-பவித்ரன்

‘அண்ணாச்சி ஒரு டொமெட்டோ சூப்!’ இப்படிக் கேட்கும் குரலை அநேகமாக தமிழ்நாட்டின் அத்தனை சிறுநகரங்களிலும் நாம் கேட்க முடியும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலோ கொடிகட்டிப் பறக்கிறது இந்தத் தெருவோர வியாபாரம். இரண்டு தெருக்களுக்கு ஒரு சூப் கடை நிச்சயம் இருக்கும். ஒரு மர ஸ்டேண்ட்; கேஸ் ஸ்டவ்; மேலே மூடிவைக்கப்பட்ட மூன்று சில்வர் பானைகள்; கரண்டிகள், 10, 15 கிண்ணங்கள் அல்லது கப்கள், எடுத்துக் குடிக்கப் பொருத்தமான பெரிய சைஸ் ஸ்பூன்கள், மேலும் சில பாத்திரங்கள்…

இவை போதும் ஒரு சிறு கடையை ஆரம்பிக்க! டீ, காபி, குளிர்பானங்களைவிட சூப் சிறந்தது; உடலுக்குச் சிக்கல் ஏற்படுத்தாதது; ஆரோக்கியத்துக்கு உதவுவது என்கிற எண்ணம் மக்களுக்குப் பரவலாக இருக்கிறது. உண்மை நிலவரம் என்ன?

அது தெருவோரக் கடையோ, நட்சத்திர உணவு விடுதியோ எங்கு கிடைத்தாலும், சூப் ஆரோக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள், அவற்றின் தரம் இவை மட்டும்தான் பிரச்னை. இன்றைய தலைமுறையின் கூகுள் தேடல் விரிவாக்கம் செய்த தொழில்களில் நிச்சயம் சூப் கடைகளுக்கும் முக்கிய இடம் உண்டு. ஆட்டுக்கால் சூப் தொடங்கி, மூலிகைகள், காய்கறிகள், மஷ்ரூம், கீரை, தக்காளி… என மலைக்கவைக்கும் வகைகள்.

தெருவோரக் கடைகள் மட்டுமில்லாமல், இதற்கான பிரத்யேகக் கடைகளும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கின்றன. மாலை 4 மணிக்குத் தொடங்கும் வியாபாரம் அதிகபட்சம் இரவு 9 மணி வரைக்கும் நடக்கும். குறைந்த முதலீடு, நிறைவான லாபம் என்கிற அடிப்படையிலும் இந்தக் கடைகள் பெருகிக்கொண்டே போகின்றன. உலகம் முழுக்க விதவிதமான ஃப்ளேவர்களில் பட்டையைக் கிளப்பி, தன் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது இந்த அட்டகாச திராவகம்!

வெதுவெதுப்பாக அல்லது இளஞ்சூட்டில் பரிமாறப்படுகிறது இந்த திரவ வகை உணவு. இறைச்சி, காய்கறிகள்… என சைவம், அசைவம் இரண்டு வகையிலும் தயாரிக்கலாம். தெருவோரக் கடைகளோ, நட்சத்திர விடுதியோ சூப்பை அருந்துவது ஆரோக்கியம்தானா?

கீரை, தக்காளி, மஷ்ரூம், வெஜிடபுள், சிக்கன், ஆட்டுக்கால்… என நீள்கிறது சூப்களின் வகைகள். உதாரணமாக, வெஜிடபுள் சூப்பில் நம் உடலுக்குத் தேவையான சில தாதுக்களும் வைட்டமின்களும் கிடைக்கும். அதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீனும் நிறைந்திருக்கும்.

இது ஒரு லோ கிளைசமிக் தன்மைகொண்ட திரவ உணவு. ஒரு கப் குடித்தால், பசியைத் தூண்டும். ஆரோக்கியத்துக்கு நல்லது. எளிய செய்முறை. உடல் எடை குறைய உதவும். அதுமட்டுமல்ல… புற்றுநோய் வராமல் காக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; உடல்பருமன் வராமல் பார்த்துக்கொள்ளும்; இதய நோயில் இருந்து காக்கும். டைப் 2 சர்க்கரை நோயாளிகள்கூட குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

சிக்கன், ஆட்டுக்கால் போன்றவற்றில் செய்த சூப்களை கடைகளில் வாங்கிச் சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், அவை ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்டவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை மிகப் பழைய இறைச்சி, எலும்பில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நம் உடலுக்குக் கெடுதி விளைவிக்கலாம். இன்றைக்கு பல சூப்களை ரெடிமேடு மிக்ஸாகத் தயாரிக்கிறார்கள். ரோட்டோரக் கடைகளில் கிடைப்பவற்றில் பெரும்பாலானவை இந்த ரகங்களே, நம் கண் முன்னால் சில காய்கறி ரகங்களைச் சேர்த்துத் தயாரிப்பார்கள் அவ்வளவுதான்.

எனவே, இவை நமக்கு சக்தியைத் தருவதற்கு பதிலாக எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்திவிடலாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது சூப் நமக்குப் பலவழிகளில் நலம் தருவது. கிராமங்களில் உடல் பலவீனமானவர்களுக்கு, எலும்பில் அடிபட்டவர்களுக்கு நாட்டுக் கோழியில் ரசம் வைத்துக்கொடுப்பார்கள். ஆட்டுக் கால் சூப்பைச் சாப்பிட்டால் எலும்புகள் பலம் பெறும்; மூட்டுவலி தீரும். எனவே, சூப் நமக்கு பல நன்மைகளைத் தருவது. ஆரோக்கியமான முறையில் தயாரித்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

கற்றுக்கொள்வதும் தயாரிப்பதும் எளிது. எனவே, நம்மால் வீட்டிலேயேகூட சூப்பைச் செய்ய முடியும். ஆரோக்கியதுக்கு உத்தரவாதம் தரும் சூப்பைக் கொண்டாடுவோம்!