
செல்போன் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது.அதைப்போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக பலரும் மணிக்கணக்கில் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் எம்.என்.சங்கரிடம் இதுபற்றிக் கேட்டோம்…
“தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருகிறது. மேலும் காதில் இருந்து வெளிவர வேண்டிய மெழுகு போன்ற அழுக்கு வெளிவருவது நின்று விடுகிறது.இது காதில் வலியை ஏற்படுத்துவதோடு, அழுக்கை வெளியேற்றும் இயற்கையான திறனையும் இழக்க வைக்கிறது.
காதுக்குள் உண்டாகும் இரைச்சல் பிரச்சனையால் செவிப்பறை பாதிக்கும்.காதில் உள்ள நரம்புகள் சேதம் ஆகலாம்.
காது நரம்புகள் பாதிக்கப்படுவதால், மூளையும் பாதிக்கப்பட்டு தூக்கமின்மை பிரச்சனை வரலாம்.
ஒரு நாளைக்கு 30 நிமிடத்திற்கு மேல் ஹெட் போன் பயன்படுத்துவது நல்லதல்ல.மிகவும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் ஹெட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும்.அதேபோல் ஹெட் போன் பயன்படுத்தும்போது இடையிடையே கொஞ்சம் நேர இடைவெளி விட வேண்டும்.
காது கேளாதோர் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது, உங்கள் மன உறுதியில் தான் அடங்கி இருக்கிறது.
நவீன தொழில் நுட்ப மல்டிமீடியா சாதனங்கள் நம்மை அடிமையாகி நோயாளியாக்க நாம் அனுமதிக்கக் கூடாது” என்றார் டாக்டர் சங்கர்.
-ஷைலஜா.

