ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் அலங்கார பீடத்தில் இருப்பவர் அல்லர். மாநில மக்களின் சுக துக்கங்களிலும் பங்கு கொள்ளக் கூடியவர் என்பதை புதுச்சேரி ஆளுநரும், தமிழக ஆளுநரும் நிரூபித்து வருகிறார்கள். மாநிலத்தின் பல செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்கிறார்கள். ஆளும்கட்சியின் எதிரொலியாக மட்டுமே இருப்பதில்லை. ஆளுநர் உரை என்பதும் அவரால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே இருக்க வேண்டும்.

நிறைய பொறுப்புகள் அவரிடம் உள்ளன. கல்வியாளர் என்ற முறையில் மேதகு ஆளுநரிடம் வேண்டுவது யாதெனின், முக்கியமான நியமனங்களின்போது கண்ணோட்டமின்றி, சார்பில்லாமல், நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே.

சான்றாக துணை வேந்தர்கள் நியமனத்தில் மூன்று ஆண்டுகள் திறம்பட நிர்வகித்தவர்களை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவது சாலச்சிறந்தது. சிறப்பானது. ஒரு துணை வேந்தர் அவரது பதவிக் காலம் மூன்றாண்டுகளில் கற்றதை, உணர்ந்ததை, செயல்படுத்தும் கால கட்டத்தில் அவரை மாற்றி வேறு ஒருவரை நியமிப்பதில் ஆளுநர் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். திறமையும் நேர்மையும் மிக்கவர்களை திரும்பவும் அதே பணியில் அமர்த்துவது சிறப்புடையதாகும்.

நான் பேராசிரியராக பணியாற்றியபோது எனக்கு முதிர்ச்சியும், அனுபவமும் ஏற்பட்டு பக்குவம் பெற்ற நிலையில் வயது முதிர்ந்த காரணத்தினால் ஓய்வு கொடுத்துவிட்டனர். ஆனால், என் அனுபவத்தையும், அறிவையும் பல நிறுவனங்கள் கவுரவ ஆலோசகராக அமர்த்திப் பயன்பெற்றன. தற்போதைய சூழலில் 80 வயதுதான் முதுமையின் தொடக்கம். அனுபவம் பெற்றவர்களை இதன் காரணமாகவே மாநில ஆளுநராக நியமிக்கின்றனர், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர். வயதும் கால அளவும் கடல் அலைகளுக்கு தடைபோடுவது போலத்தான். முதிர்ச்சி வேறு வயோதிகம் வேறு என்பதை அறிதல் வேண்டும். முதிர்ச்சியை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

அன்புடன்
ஜி.ராஜமோகன்