
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர் நல நிபுணர்
முதுமைக்காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக மிக அவசியம். வேகமான வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. ஆனால் பணம் இருப்பவர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது. அன்பான உறவினர்களும் அக்கறையான நண்பர்களும் இல்லாதவர்கள் தனிமையில் தவிப்பார்கள் எனச் சொல்லப்படுவதுண்டு. இந்த இரண்டும் முக்கியம்தான்.ஆனால் முதுமையில் உறவினர்கள், நண்பர்களை விடவும் பணம் மிகவும் அவசியம். மற்ற எல்லாவற்றையும் விட அதை நம்பலாம். ஏனென்றால் பணம் பாதாளம் வரை பாயும்.
முதுமையில் மனிதர்கள் பக்கபலமாக இருப்பதை விட, நாம் முதுமையை எதிர்நோக்கி இளமையில் சேமித்து வைக்கும் சேமிப்பே நமக்கு பக்கபலமாகும்.
நாம் சேமிக்கும் ஒரு பங்குத் தொகை, சம்பாதிக்கும் இருமடங்குத் தொகைக்குச் சமமாகும். சேமித்த பணம் கையில் இருந்தால், முதுமையில் நமக்கு உதவிட பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் அல்லது அந்தப் பணத்தை முதியோர் இல்லத்திற்குக் கொடுத்து, ஓரளவுக்கு நிம்மதியாக வாழலாம்.
பணம் கையில் இருந்தால் உற்றார், உறவினர்கள் ஓரளவிற்கு முகம் சுளிக்காமல் நமக்கு உதவ முன் வருவார்கள்.
உடற்பயிற்சியே உயர்ந்த டானிக்
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. முதியவர்கள் தங்கள் உடல்நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றை மனதிற்கொண்டு உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தூரம் நடப்பது நல்லது அல்லது முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஒரே நேரத்தில் சுமார் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் இடைவெளிவிட்டு பத்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து நாளொன்றுக்கு இதுபோல் மூன்று முறை செய்தாலே தொடர்ந்து முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும். நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கைத்தடி, வாக்கர் போன்றவைகளைப் பயன்படுத்தி நடைப்பயிற்சி செய்யலாம். உணவு உட்கொள்ளுவதற்கு முன்பே உடற்பயிற்சி செய்யவேண்டும். காலையில் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

