மக்கள் மருத்துவர் கமலா ரதி – நேர்காணல்
டாக்டர் த.கமலா ரதி, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவர் மற்றும் மனநல நிபுணர். சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் ‘ராஜேஷ் ஹோமியோகேர் கிளினிக் மற்றும் பிளசன்ட் மைண்ட் மனநல ஆலோசனை மையம்’ நடத்தி வருகிறார். கைராசி மருத்துவர் என்றே இவரை பலரும் அழைக்கின்றனர். ஏழைகள் அதிலும் குறிப்பாக ஏழைப் பெண்களுக்கு கடந்த 15 வருடங்களாக இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார். மருந்துகளுக்கு மட்டும் மிகக் குறைந்த கட்டணம் வாங்குகிறார். குழந்தையின்மைக்கு ஹோமியோபதி சிகிச்சை மூலம் வெற்றி கண்ட இவர், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளை தீர்ப்பதில் தனித்துவம் பெற்றவர். குறிப்பாக பெண்களுக்கான ‘பிசிஓடி’ பிரச்னைகளை தீர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
இவர் ஒரு நல்ல எழுத்தாளரும்கூட. ஆரோக்கியம், உணவு முறைகள், மனநலம், நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை மருத்துவ மற்றும் மாத இதழ்களில் எழுதி வருகிறார். தன் கட்டுரைகளில் பல்வேறு நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம் குறித்து தெளிவாக விளக்குவதோடு, நோய்கள் தீர்வதற்கான மருந்துகளையும் ஒளிவு மறைவின்றி பரிந்துரைத்துள்ளார். இவரின் மருத்துவ சாதனைகள் மற்றும் சேவைகளுக்காக தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கிடம் இருந்து விருதும் பெற்றுள்ளார். மருத்துவம் மற்றும் மனநலம் தொடர்பான பல மாநாடுகளில் பயிற்சியும், பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இவரின் சிறப்பான, அக்கறையான சிகிச்சை காரணமாக, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநில மக்கள்கூட வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இவரிடம் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மக்கள் மருத்துவரான கமலாரதியை ஹெல்த் அண்ட் பியூட்டி இதழுக்காக சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து..

எது மாதிரியான பிரச்னைகளுக்கு ஹோமியோபதி சிகிச்சையை நாடி வருகின்றனர்?
ஹோமியோபதியை பொறுத்தவரையில் தலையில் இருந்து பாதம் வரை நிறைய நோய்களுக்கு மருந்தும் இருக்கிறது குணமும் இருக்கிறது. ஆஸ்துமா, தும்மல், சைனசைட்டிஸ் போன்ற அலர்ஜி நோய்களுக்கும், மூலம், டான்சிலைட்டிஸ், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், சிறுநீரக கற்கள், கண்புரை நோய், மூக்கில் சதை வளர்ச்சி போன்ற அறுவை சிகிச்சை நோய்களுக்கும், ஆர்த்ரைட்டிஸ், ஸ்பான்டைலைடிஸ் போன்ற எலும்பு, மூட்டு சிகிச்சைகளுக்கும், தோல் நோய்கள், பொடுகு, முடி கொட்டுதல் போன்ற சரும பிரச்னைகளுக்கும் மற்றும் அதிதீவிர குறுகிய நோய்களுக்கும், நாள்பட்ட நோய்களுக்கும் ஹோமியோபதியில் சிகிச்சை இருப்பதால் மக்கள் அதை நாடி வருகின்றனர். மேலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுக்கும் ஹோமியோபதியை மக்கள் நாடி வருகின்றனர்.

ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள் என்ன?
ஹோமியோபதி, டாக்டர் சாமுவேல் ஹானிமேன் என்ற ஆங்கில மருத்துவரால் 1796ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். உலகில் இரண்டாவது மிகப் பெரிய மருத்துவ முறை ஹோமியோபதி. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம். உலகெங்கும் 900 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹோமியோபதி சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகிறார்கள். 85க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹோமியோபதி மருத்துவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருத்துவம் ஹோமியோபதி. இதனால் சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் கூட இந்த சிகிச்சையைப் பெற ஆர்வம் காட்டுகின்றனர். அதிதீவிர குறுகிய நோய்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும். அறுவை சிகிச்சை நோய்களுக்கும் ஹோமியோபதி மருந்துகள் மூலம் தீர்வு இருக்கிறது. மருந்துகள் உட்கொள்வதில் எந்த சிரமும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருத்துவம் இது. இப்படி.. ஹோமியோபதியின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
உங்களது படிப்பு குறித்து சொல்லுங்கள்..
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ‘ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவ படிப்பை (BHMS) ஐந்தரை வருடம் படித்து முடித்தேன். கல்லூரி மருத்துவமனையில் 6 மாதம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 6 மாதம் என ஒரு வருடம் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்தேன். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பயிற்சி பெற்றேன். பயிற்சி மருத்துவராக இருக்கும்போதே டாக்டர் செம்பியன் என்பவரிடம் 6 மாதம் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்தேன். பின்னர் ஹோமியோபதி சிகிச்சை வழங்க ஆரம்பித்தேன். பின்னர் பட்ட மேற்படிப்பில் எம்எஸ்சி கவுன்சலிங் அண்ட் சைக்கோதெரபி படித்து முடித்தேன். சென்னை முட்டுக்காட்டில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பேராசிரியர் டாக்டர் நீரதா சந்திரமோகனிடமும் இந்த துறையில் பயிற்சி பெற்றேன்.
ஆணிக்கால், மூலம், தோல் நோய்களுக்கும் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதி சிறந்ததா?
ஆம்! ஆணிக்கால், மூலம் போன்றவைகளை ஆங்கில மருத்துவத்தில் அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும். அவ்வாறு செய்த பின்னரும் சிலருக்கு மீண்டும் இந்நோய் திரும்புவதாக கூறுகிறார்கள். ஹோமியோபதி சிகிச்சை மூலம் இந்நோய்களை வேரோடு களைய முடியும்.
தோல் நோய்கள், நாள்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் நிவாரணம் கிடைத்தாலும் முழு குணம் கிடைப்பதில்லை. ஹோமியோபதியில் இக்சீமா, பூஞ்சைக் காளான் தொற்று, லிக்கன் பிளானஸ், அலோபேசியா, படர் தாமரை போன்ற பல தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்புண், எலும்பு மூட்டு பிரச்னை, முடக்குவாதம், சைனஸ், நாள்பட்ட இருமல், ஆறாத புண்கள் போன்ற பல நாள்பட்ட நோய்களுக்கும் விரைவில் நிவாரணமும் முழு குணமும் கிடைக்கும். அவரவர் நோய் தன்மையைப் பொறுத்து 6ல் இருந்து 8 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்நோய்களில் இருந்து பூரண குணமடையலாம்.
குழந்தையின்மை பிரச்னைக்கும் ஹோமியோபதியில் தீர்வு இருக்கிறதா?
குழந்தையின்மை பிரச்னைக்கு மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு, நீர்க்கட்டிகள் (PCOD), வேரிகோசில், விந்தணுக்கள் குறைபாடு, பூச்சிக் கொல்லி மருந்துகள் என்று பல காரணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் (PESTICIDES) கலந்த உணவுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் விந்தணுக்கள் குறைவு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு, சினைப்பை நீர்க்கட்டிகள், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றால் ஏற்படும் குழந்தையின்மை பிரச்னையை சரி செய்ய முடியும். பாதுகாப்பான மருந்துகள் மூலம் குழந்தையின்மை பிரச்னை உள்ளவர்களின் நோய்களை சரிசெய்து, இயற்கையான முறையில் கருத்தரித்து, குழந்தைப்பேறு அடைய உதவ முடியும். இதற்கு பக்கவிளைவுகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள், தாய் திரவங்கள் (பல்சாட்டிலா, கல்கேரியா கார்ப், நேட்ரம் மூர், டாமியானா, டாலிகாஸ், ஆக்னஸ் கேல்டஸ், கலாடியம்..) உள்ளன. இவ்வாறான மருந்துகள் மூலம் ஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவையும் சரி செய்ய முடியும். விந்தணுக்கள் எண்ணிக்கையை கூட்டவும், வீரியமிக்க விந்தணுக்கள், கருமுட்டைகள் வெளிவரவும் உதவ முடியும். இதனால், ஹோமியோபதி மருந்துகள் மூலம், குழந்தை இல்லாத தம்பதியருக்கு இயற்கை முறை கருத்தரிப்பு சாத்தியமாகிறது. இதுவரை எனது ஹோமியோபதி சிகிச்சையின் மூலம் பதினைந்து தம்பதிகள் பலனடைந்திருக்கிறார்கள்.
நல்ல ஹோமியோபதி நிபுணரை எப்படி அடையாளம் காண்பது?
முதலில் அவர் ஹோமியோபதி மருத்துவத்தில் டாக்டர் பட்டம் (BHMS) பெற்றிருக்க வேண்டும். அரசு பதிவு எண் பெற்ற மருத்துவராக இருத்தல் வேண்டும். ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமேன் கூற்றுப்படி, ‘‘நல்ல மருத்துவர் என்பவர் நோயாளிகளை கூர்ந்து கவனித்து, அவரது முழுக் குறிகளையும் கேட்டறிந்து (நாள்பட்ட மற்றும் பெரிய நோய்களுக்கு), எந்தவித பிறழ்ச்சியும் இல்லாமல், நேர்மையாக மருந்துகளை தேர்வு நோயாளிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவரது ஆரோக்கியத்தை முழுமையாகவும், விரைவாகவும் மீட்டுத் தருபவராகவும் இருத்தல் வேண்டும்’’ என்பதே.
பொதுவாக நல்ல மருத்துவர் என்பவர் திறமை வாய்ந்தவராகவும், அக்கறை, கனிவு, பொறுமை போன்ற குணநலன்கள் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
மனநல சிகிச்சையில் ஹோமியோவின் பங்கு..
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ‘‘நலம் என்பது உடல்நலம், மனநலம் மற்றும் சமூக நலத்தையும் சார்ந்தது’’ என்பதே. எனவே ஒருவர் நலமாக இருக்க வேண்டுமானால் உடல் நலத்தோடு, மனநலத்தையும், சமூக நலத்தையும் பேண வேண்டும். உடல் சம்பந்தமான நோய்களுக்கு ஹோமியோபதியில் நல்ல சிகிச்சை உள்ளது போல், மனநல பிரச்னைகளுக்கும், மனநோய்களுக்கும் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல மருந்துகள் உள்ளன. அதீத கோபம், மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோர்வு, பரீட்சை பயம், மேடை பயம் போன்ற மனநல பிரச்னைகளுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தை மக்கள் நாடி வருகின்றனர்.
மாணவர்கள் படிப்பில் கவனக்குவிப்பு செலுத்தவும், நினைவாற்றலைக் கூட்டவும் ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன. ADHD, AUTISM, ADD, OCD, Anorexia, Behaviour Problems போன்ற சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருத்தினரின் மனநல பாதிப்புகளையும் ஹோமியோபதி மருந்துகள் மூலம் குறைக்க, சரி செய்ய முடியும்.
என்னென்ன பிரச்னைகளுக்கு கவுன்சலிங் வழங்குகிறீர்கள்?
அதீத கோபம், மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம், பயம் போன்ற பல மனநல பிரச்னைகளுக்கு கவுன்சலிங் வழங்குகிறேன். கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்களுக்கும் அவர்களின் கவலையை குறைக்கவும், மன ஆறுதல் அளிக்கவும் கவுன்சலிங் வழங்குகிறேன். தம்பதியினருக்கான கவுன்சலிங் மூலம் பிரிய இருந்த தம்பதிகளை சேர்த்து வைத்திருக்கிறேன்.
பள்ளி மாணவர்களின் நடத்தைப் பிரச்னைகளுக்கும், படிப்பு சுமை, பரீட்சை மற்றும் போட்டியால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், மனபயம், பதற்றம் மற்றும் மேடை பயம், பரீட்சை பயம் போக்கவும் கவுன்சலிங் வழங்குகிறேன். தற்போது மாணவர்கள் பலர் கைப்பேசியில் வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையாகி உள்ளார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டு வரவும் ஆலோசனைகள் வழங்குகிறேன்.
வாழ்க்கையில் நீங்கள் நன்றி சொல்ல விரும்புபவர்கள்..
நான் மருத்துவராவதற்கு முதற்காரணமாகவும், எனக்கு நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுத்த என் தாய், தந்தைக்கு முதல் நன்றி. என் தந்தை உயிரோடு இருந்தபோது கடைசி வரையும், இறந்த பிறகும் என் மருத்துவ படிப்புக்காக (இன்சூரன்ஸ் மற்றும் பிஎஃப் பணம் மூலம்) பண உதவி புரிந்தார். திருமணத்திற்குப் பிறகும் என் மருத்துவப் படிப்பு தொடர உறுதுணையாக இருந்த என் துணைவருக்கும் நன்றி.
நான் மருத்துவராக வேண்டும் என்பதில் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஆசை. சில கட்ஆஃப் மதிப்பெண் குறைவால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. ஹோமியோபதி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பும்தான் கிடைத்தது. அப்போது என்னை ஹோமியோபதி மருத்துவத்தை தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்கிய எங்கள் ஊர் மருத்துவர் மற்றும் உறவினர் டாக்டர் இரா.மோனதாஸ் அவர்களுக்கும் என் நன்றி. என் எழுத்துக்களுக்கு ஊக்கமும், என் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாகவும் இருந்து வரும் என் சைக்காலஜி பேராசிரியர் டாக்டர் ஜி.ராஜமோகன் அவர்களுக்கும் நன்றி.
மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறதே..
மதிப்பெண் குறைவு, தான் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுக்க முடியாமை அல்லது இடம் கிடைக்காமை, பரீட்சையில் தோல்வி போன்ற பல காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மனஅழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றும். எனவே பெற்றோர்களும், உறவினர்களும் மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என தெரிந்து கொண்டு அவர்களை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டும். அவ்வாறு செய்தால் மன அழுத்தத்தில் இருந்தும், தற்கொலை எண்ணத்தில் இருந்தும் விடுபடலாம்.
பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிக்கக்கூடாது. பிள்ளைகள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை கொடுங்கள். மாணவர்கள், தாங்கள் விரும்பிய துறை கிடைக்கவில்லையெனில் கிடைத்த துறையில் உங்கள் திறமையைக் காட்டி வெற்றி பெற வேண்டும்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?
மருத்துவர் ஆக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பின் முடிவில் எனக்கு திருமணம் ஆனது. ஆனாலும், என் கணவர் அனுமதியுடன் என் மருத்துவப் படிப்பை தொடர்ந்தேன். அப்போது அவர் வடமாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். அதனால் திருமணமான புதிதில் இருந்தே 4 வருடங்கள் இருவரும் பிரிந்து இருந்துதான் படிக்க வேண்டி இருந்தது. அந்த 4 வருட காலத்தில் நெருங்கிய உறவுகளின் இழப்பு, தடைகள் மற்றும் சோதனைகளையும் சந்திக்க நேரிட்டது. அவற்றையெல்லாம் தாண்டித்தான் நான் மருத்துவ படிப்பை முடித்தேன். பின்னர் பட்டமேற்படிப்பையும் முடித்தேன். கிளினிக் மற்றும் கவுன்சிலிங் சென்டர் நடத்தி சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.
கல்வியும், கடின உழைப்பும் பெண்களை உயர்த்தும். கல்வி கற்க வாய்ப்பில்லாத பெண்கள் கைத்தொழில் கற்றுக் கொண்டு அதில் கைதேர்ந்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியும். திறமை, விடாமுயற்சி ஆகியவை வாழ்க்கையில் முன்னேற உதவும். உங்களுக்கு என்று சில குறிக்கோள்களை வகுத்துக் கொள்ளுங்கள். அவற்றை அடைய விடாமுயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?
தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் மீது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும், பல இடங்களில் மக்கள் ஹோமியோபதி பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, கேரளாவைப் போல இங்கும் தமிழக அரசு ஹோமியோபதி மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதி மருத்துவர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஹோமியோபதி சிகிச்சையால் ஏழை, எளியோர் உள்பட பலதரப்பட்ட மக்களும் பயனடைவார்கள். ஐந்தரை வருடம் படித்த ஹோமியோபதி மருத்துவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.
தகவல் தொடர்புக்கு
டாக்டர் த. கமலா ரதி BHMS, M.Sc.,
ஹோமியோபதி மருத்துவர்
ராஜேஷ் ஹோமியோ கேர் கிளினிக் மற்றும் பிளசன்ட் மைன்ட் மனநல ஆலோசனை மையம்
புதுப்பட்டினம், பஜார் தெரு, MMS COMPLEX,
கல்பாக்கம் 603 102.
போன்:9789270260, 9445161182
சந்திப்பு:குணா
படங்கள்:பிரவீன்குமார்

