
Dr.S.வெங்கடாசலம்
——————————–
நோய் எதிர்ப்பு சக்தி’ பற்றி அதிகம் பேசப்படும் காலம் இது. இந்திய மருத்துவங்களில், நோய் எதிர்ப்பாற்றலை அள்ளி வழங்கும் முதன்மையான மூலிகை ‘அஸ்வகந்தா’ என்ற ‘அமுக்கரா கிழங்கு’. நமது நாட்டின் பாரம்பரியத் தொன்மை சார்ந்த மருத்துவ முறை, அமுக்கரா கிழங்கை ‘மாயாஜால மூலிகை’ என்று பெருமைப்படுத்துகிறது.
‘அஸ்வம்’ என்றால் ‘குதிரை’, ‘கந்தா’ என்றால் ‘வாசனை’ என்று பொருள். இதன் வேர்களில் இருந்து குதிரையின் மணம் வெளிப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை உண்பதால், குதிரையின் வலிமையும், வீரியமும் கிடைக்கிறது என்பதால், இப்பெயர் ஏற்பட்டதாக இன்னொரு கருத்தும் உண்டு.

அஸ்வகந்தாவில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள புரதங்களும், அமினோ அமிலங்களும், உச்சி முதல் பாதம் வரை நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஒட்டுமொத்த உடலும் புதுப்பிக்கப்பட்டு, புத்துணர்வைப் பெறுகிறது. நரம்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆயினும், நமது பண்டைய கால முன்னோர்கள், இதனை நினைவாற்றலை சரி செய்வதற்கான மருந்துப் பொருளாக அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
மூளை, நரம்பியல் மண்டலம், மனம் போன்றவற்றில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு ’அஸ்வகந்தா’ சிறந்த தீர்வாகப் பயன்படுகிறது என்பது பல்வேறு நவீன ஆய்வுகளின் முடிவாகும். இதில் உள்ள வித்தனாய்டு, வித்தனோன், வித்தாஃபெரின், சொம்னிட்டால், சைட்டோ-இண்டோசைட்ஸ் போன்ற பல நலம்பயக்கும் வேதிப்பொருள்கள் காரணமாக, மனஅழுத்தம், மனசோர்வு, பதற்றம், கவலை, மறதி, தூக்கமின்மை போன்றவற்றுக்குப் சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. மனம், அமைதியும் நிம்மதியும் பெறுகிறது.
மனஅழுத்தத்தின் எதிர்வினையாக ஏற்படும் அட்ரீனல் சுரப்பு காரணமாக உருவாக்கப்படும் ‘கார்டிசோல்’ என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோனை அஸ்வகந்தா குறைக்கிறது; கட்டுப்படுத்துகிறது. நாள்பட்ட மனஅழுத்த நோயாளிகளுக்கு அஸ்வகந்தா அளிக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவில் மனஅழுத்த ஹார்மோனைக் கட்டுப்படுத்தி பயன் கிடைத்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. தூக்கத்துக்காக அலோபதி மருந்துகளைத் தேடிச் செல்வதற்கு முன், இயற்கையான தூக்கம் உண்டாக்கும் திறன் கொண்ட அஸ்வகந்தாவை முயற்சிப்பதே நல்லது.
அமுக்கராவுக்கு ‘இந்திய வயாக்ரா’ என்ற பெயர் உண்டு. ஆண்களுக்கான அற்புத மூலிகை வயாக்ரா; பாலுணர்வுத் தூண்டி. தினம் உண்டு வந்தால், நரம்பு மண்டலமும், இனப்பெருக்க மண்டலமும் பலமடையும். ஆண்மைக்கு மட்டுமல்ல, பெண்மைக்கும் செழுமை சேர்க்கிறது அமுக்கரா எனும் மாயாஜால மூலிகை. இது பிறப்புறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுறவில் வீரியமாகவும், முழுமையாகவும் செயல்பட உதவுகிறது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத்தன்மையை நீக்குகிறது. ‘டெஸ்டோஸ்டீரான்’ எனும் ஆண்மை ஹார்மோன் அதிகரித்து, விந்தணுக்களின் எண்ணிக்கையும், அவற்றின் நகரும் திறனும் (Sperm count and Motility) மேம்படுகிறது. இதனால், கருவுறச் செய்யும் ஆற்றல் அதிகரிக்கிறது.
அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்து பருகிவருவதன் மூலம் அல்லது அமுக்கரா மாத்திரைகளை எடுத்துக்கொண்டு பால் பருகி வருவதன் மூலம்.. மனஅழுத்தம் விடைபெறுகிறது; மனஇறுக்கம் தளர்கிறது; இனிய தூக்கம் தவழ்கிறது. படுக்கையறை பலவீனங்கள் மறைந்து, பாலியல் ஆரோக்கியமும், பொது ஆரோக்கியமும் வளம் பெறுகின்றன. மனஅழுத்தம் மட்டுமின்றி, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு (நீரிழிவு) ஆகியவற்றையும் குறைப்பதற்கு, கட்டுப்படுத்துவதற்கு அமுக்கரா பெருந்துணை புரிகிறது. இவையெல்லாம் பாலியல் திறனை முடக்கிப்போடும் முக்கியக் காரணகர்த்தாக்கள். இவற்றை சீர்படுத்துவதன் மூலம், ஆண்களின் பாலியல் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்கிறது. அதனால்தான், பக்கவிளைவுகள் இன்றி, இல்லற வாழ்க்கையில் இணையில்லா இன்பம் துய்ப்பதற்கு, இந்திய மருத்துவ மரபில், அமுக்கரா முதன்மை மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெண்களைப் பொறுத்தவரையில், பாலியல் திறன் மேம்படும். மாதவிலக்குப் பிரச்னைகள் சீராகும். வெள்ளைப்பாடு தொல்லைகள் முடிவுக்கு வரும். கருத்தரிக்கும் தன்மை மேம்படும். கர்ப்பக் காலத்தில் மட்டும் அமுக்கராவைத் தவிர்க்க வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். பிரசல கால உடல் அசதிகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மாதவிலக்கு நிற்கும் காலத்தில், பெண்களுக்கு உடல் அளவிலும், மன அளவிலும் ஏற்படும் பலவித சிரமங்களை அமுக்கரா போக்கிவிடும்.
நவீன அறிவியல், பல கோணங்களில் அமுக்கராவின் ஆற்றல்களை அறிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, பல்வேறு உண்மைகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட சித்த மருத்துவ ஆய்வில், அமுக்கரா சூரணம் பலன் அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை அமுக்கரா அளிக்கிறது. புற்றுநோய் வரவிடாமல் தடுப்பதில், புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் அமுக்கரா தன்னிகரற்று விளங்குகிறது. நாள்பட்ட சர்க்கரை நோயில் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சோர்ந்து தளர்ந்த உள்ளுறுப்புகளுக்குப் புத்துயிரூட்டி, செயல்படத் தூண்டுகிறது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு, சந்தைகளில் விற்பனை செய்யப்படும் விதவிதமான ஊட்டச்சத்துப் பொருள்களுக்கு மாற்றாக, அமுக்கரா பொடியுடன் பாதாம் பருப்பு, பனங்கற்கண்டு சேர்த்து வழங்கினால், அற்புதமான ஊட்டச்சத்து கிடைக்கும். அனைத்து உடல் நலிவுகளும் நீங்கும்.
நீரிழிவுக்கு மட்டுமின்றி, தைராய்டு சுரப்புக் குறைபாடு (Hypothyroidism) இருதய நோய்கள், தோல் வறட்சி, மூட்டு நோய்கள், சளி, இருமல், காச நோய் உள்ளிட்ட சுவாச மண்டல நோய்கள், ரத்தசோகை, வாயுக் கோளாறுகள், முடி உதிர்தல், முடி வளராமை, இளநரை, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, சிறுநீரகக் குறைபாடு, செரிமானக் குறைவு, பசியின்மை, கைகால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, வாத நோய்கள், பார்கின்ஸன்ஸ், அல்ஸைமர் போன்ற முதுமைக் கால நோய்கள், கீமோதெரபியின் பக்கவிளைவுகள், நுரையீரல் புற்று, மார்பகப் புற்று, தோல் புற்று, வயிற்றுப் புற்று போன்றவற்றில் அஸ்வகந்தா எனும் அமுக்கராவின் குணப்படுத்தும் திறன் மெச்சத்தகுந்தது.
அமுக்கரா சத்துகள், இருதயத்துக்கு வலு சேர்க்கின்றன. கண்பார்வை மேம்பட உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ஆண்டிஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் இருப்பதால், உடலுக்குத் தீங்கு இழைக்கும் ஃப்ரீராடிகல்களை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துகிறது.
வீக்கங்கள், மூட்டு அழற்சிகள், தேவையற்ற கட்டி வளர்ச்சிகளுக்கு எதிராகப் போராடும் திறனும், இதர பல்வேறு நோய் எதிர்ப்புப் பயன்பாடுகளுக்கும், அமுக்கராவில் உள்ள அடர்ந்த வித்தனோலைட்ஸ் எனும் நன்மை செய்யும் வேதிப்பொருள்களே பிரதான காரணம் என்று நவீன மருத்துவ அறிவியல் சுட்டிக்காட்டுகிறது.
சினைப்பை கட்டிகள் உள்ள சுண்டெலிகளுக்கு, வித்தாஃபெரின் மருந்தாக வழங்கப்பட்டபோது, 70 முதல் 80 சதவீதம் வரை கட்டி வளர்ச்சி குறைந்ததை ஒரு ஆய்வு தெரியப்படுத்துகிறது. புற்றுக் கட்டிகள் பிற உறுப்புகளுக்கு ஊடுருவிப் புரவுதலை அமுக்கரா தடுக்கிறது என்பதையும் சமீபகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிக சக்தி வாய்ந்த பாலுணர்வூட்டியாக அறியப்பட்ட அஸ்கந்தா எனும் அமுக்கரா மூலிகையின் பன்முகப் பயன்பாடுகளும், நோய் எதிர்ப்புத் திறனும் வியக்கத்தக்கவை. மேலும், இதில் உள்ள ஆன்டிவைரல் தன்மை காரணமாக, கொரோனா தடுப்பு மருத்துவத்திலும், சிகிச்சை மருத்துவத்திலும் பயன்படுத்தலாம் என்று டெல்லி ஐஐடி ஆராய்ச்சியாளர்களும், ஜப்பான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு இண்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

