-டாக்டர் விக்ரம் குமார், சித்த மருத்துவர்

‘ஆண்களுக்கு முருங்கை… பெண்களுக்குக் கல்யாண முருங்கை’ எனும் கிராமத்து வழக்குமொழி பிரபலமானது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ‘மகளிர் நல மருத்துவர்’ கல்யாண முருங்கை! முருங்கை மரங்கள் ஆங்காங்கே காணப்படுவதைப் போல, முன்பெல்லாம் பலரது வீடுகளின் முகப்பில், நோய் போக்கும் கல்யாண முருங்கை மரங்கள் உடலுக்கு ஆதரவாக நின்றுகொண்டிருந்தன!

உணவாக: மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமத்தை குறைக்க, கல்யாண முருங்கை இலை மற்றும் சின்ன வெங்காயத்தை, அரிசி மாவோடு பிசைந்து, ‘கல்யாண முருங்கை அடை’ செய்து ருசிக்கலாம். இது வளரிளம் பெண்களுக்கான சிறந்த உணவும் கூட, இதன் இலைகளுடன் பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய் எண்ணெய்யின் உதவியுடன் பருப்புக் கீரையாகச் சமைத்துச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும். சிறுநீர் எரிச்சல் உண்டாகும்போது, இதன் இலைகளைப் பயன்படுத்தி சூப் தயாரித்துக் குடித்துவர, சிரமமின்றிச் சிறுநீர் வெளியேறும்,

இதன் மரத்தில் அரும்பும் மலர்களைக் குடிநீரிலிட்டு வழங்க, வயிற்றுப் புண்கள் எட்டிப் பார்க்காது. கீரைக் கடையலிலும் இதன் மலர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இலைச் சாற்றுடன் வெங்காயச் சாறு கலந்து, அரிசிக் கஞ்சியுடன் உறவாட வைத்துப் பருகப்படும் பானம், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். இருமல் மற்றும் மூச்சிரைப்பைக் குறைக்கவும் இந்தப் பானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மருந்தாக: ‘எரிகிரிஸ்டாகேலின்’ எனும் வேதிப்பொருள் இருப்பதன் காரணமாக, கல்யாண முருங்கைக்கு பாக்டீரியாக்களைத் தடுத்தாட்கொள்ளும் சக்தி இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. தசைகளை இளக்கச் செய்யும் சக்தி இதன் மரப்பட்டைச் சாரங்களுக்கு இருப்பதால் தசைப் பிடிப்புகளுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும். எலும்புகளுக்கு வன்மை அளித்து, ‘எலும்பு அடர்த்திக் குறைவு’ நோயின் வருகையைத் தள்ளிப்போட இது உதவும். உடலுக்குத் தேவையான சுண்ணச் சத்தை உட்கிரகிக்கவும் பயன்படுகிறது. ‘கருப்பையில் உண்டாகும் ரத்தக் கட்டிகளைப் போக்கும்’ எனும் அகத்தியர் குணவாகடக் குறிப்பு, கருப்பைக் கட்டிகள் சார்ந்து இதன் பங்குகுறித்து வெளிப்படுத்துகிறது.

வீட்டு மருந்தாக: மாதவிடாயின் போது உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்கும் சக்தி படைத்த இதன் இலைச் சாற்றை, மருந்தாகப் பயன்படுத்தலாம். விதைப் பொடியோடு பனைவெல்லம் சேர்த்து இரவில் சாப்பிட்ட பிறகு, அதிகாலையில் சிறிது விளக்கெண்ணெய் பருக, நீண்ட நாட்களாகப் பல உடல் உபாதைகளுக்கு அடிப்படைக் காரணமாகவிருந்த குடற்பூச்சிகள் வெளியேறும். இதன் வேர்ப் பட்டையை கஷாயமிட்டு குடிக்க, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனும் குறிப்பை வழங்குகிறது சித்த மருத்துவம்.

மணத்தக்காளி கீரையுடன் இதன் இலைகள் மற்றும் பருப்பு சேர்த்து கீரையாகக் கடைந்து சாப்பிட, வாய்ப்புண்ணிற்கும் வயிற்றுப்புண்ணிற்கும் நல்லது.

கல்யாண முருங்கை… உடலை முறுக்கேற்றச் செய்யும் கம்பீர முருங்கை!