
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது காலம் காலமாக,அது ஏதோ அருவருக்கத்தக்க நிகழ்வு என்று பார்க்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை தனிமைப்படுத்திவைக்கும் நிகழ்வுகள் இன்றும் சில கிராமப்புறங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் வலிகள்,பொது இடங்களில் உணரும் அசௌகர்யம் இவையெல்லாம் பெண்கள் மட்டுமே உணர்ந்துகொள்ளக்கூடிய உணர்வு சார்ந்த நிகழ்வுகள்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பி இருக்கிறது. “வாழ்வுரிமையில் மாதவிடாய் சுகாதார உரிமையும் அடங்கும்.அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும்”என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதவிடாயை,’தீட்டு’ என்று ஒதுக்கிவைக்கும் தீண்டாமை தொடர்கிறது. மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணின் தேவை என்ன, மன உணர்வுகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ளாத ஆண்கள்தான் இங்கே நிறைந்திருக்கிறார்கள்.வலி சுமந்து, கூனிக்குறுகித்தான் மாதவிடாய் காலத்தை பெண்கள் கழிக்கவேண்டியிருக்கிறது.பள்ளி தொடங்கி அலுவலகம் வரை பேரவஸ்தையை எதிர்கொள்கிறார்கள் பெண்கள். வடஇந்தியாவில் லட்சக்கணக்கான மாணவிகள்,இதன் காரணமாகவே படிப்பிலிருந்து இடை நிற்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு ஜெயா தாக்கூர் என்பவர் தொடர்ந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் ஆறுதல் அளிக்கும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மாதவிடாய் அவஸ்தையை அனுபவிக்காத யாரும் உணர முடியாது.பெண்கள் வெளி ஊர் பயணங்களில் பீரியட்ஸ் வரும்போது செய்வதறியாது தவிக்கிறார்கள். பள்ளிக் கழிவறைகள் மட்டுமல்ல,நம்மூரில் இருக்கிற எந்தப் பொதுக் கழிவறையையும் பீரியட்ஸ் நேரத்தில் பயன்படுத்தவே முடியாது.அவ்வளவு மோசம். பள்ளிகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி… கழிவறைகளை சிறுநீர்,மலம் கழிப்பதற்கான இடமாக மட்டுமே வடிவமைக்கிறார்கள்.மாதவிடாய் நேரத்தில் ஒரு பெண்ணுக்கான அடிப்படையான தேவைகள் எந்த கழிவறையிலும் இருப்பதில்லை. பெரும்பாலான கழிவறைகளில் மாற்றிய பேடை அகற்றுவதற்கான ஏற்பாடுகள்கூட இல்லை என்று பெண்கள் பலரும் வேதனைப்படுவதை பார்க்க முடிகிறது.
இந்த அல்ல நிலை மாற வேண்டும்.
அனைத்துப் பெண்களுக்கும் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழும் உரிமை உண்டு.மாதவிடாய் என்பது நோயோ, அருவருப்பான விஷயமோ அல்ல. மெனோபாஸ் என்பது பெண் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை.தன் உடல் தன் உரிமை என்பதைப்போல தன் ஆரோக்கியம்,தன் உரிமை,தன் கடமை என்ற தெளிவும் பெண்களுக்கு வேண்டும்.
ஒரு பெண் பருவமடைந்த நாள் தொடங்கி,மெனோபாஸ் நிலையை அடையும்வரை அவள் சந்திக்கிற உடல்,மனரீதியான அனைத்துப் பிரச்னைகளையும் முதலில் அவள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்தபடியாக அவளைச் சார்ந்த குடும்பமும்
சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் சின்ன பிரச்னைகளைப் பெரிதுபடுத்துவது. பெரிய பிரச்னைகளை ஒன்றுமில்லை என அலட்சியம் செய்வது என இரண்டு மனோபாவமும் தவறு.இப்படி பெண் உடலில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்தையும்
மருத்துவ அறிவியல் கண்ணோட்டத்தோடு புரிந்துகொண்டு உதவ முன் வர வேண்டும்.
பள்ளி,கல்லூரி மட்டுமல்ல பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள், வணிகமையங்கள் எல்லாவற்றிலும் கழிவறையை பெண்கள் பயன்படுத்தும் சுகாதார அறையாக மாற்ற வேண்டும்.பெண்கள் நலமுடன் இருந்தால் தான் நமது சமூகம் சிறப்பாக இருக்கும்.

