
டாக்டர் முத்துச் செல்வக்குமார், MD,M.R.S.H.
வயிற்றுப்பகுதியில் நீர் சேர்ந்து விடுவதைத்தான் மகோதரம் என்று கூறுகின்றார்கள். இதனை, வயிற்றுப்பகுதியில் ஏற்படும் நீர்க்கோவை என்றும் கூறலாம்.
எதனால் ஏற்படுகிறது?
* புற்றுநோயின் பாதிப்புகளினால் ஏற்படுவது. (வயிற்றுப்பகுதி உறுப்புகளில் ஏற்படுவது)
* இதய நோய்களின் காரணமாக ஏற்படுவது.
* கல்லீரல் நோய்களின் காரணமாக ஏற்படுவது.
மேலும்
இரத்தத்தில் புரதச்சத்தின் அளவு வெகுவாகக் குறைந்திருந்தாலும் .
* கல்லீரல் சிரைக் குழாய்களின் அடைப்பினாலும்…
* வயிற்றுப்பகுதிகளில் தோன்றும் பல்வேறு அழற்சிகளின் காரணமாகவும், (குறிப்பாக காசநோயின் தாக்குதலினாலும்)
* கணைய அழற்சியினாலும்,
* நிணநீர்க்குழாய்களின் அடைப்பினாலும்,
* சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு செயற்கை முறையில் இரத்தக்கழிவுகளை டயாலிசிஸ் முறையில் வெளியேற்றுகின்ற போதும்.
* கருவணுவகத்தின் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுப்பகுதியில் நீர்க்கோவை ஏற்படலாம்.
என்றாலும், நமது நாட்டைப் பொறுத்த அளவில் பெரும்பாலானோர்க்கு கல்லீரல் பாதிப்பினால் நீர்க்கோவை வயிற்றுப்பகுதியில் ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்
வயிற்றுப்பகுதியில் நீர் அதிகமாகச் சேருவதால் வயிற்றுப் பகுதி பெரிதாகிவிடும். பார்ப்பதற்கு ‘பானை வயிறு’ போல முன்பக்கமாக துருத்திக்கொண்டு இருக்கும்.தொந்தி வந்தவர்களுக்கு இருப்பதைப் போல, வயிறு பெரிதாக இருப்பதுடன், அதன் பக்கவாட்டிலும் குழிவாக இல்லாமல், பெருத்துக்காணப்படும்.
விரலால் மருத்துவர் தட்டிப்பார்த்தால், சாதாரணமாக கேட்கும் ஒலி கேட்காது.இவ்வாறு ஒலி கேட்காத இடத்தைக் குறித்துக் கொண்டு, நோயாளியைப் பக்கவாட்டில் படுக்கவைத்து மீண்டும் தட்டிப்பார்த்தால், நீர் கீழ்ப்பகுதிக்கு சென்று விடுவதால் அங்கு சாதாரணமாக கேட்கக்கூடிய ஒலி கேட்கும்.
வயிற்றுப்பகுதி பெருத்துவிடுவதால், தொப்புள் துருத்திக் கொண்டு காணப்படும். அதிகமாகச் சேர்ந்த நீர், குடல்பகுதிகளை அழுத்துவதால், குடலிறக்கம் இவர்களுக்குத் தோன்றலாம்.
சிலருக்கு பல லிட்டர் நீர் கூட சோர்ந்துவிடும். ஏற்கனவே தொந்தி உள்ளவர்களுக்கு, வயிற்றுப்பகுதியில் நீர் சேர்ந்ததைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கும். வயிற்றுப்பகுதியில்
நீர் தோன்றியிருப்பது போலவே, சிலருக்கு, நெஞ்சுப் பகுதியிலும், (நுரையீரல் உறை பகுதிக்குள் நீர் சேர்ந்துவிடும்) இதனால், மூச்சுவிடக் சிரமப்படுவார்கள்.இது பெரும்பாலும், வலதுபக்கத்தில் தான் ஏற்படும்.
பரிசோதனைகள்
ஸ்கேன் பரிசோதனை அவர்களுக்கு செய்யப்படும் மிகவும் முக்கியமான பரிசோதனையாகும். இப்பரிசோதனை மூலமாக வயிற்றுப்பகுதியில் தங்கியுள்ள நீரைக் கண்டறிய முடியும்.அதே நேரம், கல்லீரலில் தோன்றியுள்ள மாற்றங்களையும் அறியலாம்.
எக்ஸ்ரே பரிசோதனை மகோதரத்தைக் கண்டறிவதற்காக பயன்படுவதில்லை.
வயிற்றுப்பகுதியில் தேங்கியுள்ள நீரை ஊசியின் மூலமாக வெளியேற்றி, அதிலும் பல்வேறு பரிசோதனைகள் செய்யலாம்.இந்த நீரின் நிறத்தையும், அதில் செய்யப்படும் பரிசோதனைகளையும் கொண்டு, மகோதரம் எந்தக் காரணத்தினால் ஏற்பட்டது என்பதைக் கண்டறியலாம்.
சிகிச்சை என்ன?
இவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தால் அதற்கான சிகிச்சையை தாமதிக்காமல் தொடங்க வேண்டும்.அதே வேளை, வயிற்றுப்பகுதியில் தங்கியிருக்கும் நீரையும் வெளியேற்றிட வேண்டும்.இதன் மூலமாக, நோயாளிக்கு உள்ள தொந்தரவுகளைக் குறைக்கவேண்டும்.
உணவிலும், பருகும் நீரிலும் சோடியம் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.மேலும் நீரின் அளவையும் குறைக்கவேண்டும். இவர்களுக்கு, சிறுநீரின் அளவு அதிகரிக்கவும் உறுதுணை செய்யவேண்டும்.
ஒரே நேரத்தில் அதிக அளவு, நீரையும் வெளியேற்றக்கூடாது. தினமும் 900 மி.லி., வயிற்றுப்பகுதி நீர் வெளியேற வழிவகை செய்யலாம்.இதன் மூலம் நோயாளியின் எடை 1 கிலோவிற்கும் மேல் குறையக்கூடாது.
தினமும் இவர்கள் 1/2 லிட்டர் முதல், 1 லிட்டர் வரை நீர் பருகினால் போதுமானது.
சிறுநீரை அதிகரித்து, நீர்த்தன்மையைக் குறைப்பதற்கான மருந்துகளையும் பயன்படுத்தலாம்.இந்த வகையில், ‘ஸ்பைரி னோலாக்டோன்’ என்ற மருந்து பெரிதும் பயன்படுகிறது. தேவையில்லாமல் பொட்டாஷியம் மிகுதியாக வெளியேறுவதை இது தடுத்து நிறுத்தும். இந்த மருந்து ‘ஆல்டோஸ்டிரான்’ ஹார்மோனுக்கும் எதிராகச் செயல்படுவதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
வயிற்றின் சவ்வுப்பகுதிகளில் மிகுந்த நீர் தங்குவதால், நடக்க இயலாமை, மூச்சுவிடுவதில் கஷ்டம், இதயச் செயல்பாட்டில் சிரமம் போன்ற தொந்தரவுகளும் ஏற்படும்.எனவே, இவ்வாறு அவதிப்படுகின்றவர்களுக்கு, தேவைப்படும் அளவு வயிற்றுப் பகுதியிலுள்ள நீரை வெளியேற்றுவது நல்லது.
இவ்வாறு நீரை வெளியேற்றிய பிறகு, தேவைப்பட்டால், ‘பிளாஸ்மா’ அல்லது அதற்கு நிகரான ‘ஹீமாக்சேல்’ போன்ற திரவ மருந்துகளை நோயாளிக்குச் செலுத்தலாம்.
கழுத்துப்பகுதி சிரையில், வயிற்றுப்பகுதியில் தங்கியுள்ள நீர் சேர்ந்து தொடர்ந்து வெளியேறும் வகையில், இதற்கென வடிவமைக்கப்பட்ட குழாயினைப் பொருத்தலாம்.இது ‘லீவின்’ வெளியேற்றும் முறை எனப்படுகிறது.
‘டிப்ஸ்’ எனப்படும் முறையில் கழுத்துப்பகுதி சிரை வழியாக குழாயைச் செலுத்தி,போர்ட்டால் இரத்தக்குழாயுடன், உடல்பகுதி இரத்தக்குழாயுடன் இணைக்கப்படுகிறது. இதனாலும், போர்ட்டால் இரத்த நாளத்தில் அமுத்தம் குறைந்து, வயிற்றுப்பகுதியில் நீர் சேர்வது குறைந்துவிடும். இரத்தக்கசிவுகளும் குறையும்.
வயிற்றில் நீர் கோப்பு, பெருவயிறு எனும் மகோதரம் இருந்தால் தொடர் சிகிச்சை முக்கியம்.கவனக்குறைவாக இருந்தால் பாதிக்கப்பட்டவர் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாவதுடன் மிகுந்த துன்பமாக உணர்வார்.
உற்றார் உறவினர்கள் பக்கபலமாக இருந்து உதவ வேண்டும்.

