டாக்டர் எஸ் அமுத குமார், MBBS,MCIP,PG.DIP.Diabetolgy,F.C.G.P

நாற்பது வயதைத் தாண்டிய எனது நண்பருக்கு அமெரிக்கா செல்வதற்கான அழைப்பு வந்தது.’அமெரிக்காவுக்கு போகப்போகிறேன் டாக்டர், திரும்பிவர ஒரு மாதத்துக்கு மேலாகும். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு என் உடல் ஒத்துப்போகணும். சாப்பாடு ஒத்துப்போகணும். எதுக்கும் என் உடம்பை தயார்ப்படுத்திக்கிட்டு போவதுதான் நல்லது. உடம்பை பரிசோதித்து ஏதாவது நோய் இருந்தால் இப்பவே மருந்து கொடுத்திடுங்க.நோய் எதுவுமே இல்லாமல் இருந்தால் ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி, வயிற்று வலிக்கெல்லாம் மருந்து எழுதிக் கொடுத்திடுங்க! முன்னெச்சரிக்கையாக இங்கே இருந்தே வாங்கிட் டுப் போயிடுறேன்..’ என்றார்.

நானும் சரி என்று சொல்லிவிட்டு, அவருக்கு முழு உடல் பரி சோதனையை (Master Health Checkup) பண்ணினேன்.ஒன்றும் இருக்காது என்று நினைத்த எனக்கும் சரி, அவருக்கும் சரி, அவ ருடைய டெஸ்ட் ரிஸல்ட் அதிர்ச்சியைக் கொடுத்தது.வயிற்றின் வலது மேல்புறத்தில், கல்லீரலுக்குக் கீழே இருக்கும் பித்தப்பையில் (Gall Bladder) கடுகளவு கற்கள் (Gall Stones) ஏகப்பட்டது இருந்ததை அவருடைய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் காண்பித்தது. சிறிதாகவும்,பெரிதாகவும் இருந்த அந்தக்கற்களில் ஒரு சில, பித்தப்பையின் வாயை அடைத்துக்கொண்டு நின்றது.

அவரது உடல் நிலை கருதி முதல் வேலையாக அமெரிக்க பயணத்தை ரத்து செய்யச் சொன்னேன். அவர் எதுவும் புரியாமல், ‘நான் நன்றாகத்தானே இருக்கிறேன்.எனக்கு இவ்வளவு பெரிய நெருக்கடியை தரும் பித்தப்பை கற்கள் எப்படி உருவாகியிருக்கும்?’ என்று கேட்டார்.

அவர் சுத்த சைவ உணவு சாப்பிடுகிறவர். வெத்திலை,பாக்கு, பீடி, சிகரெட், மது,பான்பராக் போன்ற எந்தப் பழக்கமும் இல்லாதவர்.அவரை தேற்றி, மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷன் மூலம் கற்களோடு சேர்த்து பித்தப்பையையும் எடுக்கவேண் டியதாயிற்று.

எதற்கு இதைச் சொல்கிறேனென்றால், நாம் எதற்கோ டெஸ்ட்
பண்ணப்போய், எதையோ கண்டுபிடிக்கவேண்டிய சூழ்நிலை எப்போதாவது ஏற்பட்டுவிடும்.

‘காலில் ஏற்பட்ட ஒரு சின்ன காயம் இரண்டு வாரமாக ஆற மாட்டேங்குது டாக்டர்’ என்று வந்தவரிடம், ‘உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் எங்க வீட் டிலேயே யாருக்குமே கிடையாது டாக்டர்’ என்றார்.

சந்தேகப்பட்டு ரத்த டெஸ்ட் பண்ணிப் பார்த்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 380 மில்லி கிராம் (வெறும் வயிற்றில்) இருந்தது.

‘என்னங்க சர்க்கரை அளவு ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கே ! உங்களுக்கு மயக்கம் வருதா! அடிக்கடி சிறுநீர் போறீங்களா!பசி அதிகமா எடுக்குதா!நாக்கு, தொண்டை வறண்டு போகுதா!தண்ணி தாகம் அதிகமா இருக்கா?’ என்று கேட்டால், ‘நீங்க சொன்னதெல்லாம் ஏற்கனவே இருந்துக்கிட்டுதானே இருக்குது டாக்டர்” என்பார்.

ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு இவ்வளவு ஏறிப்போயிருந்தும், அவ ருக்குத் தெரியவில்லை. அறிகுறிகளை வைத்தும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்கோ வந்து, எதையோ டெஸ்ட் பண்ணும் போது சர்க்கரை வியாதி இருப் பது தெரியவருகிறது.

இன்றைய அவசர உலகில், இன்றைய ரசா யன உலகில்,நமது உடலைப் பாதிக்கக்கூடிய பல விஷயங்கள் நமது
உணவிலும், நம்மைச் சுற்றியுள்ள சூழலிலும் இருக்கின்றன.எந்தக் காரணமும் இல்லாமலே நோய் உண்டாகிறது. ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விடப்படும் நோய்கள் பிற்காலத்தில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகின்றன.

உடலில் எந்தக் கோளாறும் இல்லை. அப்படியிருக்கும்போது வருடா வருடம் முழுஉடல் பரிசோதனை அவசியம் இல்லையே?” என்ற பலரது கேள்வி சரிதான் என்பதுபோல் தோன்றினாலும், எந்த நோய் வரும்? எப்படி மறைந்திருந்து தாக்கும் என்பதெல்லாம் நமக்கு தெரிவதில்லையே!

40 வயது ஆகிவிட்டாலே, வருடா வருடம் ‘முழு உடல் பரிசோதனை’ (Master Health Check up) அவசியம். அதுதான் சரியான முறை. ஏதாவது நோய் உள்ளுக்குள்ளே ஏற்பட்டு, அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க அது உதவும்.

நோய் வருவதற்கு முன்பே, எந்த நோய் வரப்போகிறது என்பதை காட்டிக் கொடுக்கும் நோய்கள் சில உண்டு. எந்த அறிகுறியையும் காட்டாமல் உடலுக்குள்ளே உருவாகி அலைக்கழிக்கும் நோயும் உண்டு.இப்படி இருவேறு நிலைகள் இருப்பதால், நமது உடலுக்குள் என்ன நோய் இருக்கிறது? எந்த இடத்தில் இருக்கிறது? அந்த நோயின் வீரியம் எவ்வளவு? என்பதையெல்லாம் முதலிலே கண்டுபிடிக்க முழுஉடல் பரிசோதனை உதவும்.

‘நேற்றுவரை நன்றாகத்தானே நடமாடிக்கொண்டிருந்தார். திடீ ரென்று அவருக்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று சொல்லும் சூழ்நிலையை முழு உடல் பரிசோதனையால் தவிர்க்க முடியும்.

குழந்தைப் பருவத்திலிருந்து 50 வயதைத் தொடும் வரை, ரத்தம் டெஸ்ட் பண்ணும் லேப்(Lab)பக்கமே போகாதவர்கள் சிலர் இருக்கிறார்கள்.ஒரே ஒரு வேளை சரியாக பசி எடுக்கவில்லை என்றால்கூட உடனே போய் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து திருப்தியடைகிறவர்களும் சிலர் இருக்கிறார்கள்.

எழுபது வயது வரை உடம்பில் கத்தி படாமல், ஆபரேஷன் இல்லாமல், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்பவர்களும் இருக்கி றார்கள்.தினந்தோறும் இங்கே வலிக்குது, அங்கே வலிக்குது என்று மருந்து மாத்திரைகளுடனும், தீராத நோயுடனும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி எல்லா மாதிரியான மக்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 40 வயதிற்கு பிந்தைய முழு உடல் பரிசோதனை உதவும்.

நோய்களை கண்டுபிடிப்பது மட்டும் அதன் நோக்கம் அல்ல! நோயின்றி வாழ வைக்கவும் அது உதவும். எப்படி என்றால்,உடல் நிலையை உணர்ந்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம். உணவில் உப்பு, எண்ணெய், கொழுப்பு, அசைவம் போன்றவற்றை குறைத்துக்கொள்ளலாம்.

தைராய்டு போன்ற சில நோய்களை முன் கூட்டியே கண்டுபிடித்துவிடலாம். தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சில மாத்திரைகளை குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம்.எனவே முழு உடல் பரிசோதனை அவசியமா என்று யோசிக்காமல் அவசியம் என்று உணர்ந்து செயல்படுங்கள்.ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழுங்கள்!.