ப்போதிருக்கும் பழங்களைக் கடித்துச் சாப்பிடும் போது ஒரு விதை கூட பற்களுக்கிடையில் சிக்கிக்கொள்வதில்லை. என்ன காரணம்? கடினமான விதைகளையும் மாவாக நசுக்கும் அளவிற்கு நமது பற்கள் அதீத பலம் பெற்றுவிட்டனவா அல்லது பற்களுக்கிடையில் சிக்காத அளவிற்கு நமது பற்கள் நெருக்கமடைந்துவிட்டனவா! இல்லை, இப்போதைய பழங்களில் விதைகளே இருப்பதில்லை.

விதை இல்லாத பழங்கள் நல்லதா…சத்து உள்ளதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

பன்னீர் திராட்சை சாப்பிடும்போது விதை பல்லில் தட்டுப்படும்.அதை உடனே திப்பிவிடுவோம்.திராட்சை விதையில் நிறைய சத்துகள் உள்ளன.அது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.திராட்சை விதைக்குள்ளிருக்கும் சத்து பிரித்து எடுக்கப்பட்டு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது விதையுள்ள திராட்சையை பார்ப்பது அபூர்வமாகிவிட்டது.

நாட்டுப் பப்பாளிப் பழத்தை வெட்டும் போதே அதனுள்ளிருந்து நூற்றுக்கணக்கான மிளகு போன்ற விதை முத்துகள் கொட்டும்! சமீப காலமாக ஹைபிரிட் பப்பாளிப் பழங்களே சந்தைகளில் அதிகம் உலா வருகின்றன. அவற்றை வெட்டி லென்ஸ் வைத்துப் பார்த்தால் கூட விதைகள் இல்லை. சுவையோ குறைவு! ஆனால் உடலுக்கு நன்மை செய்யும் பல நுண்ணூட்டங்கள் பப்பாளியில் இருக்கின்றன என பாரம்பரியமும் அறிவியலும் பேசுவதால் விதையில்லா பப்பாளிகளை சாப்பிட வேண்டியுள்ளது.

பூசணி விதை… மாதுளை விதை… தாமரை விதை என விதைகள் சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாகச் செயல்படுகின்றன. பல்வேறு சித்த மருந்து தயாரிப்புகளில் விதைகளின் சேர்மானம் நிச்சயம் உண்டு.

விதை உள்ள பழங்கள் மட்டுமே உடலுக்குத் தேவைப்படும் முழு ஆற்றலை வழங்குவதாக கொள்ளலாம்.இயற்கை பொதுவாகவே அதன் வம்சத்தை விரிவு படுத்த விதைகளுக்குள் அதன் மரபு அச்சை பதித்து வைத்திருக்கிறது.ஆனால் அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு நமது வசதிக்காக செயற்கையாக உருவாக்க முற்படும்போது வியாபார ரீதியாக பலன்கள் பெருகும் ஆனால் ஆரோக்கியம் கூடுமா?

இதற்கு நீண்ட நெடிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

விதையுள்ள இயற்கையான பழங்களைத் தேடிப்பிடியுங்கள். கடினமான விதைகளைக் கடித்துச் சாப்பிடுங்கள், பற்களுக்கும் பலம் கிடைக்கும். எப்படி மலருக்கு நறுமணமும் வண்ணமும் இருப்பது இயற்கையின் நியதியோ, பழச்சதைக்குள் விதைகள் இருப்பதே இயற்கையின் நியதி! அப்போது விதையில்லா பழங்கள்? இது உடலில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அறிய பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஒரு பக்கம் தங்கள் நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட விதைகளையே

நாடு முழுவதும் வியாபாரம் செய்ய திட்டமிடும் சில பன்னாட்டு நிறுவனங்கள்….

மறுபுறம் விதையில்லா பழங்களின் பரிமாற்றம்… இவற்றால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுமா… காலம் தான் பதில் சொல்லும்!… இப்போதைக்கு விதையில்லா பழங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்பு ஒன்றை அறுதியிட்டு கூறலாம்! அது என்னவெனில் விதைகளில் இருக்கும் நுண்ணூட்டப் பொருட்கள்,எதிர்-ஆக்ஸிகரணிப் பொருட்களின் மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்காமல் போகும்!