர் டாக்டர் எஸ்.அமுதகுமார்.
 
சிறந்த மருத்துவர் மூன்று அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறார் என்று சொல்வார்கள்.அவை சம்பந்தப்பட்டவரின் திறமை,எளிதில் அணுகக் கூடியவராக இருத்தல் மற்றும் இணக்கமான மனநிலையுடன் இருத்தல்.இந்த மூன்று அம்சங்களுக்கும் முன்னுதாரணமாக,வாழும் வரலாறாக இருப்பவர் டாக்டர் எஸ்.அமுதகுமார்.
 
இருளைப் பற்றிப் பேசுவதைவிட,ஒரு விளக்கை ஏற்றுவதே சிறந்தது என்று சொல்வார்கள்.அப்படி மகப்பேறு விஷயத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே “நாட்டுப்புறங்களில் வீட்டுப் பிரசவம்” என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
 
50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே நடக்கும். பிரசவத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது. தாய் அல்லது சேய் மரணத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். மக்கள் விதியை நொந்து கொண்டு கடந்து போய்விடுவார்கள்.விதியை மருத்துவ அறிவால் வெல்லலாம் என்று எழுத்தின் மூலம் கிராமப்புறங்களுக்கு கொண்டு போய் சேர்த்தவர் டாக்டர் எஸ்.அமுதகுமார்.
 
‘‘வேண்டாம் வீட்டில் பிரசவம். மருத்துவமனையில் பார்ப்பதே தாய், சேய்க்கு நலம்’’ என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து தனது படைப்புகளை பிரபல பத்திரிகைகளில் வெளிவரச் செய்தார்.
 
தினமணி நாளிதழில் அவர் தொடர்ந்து எழுதிய மருத்துவக் கட்டுரைகளுக்கு பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு வானொலியில் பிரபல மருத்துவர்களை வாராவாரம் நேர்காணல் செய்து வானொலி நேயர்களின் அனைத்து மருத்துவ சந்தேகங்களையும் தீர்த்து வைத்திருக்கிறார். தொலைக்காட்சி வந்த பிறகு அதிலும் டாக்டர் எஸ்.அமுதகுமாரின் பங்கேற்பு இருந்தது. தொலைக்காட்சியில் பல்வேறு மருத்துவ நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.அதன் மூலம் கிராமப்புறத்திற்கும் மருத்துவம் தொடர்பான தகவல்களை பரவச் செய்தார்.  மருத்துவ அறிவியலை மட்டுமல்ல…சாதனை படைத்த மருத்துவர்களையும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
 
சினிமாக்காரர்களை வைத்து விளம்பரம் செய்தால்தான் எந்தப் பொருளும் கடைசி பாமரன் வரை போய் சேர்வது காலம், காலமாக இங்கு நடைபெற்று வருகிறது.அதற்கு உதாரணம் ‘‘லக்ஸ்’’ சோப்.தாத்தா,பாட்டி காலத்தில் இருந்து இன்று வரை சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் அதுதான்.இந்த விளம்பர உத்தியையும் கையிலெடுத்த டாக்டர் எஸ்.அமுதகுமார்,  மருத்துவர்களை சினிமா நடிகர், நடிகைகளை சந்தித்து பேச வைத்து,மருத்துவம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக  இறங்கி அதிலும் சாதனை படைத்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எலும்பு சிறப்பு நிபுணர் டாக்டர் மோகன்தாசை சந்திக்க வைத்து பேட்டி எடுத்து,அதை பிரபல வார இதழில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருக்கிறார்.இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஆர்.கிரிநாத் உட்பட பலரையும் மக்கள் மத்தியில் எழுத்து மூலம் கொண்டு சேர்த்த பெருமை டாக்டர் எஸ்.அமுதகுமாருக்கு  உண்டு. நடிகை ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி உட்பட பலரையும் மருத்துவ பேட்டிக்காக இயக்கியிருக்கிறார் இவர்.
 
நமது ஹெல்த் அண்ட் பியூட்டி இதழிலும் டாக்டர் எஸ்.அமுதகுமாரின் படைப்புகள் ஏராளமாக வெளிவந்துள்ளன.  தற்போது தினத்தந்தி நாளிதழில் வெளிவரும் மருத்துவ கேள்வி பதில் பகுதியில் தொடர்ந்துசில ஆண்டுகளாக எழுதி வருகிறார்.
 
இதுவரை 10 க்கும் அதிகமான மருத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய மருத்துவ நூல்களை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா,கனிமொழி எம்.பி., பேராசிரியர் க.அன்பழகன், பத்மபூஷன் கமல்ஹாசன், கவிப்பேரரசு பத்மபூஷன் கவிஞர் வைரமுத்து,திருமதி துர்கா ஸ்டாலின்,அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
 
50 ஆண்டுகால மருத்துவ விழிப்புணர்வை எழுத்து மூலம் ஏற்படுத்தியதற்கு தமிழக அரசு மிக உயரிய விருதான ‘கலைமாமணி’ வழங்கி கௌரவித்திருக்கிறது.தான் சாகும் வரை தமிழக மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உதவும் வகையில் மருத்துவ விழிப்புணர்வுக்கும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன் என்று அவர் உறுதியாக சொல்கிறார்.  இவரது அப்பா… சொல்லி இருக்கிறார்… “சாதாரண மக்களுக்கு உதவுவது உனது கடமை.அதை உனது கடைசி காலம் வரை செயல்படுத்து”என்று அன்புடன் கேட்டுக் கொண்டாராம்.
 
உடல் நலக்குறைவு என்பது வாழ்வின் இருண்ட பகுதி.நோய் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.மீறி வந்தாலும் விரைவில் நலம் பெறவும் முடியும்‌.இதற்கு மக்களை தயார் படுத்துவது தான் எனது முக்கிய நோக்கம் என்கிறார் டாக்டர் எஸ்.அமுதகுமார்.
 
உச்சி முதல் பாதம் வரை நோய்கள் வரும்போது குதிரை பாய்ச்சலில் வேகமாக வரும்…போகும்போது மட்டும் அடி மேல் அடி வைத்து மெதுவாக நடந்து செல்லும்.மக்கள் பல்வேறு வகையான நோய் பாதிப்புகளால் அவதிப்படுகிறார்கள்.சுற்றுப்புற சூழல் மாசு பாதிப்புகள்,அளவுக்கு அதிகமான கெமிக்கல், பிளாஸ்டிக் பயன்பாடுகள்,மன அழுத்தம்,பொருளாதாரப் போராட்டங்கள் எல்லாமே நோயின் பிடியில் மனிதர்களை தள்ளுகின்றன.
 
மரணம் வேண்டும்; மரண வலி வேண்டாம் என்று அலறும் சத்தம் எனது காதில் கேட்கிறது. இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற உதவ வேண்டும்.  என்னுடைய பெரும்பாலான நேரத்தை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே செலவிடுகிறேன்.மிகக்குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறேன். நான் பணியாற்றும் மேத்தா மருத்துவமனை நிர்வாகமும் மனித நேயம் மிக்கது.ஏழை எளியவர்களுக்கு உதவ அவர்களும் ஆதரவு தருகின்றனர்.
 
மனித உடல் ஓர் உயிருள்ள அதிசய இயந்திரம்.அறிவியலை அறிந்தவர்கள் இதை அறிவார்கள்.இந்த அதிசய இயந்திரத்தை எவராலும் உருவாக்க முடியாது.மருத்துவம் வியாபாரமயமாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது.அதே நேரத்தில் மக்களின் உயிர்களை காப்பதே எனது உயிர் மூச்சு என்று வாழும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.அவர்களை கொண்டாடி மகிழ வேண்டும். நல்லவர்களை வாழ்த்த வேண்டும்.
 
பொது மக்களுக்கு எழுத்து மூலம் மருத்துவ விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம்.அதை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறேன்.நான் படித்த மருத்துவம் மக்களின் உயிரைக் காப்பாற்ற உதவும்.அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்கிறார் டாக்டர் எஸ்.அமுதகுமார்.
 
டாக்டரின் விழிப்புணர்வு சேவைகளை நமது இதழ் சார்பில் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறோம்.இவரைப் போன்ற மருத்துவர்களை மத்திய,மாநில அரசுகள் கௌரவிக்க வேண்டும்.உயர்ந்த விருதுகள் அளித்து சிறப்பிக்க வேண்டும்.
 
குடும்ப மருத்துவர் முக்கியம்!
 
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்துவர் அவசியம் இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் குடும்ப மருத்துவர் அறிந்திருப்பார்.ஒரு குழந்தையின் பிறப்பு முதல்,முதுமையில் இறப்பு வரை குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதல் கிடைக்கும்.ஐரோப்பா முழுவதும் குடும்ப மருத்துவர் சிகிச்சை இன்றும் இருக்கிறது.
 
முன்பு தமிழ் சினிமாக்களில் வீட்டிற்கே மருத்துவர் வந்து சிகிச்சை அளிப்பதை பார்த்திருப்போம்.
ஒருவருடைய நோய் பாதிப்புகள்,மருத்துவ வரலாறு,அறுவை சிகிச்சை விவரங்கள் எல்லாவற்றையும் குடும்ப மருத்துவர் அறிந்து வைத்திருப்பார்.
 
உடல் நலம் இல்லை என்றால் முதலில் குடும்ப மருத்துவரைத் தான் அணுக வேண்டும். தேவைப்பட்டால் ஸ்பெஷலிஸ்ட்டுகளை அவர் சிபாரிசு செய்வார்.டாக்டர் அமுதகுமார் குடும்ப மருத்துவராக இன்றளவும் செயல்பட்டு வருகிறார். அனைவருக்கும் ஒரு குடும்ப மருத்துவர் இருக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை.
சந்திப்பு:கு.ஷைலஜா.
படங்கள்: பிரவீன்குமார்.